Tuesday 3 July 2012

ஞானம் பெற நல்வழிகாட்டும் குரு பூர்ணிமா இன்று.. வியாச பூஜை..!!!!

வேதத்துக்கு ஒரு வியாசர்: சாதுர்மாஸ்யம் எனப்படும் துறவிகளுக்கான விரத காலத்தின் துவக்கத்தில், வேதங்களைத் தொகுத்தவரான வியாசருக்கு பூஜை நடத்துவது வழக்கம். வியாசரின் பிறப்பைப் பற்றிய கதை வித்தியாசமானது. மீன் ஒன்றின் வயிற்றில் பிறந்தவள் சத்தியவதி. இவளை மீனவர் தலைவர் ஒருவர் வளர்த்து வந்தார். தந்தைக்கு உதவியாக ஆற்றைக் கடக்க பரிசல் ஓட்டுவது, மீன்களை உலர்த்துவது ஆகிய பணிகளைச் செய்தாள். ஒருமுறை, பராசரர் என்ற முனிவர் ஆற்றைக் கடக்க பரிசலில் ஏறினார். 

அந்நேரத்தில், உலகம் அதுவரை காணாத உத்தமமான நேரம் வந்தது. அந்த சமயத்தில், ஒரு குழந்தை பிறக்குமானால், அது, உலகத்துக்கே நன்மை விளைவிக்கும் பெருஞ்செயல்களைச் செய்யும் என்று பராசரரின் ஞான திருஷ்டிக்குப்பட்டது. எனவே, படகோட்டிய சத்தியவதியிடம் தன் விருப்பத்தைச் சொன்னார். முனிவரே... நான் கன்னிப் பெண். என்னை ஒருவருக்கு கன்னிகாதானம் செய்து கொடுப்பது என் தந்தையின் கடமை; அதனால், தங்களுக்கு உடன்பட முடியாது... என்றாள்.

அவளிடம், இந்தக் குழந்தையை பெற்றதுமே நீ கன்னித்தன்மை அடைந்து விடுவாய். என் தவ பலத்தால் அது முடியும்... என்று முனிவர் சொல்லவே, உலக நன்மை கருதி அவள் சம்மதித்தாள்; அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது, விஷ்ணுவின் அவதாரம் என்பதால், பிறந்த சில நிமிடங்களிலேயே, ஏழு வயது பாலகனாகி விட்டது. அவனுக்கு, கிருஷ்ண துவைபாயனர் என்ற பெயர் வைக்கப்பட்டது. வியாசர் தன் தாயிடம், அம்மா... நான் உலக நலன் கருதி வந்தவன். வேதங்களைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. வேதம் வாழ்ந்தால் தான் உலகம் வாழும். அவற்றை பிரிக்கும் பணியைச் செய்யப் போகிறேன். எனவே, உன்னோடு வாழ இயலாது. நீ எப்போதெல்லாம் நினைக்கிறாயோ, அப்போதெல்லாம் உன் முன் வருவேன்... என்று உறுதிமொழி அளித்து, அங்கிருந்து தன் தந்தையுடன் சென்று விட்டார். வியாசர் என்பது பெயரல்ல; அது ஒரு பதவி. ஜோதிடம் சொல்பவர்களை, ஜோதிடர் என்ற பொதுப் பெயரால் அழைப்பது போல, யாரெல்லாம் வேதங்களை பகுத்துப் பிரிக்கின்றனரோ அவர்கள் அனைவருமே வியாசர் தான். அந்தப் பதவியை அதற்கு முன் பலர் வகித்திருந்தனர். ஆனால், பராசர முனிவரின் மகனான வியாசரே அதில் முக்கியப் பங்கு வகித்தார். வேதங்கள் கடல் போன்றவை என்பதால் அவற்றை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்று நான்காகப் பிரித்து, அவற்றை இன்னின்ன பிரிவினர் படிக்க வேண்டும் என்ற புதிய பாதையை வகுத்தார்.

சாதாரண மக்களுக்கு வேதம் புரியாது என்பதாலும், கலியுகத்தில் வேதம் அழியும் நிலைக்கு வந்துவிடும் என்பதாலும், அவற்றை மக்கள் மதிக்க மாட்டார்கள் என்பதாலும், வேதத்தின் சாரமான தர்மத்தின் பெருமையைப் பறைசாற்றும், மகாபாரதம் எனும் இதிகாசத்தைப் படைத்தார். இது தவிர, ஸ்கந்த புராணம், விஷ்ணு புராணம், பிரம்ம புராணம், நாரத புராணம், கருட புராணம் உள்ளிட்ட, 18 புராணங்களையும் எழுதினார். இவற்றின் மூலம் இன்றும் நாம் வேதத்தின் சாரத்தை உணர்ந்து, தெய்வத்துக்கு பயந்து நடக்க வேண்டும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டுள்ளோம். நாட்டில் இன்றும் பல நன்மைகள் நடக்கிறது என்றால், அதற்கு காரணம், வியாசர் எழுதிய நூல்களைப் படித்து, அவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துக்கு ஏற்றாற்போல் நடந்து கொள்வதால் தான். மகாபாரதத்தில் ஒரு பாத்திரமாகவும் வியாசர் வருகிறார். தர்மர் நாடிழந்து, துன்பப்பட்டு, நம்பிக்கை இழந்திருந்த காலத்தில், அவரையும் விட கஷ்டப்பட்ட நளதமயந்தி, அரிச்சந்திரன் கதைகளை எடுத்துச் சொல்லி நம்பிக்கையூட்டினார் வியாசர். சத்தியவான் சாவித்திரியின் கதையை எடுத்துச் சொல்லி, ஒரு பெண்ணே எமனை எதிர்த்து ஜெயித்திருக்கும் போது, உன்னால் கவுரவர்களை வெல்ல முடியாதா? என்று கேட்டார். துன்பங்களை எதிர்த்து வெல்ல நமக்கு நம்பிக்கையூட்டும் கருத்துக்களை அளித்திருக்கும் வியாசரை, நாம் வியாசபூஜை நன்னாளில் நினைவு கூர்வோம். இவ்வளவு மகத்துவங்களுக்கும் சொந்தகாரரான வியாச பகவானுக்கு, மூன்று மத ஆச்சார்யர்கள் செய்யும் பூஜையே வியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரதமாகும். அற்புதமான இந்த விரதத்தை நான்கு மாதங்கள் செய்ய வேண்டும். ஆனாலும்.... ஒரு பக்ஷத்தை ஒரு மாதமாகக் கணக்கில் கொண்டு, நான்கு பக்ஷங்களாக அதாவது இரண்டு மாதங்கள் விரதம் அனுஷ்டிப்பது வழக்கமாகிவிட்டது.

No comments:

Post a Comment