Thursday 26 July 2012

அகநானூறு பாடல் » தோழி கூற்று(2)

நூல் : அகநானூறு_2
பகுப்பு : களிற்றியானை நிரை
பாடல் : தோழி கூற்று
திணை: குறிஞ்சி 
பாடியவர்: கபிலர் 

குறிப்பு: யாரும் அறியாமல் பகலில் தினைப் புனத்தில் தலைவியை சந்தித்து வந்த தலைவனிடம் தினை விளைந்து விட்டதால், இனி காவலுக்குத் தலைவி வரமாட்டாள், எனக் கூறித் திருமணத்திற்குத் தோழி தூண்டுவதாக அமைந்துள்ள அற்புதமான செம்மொழிப் பாடல்.

"கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலாவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
இவளும், இனையள் ஆயின், தந்தை
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே".

விளக்கம்: களவில் தலைமக்களாகிய தலைவனும் தலைவியும் கலந்தனர். இருவரின் இணையிலா நட்பு வளர்மதியாய் வளர்ந்தது. தகப்பனது தினை புனத்தின் விளைச்சலை காக்கைகள் குருவிகள் கொத்தாது, பகற்பொழுதில் தலைவி காவல் காத்து நிற்கிறாள். தலைவனது சந்திப்பிற்கு தினைப்புனம் துணையாகியது. பகலிலேயும் இரவிலேயும் ஒருவரை ஒருவர் கூடி மகிழ்கின்றனர். இவர்களது காதல் களத்திற்கு துணையாக நிற்கிறாள் தோழி. நாட்கள் நகர்கின்றன.

ஒரு பகற் பொழுதில் தலைவியைக் காண தலைவன் தினைப் புனத்திற்கு ஓடோடி வருகின்றான். நெஞ்சினிலே ஓவியமாய் வடித்து வைத்திருந்த தலைவியை அவனது கண்கள் தேடுகின்றன. தினைப் புனைத்தின் ஓரத்தில் ஒயிலாக எதிர் திசை நோக்கிப் பார்த்தவாறு
பெண்ணொருத்தி நிற்கக் கண்டு அவளருகே ஆவலாய் விரைகின்றான். சந்தடி கேட்டுத் திரும்பிய பெண் தன் தலைவியின் தோழியென உணர்கின்றான். தோழிக்கு, தலைவனது தேடல் புரிகிறது. "என் தலைவி எங்கே?" என்ற வினா எழுப்பு முன்னே புரிந்து கொண்ட தோழி பேசுகிறாள்.

"எங்கள் மலை நாட்டிற்குரியவனே, இங்கே வாழையும் பலாவும் பழுத்துக் கனிந்தன. அப்பழங்களிலேயிருந்து தேன் வழிந்தோடிப் பாறைச் சுனையில் நிறைந்தது. காட்டிலிலுள்ள பல காய்களையும் கனிகளையும் வயிறு புடைக்கத் தின்றதாலே ஏற்பட்ட வறட்சியைப் போக்கிக் கொள்ள ஓடி வந்தது ஓர் ஆண் குரங்கு. பாறைச் சுனையில் குளமாய்த் தேங்கியிருந்த தேனை நீர் என்றெண்ணிக் குடித்தது. மது ஒத்த தேனைக் குடித்த ஆண் குரங்கு மயங்கி மரமேற முடியாமல், மலைச்சாரலில் இயற்கையாய் அமையப் பெற்ற மலர்ப் படுக்கையில் கண்ணுங்குகிறது. இவ்வாறு விலங்கினங்கூட எதிர்பாராத இன்பத்தைத் தந்துதவும் மலைநாட்டின் தலைவனே" என ஒன்பது வரிகளிலே மலைநாட்டின் பேரழகைப் புலப்படுத்துகின்ற வகையில் தலைவியின் கூற்றாய் பதிவு செய்கிறார் கபிலர்.

இந்த அளவிற்குத் தோழி பேசியவள் தலைவனை நோக்கி திடுமென "குறித்த இன்பம் நினக் எவன்அரிய" என ஒரு வினாவை எழுப்புகிறாள். "எவன்" என்பது "என்ன?" எனும் பொருளைத் தரும். ஓர் அற்புதமான உவமையாலே தலைவனைத் தேற்றுவது அற்புதம். தலைவியைக் காணாது தவிக்கும் தலைவன், தலைவியின் இன்பம் இனி கைக் கூடாமல் போய் விடுமோ என தலைவன் நினைத்து துவண்டு விடுவானோ என்று நினைத்த தோழி, தலைவனைத் தேற்றுகிற நயம் நம் செம்மொழித் திறத்திற்கோர் எடுத்துக்காட்டு.

"தலைவா! நின் மலைநாட்டு விலங்குகளும் எதிர்பாராது இன்பத்தைப் பெறுகின்ற பேற்றினைப் பெற்றிருக்கின்ற போது, இம்மலை நாட்டுத் தலைவனாகிய உனக்குக் "குறித்த இன்பம்" எவ்வாறு கைகூடாமல் இருக்கும். எளிமையாகக் கிடைத்தற்குரியதுதான்" என்று பக்குவமாய் எடுத்துக் கூறுகின்ற பாங்கு மிக அற்புதம்.

மயக்கம் தெளிந்த தலைவன் தலைவியைக் காணாமைக்குக் காரணம் யாதோ? எனத் தலைவனையே சிந்திக்க வைத்து விடுகிறது தோழியின் கூற்று. இருந்தாலும் தலைவன் "எங்கே தன்னை ஒருவேளை தலைவி வெறுத்து விட்டாளோ" என சிந்தித்துவிடுவானோ என ஐயுற்ற தோழி, அடுத்த நொடியிலேயே "வெறுத்த ஏஏர் வேய்புரை பணைத்தோள் நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு இவளும் இணையன்" எனப் பேசுகிறாள். தலைவியின் உருவ அழகு அரை வரியில் அடங்கிவிடுகிறது. "வெறுத்த ஏஏர்" என்பதே அது. "செறிந்த அழகு" என்பது இதன் பொருள். "வெறு" என்ற சொல் "செறிவு" என்னும் பொருளுடையது. இன்று இச்சொல் "வெறுத்தல்" என வேறு பொருளைத் தருகிறது. சொற்களின் பொருள் காலத்தால் மாறுபடுவதற்கு இது ஓர் உதாரணம். இது பேச்சு மொழிகளில் காணப்படுகின்ற இயல்பு.

அடுத்து "நிறைந்த அழகு" என்பதனை நயமாகவும் நாகரிகமாகவும் "வேய்புரை பனைத்தோள்" என தோளின் உருண்டு திரண்டு மென்மையாமைந்த பெண் நலம் எடுத்துப் பேசப்படுகிறது. இத்தகை பேரழகு பொருந்திய பெருமாட்டியின் உள்ளம், தலைவனை எண்ணி எண்ணிக் கனல்பட்ட மெழுகாய் உருகி, அவள் வாடும் திசை நோக்கி ஓடுகிறது என்பதனை, "நின்மாட்டு இவளும் இணையள்" என்ற அழகான தொடரால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தோழியின் வாயிலாக சொல்லக்கேட்ட மூன்று சொற்களும், தன்னையே நினைந்து கரைந்துருகும் தலைவியினிடத்துப் பாகாய் உருகுமாறு தலைவனைச் செய்துவிடுகிறது. தோழி முன்னரே "நிறுப்ப நில்லா நெஞ்சமொடு" என்றாள். இதுவோ களவியல்- மற்ற இருவருக்கும் உள்ள நெஞ்சத் தொடர்பினை நெஞ்சக் கலப்பினை, கசிந்துருகும் காதலை அறியக் கூடாத காலம்.

அத்தருணத்தில் தலைவனைக் காண இயலாத நிலையில், தன்னந்தனியே வருந்தும் தலைவி, தன் நெகிழ்ந்த, சோர்வுற்ற, வாடிய, உடலாலும் புலம்பும் உள்ளத்தாலும், தன்னைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாதே என எண்ணுகிறாள். இதற்காகத் தன்னைவிட்டுத் தலைவனைத் தேடித்தேடி ஓடி நிற்கும் தன் நெஞ்சினைத் தன்வயப்படுத்துவதற்கு முயன்று முயன்று முடியாதமையாலே துடித்துத் துவண்டுவிட, அவளின் துடிப்பையும் துயரத்தையும் துடைப்பது ஒன்றே தன் கடமையெனறும், அதன்வழி "களவையும்" காத்தவளாவேன் என்பதனை உள்ளடக்கியே, தோழி "இவளும் இணையள்" எனக் கூறுகின்றாள்.

தற்போது தலைவியோ வீட்டில் இருத்தப்பட்டாள். அவள் பகற்பொழுதில் வெளியே வருவது இயலாது. அவள் வாழும் வீடோ கட்டுக்காவல் நிறைந்தது. எனவே இரவில் காவலர் அறியாவண்ணம் வரமுடிந்தால் வருக என நயமாய் உரைப்பதைப் பாருங்கள்-.
".... தந்தை
அருங்கடிக் காவலர் கோர்பதன்ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை" என்பது பாடல் வரிகள். தலைவியைக் காணலாம் எனும் நம்பிக்கை தலைவனின் நெஞ்சில் வேரூன்றியது. இவ்வேளையை எதிர்பார்த்த தோழி, வேறு ஓர் எண்ணத்திற்கு வித்திடுகின்றாள். தலைவா களவு போதும், இனி திருமணம்தான் உகந்தது உனக்கு. உலகறிய ஊரறிய திருமணம் செய்து கொண்டால், இதுபோன்று மறைந்து மறைந்து நின்று தயங்க வேண்டியதில்லை. பெருமுயற்சி கொண்டு காணக் கால்கடுக்க தவம் செய்ய வேண்டியதில்லை என நயமாக நல்லறம் காத்து வாழும் இல்லறத்திற்கு கோடிட்டுக் காட்டுகின்ற தோழியின் அறிவுரை தமிழர் பண்பாட்டின் முத்தாய்ப்பாய் உள்ளது.

"திங்களும் நிலாவும் நிரைமதியாய் ஊர் கோள் கொண்டது" என இறுதியாய்க் கூறுகிறாள். மூவேங்கை மலர்ந்ததால் தினை பற்றி அறுக்கப்படும். தினைப் புனங்காத்த மகளிர் வீட்டிற்கு அனுப்பப்படுவர். எனவே இனி தலைவி வரமாட்டாள். நீ அவளைக் காண்பது அரிது. எதிர்வரும் நிறைமதிநாள் திருமணத்திற்குகந்த நன்னாள். அந்நாளில் பிறர் வந்தும் பெண் கேட்கக் கூடும். எனவே காலங்கடத்தாது நீ வந்து திருமண முயற்சியை மேற்கொள்" என இறுதியாக தலைவனுக்கு வேண்டுகோள் வைக்கிறாள் தலைவி. காதலும், களவும், கைக்கிளையும் நிறைந்து விரியும் நம் செம்மொழிக் காப்பியமான அகத்துறை இலக்கியங்களின் மையக்கரு தமிழரின் உயர்நெறிக் கொள்கைகளையே கொண்டிருக்கிறது என்பதை இப்பாடலில் பார்க்க முடிகிறது


No comments:

Post a Comment