Thursday, 7 June 2012

வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப் போல...

மற்றவர்களிடம் பாராட்டுப் பெறும்போது பெரும்பாலானவர்கள் இந்த சொற்றொடரை பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறோம். வயது முதிர்ந்த ஒருவரிடம் பாராட்டுப் பெறுவது என்பதாக பெரும்பாலானவர்கள் கருதிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கான கதையைப் பார்ப்போம்.

விசுவாமித்திரரின் இயற்பெயர் கௌசிகன். ஒரு நாட்டிற்கு அரசனாக இருந்தார். அக்காலத்தில் மன்னர்கள் வேட்டையாடுவதைதான் பொழுது போக்காகவும் வீரமாகவும் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு நாள் கௌசிக மன்னர் காட்டிற்கு தன் படைகளுடன் வேட்டையாடச் சென்றார்.

வேட்டையாடி முடித்த களைப்பில் இருந்தனர் அனைவரும். அவர்களுக்கு அதே காட்டில் வசித்த வசிஷ்ட முனிவர் அவர்களின் களைப்பை போக்க எண்ணி அனைவரையும் அழைத்து விருந்து படைத்தார். அந்த விருந்தில் மயங்கினார் கௌசிக மன்னர்.


இவரோ காட்டில் தவம் இருப்பவர். இவரிடம் எதுவுமே இல்லாத போது இத்தனைப் பேருக்கு இவ்வளவு விரைவாக அருமையாக எப்படி சமைத்துப் போட முடிந்தது... என்று எண்ணினார். தன் எண்ணத்தை முனிவரிடமும் கேட்டார்.அதற்கு வசிஷ்டர்,` என்னிடம் நந்தினி என்ற அபூர்வ பசு ஒன்று இருக்கிறது... அது நினைத்தவுடன் அள்ளித் தரும் சக்திக் கொண்டது...' என்றார்.


உடனே கௌசிகர் `நீங்களோ முனிவர். உங்களுக்கு எதுக்கு அந்த பசு? எனக்குக் கொடுத்து விடுங்கள்?' என்றார்.


முனிவர் ஒத்துக்கொள்ளவில்லை. கௌசிகனுக்கு தான் மன்னர் என்ற நினைப்பும், தன்னிடம் படை இருக்கிறது என்ற திமிரும் சேர்ந்து கொள்ள, வாளை உருவிக் கொண்டு அவரிடம் சண்டைக்குப் போனார்.வசிஷ்டர் பல வரங்கள் வாங்கியவர். மந்திரங்கள் அறிந்தவர். ஆகையால் கௌசிகரின் வாளில் இருந்து தப்பியதோடு, அவரை தோற்றகடிக்கவும் செய்தார்.தோற்ற கௌசிகருக்கு உள்ளுக்குள் புகைந்தது. `தன்னிடம் நாடு... நகரம்.. படை பலம் எல்லாம் இருக்கிறது? என்ன பயன்? ஒரு முனிவனின் தவத்துக்கு முன்னால் எல்லாமே வெறும் பூஜ்ஜியம் என்று உணர்ந்தார். இனி நானும் தவம் இருந்து முனிவன் ஆவேன்'... என்று வைராக்கியம் கொண்டு காட்டிலேயே தவம் இருக்கத் தொடங்கினார்.இப்படி பல காலம் தவம் இருந்ததின் பயனாக கௌசிக மன்னர், விசுவாமித்திரர் என்ற முனிவர் ஆனார்.இருந்தாலும் விசுவாமித்திரரின் வைராக்கியம் அத்துடன் அடங்கவில்லை. வசிஷ்டரை விட பெரிய ஆளாக வரவேண்டும் என்ற தீ மனதில் எரிந்து கொண்டே இருந்தது. அதனால் மேலும் கடுமையாக தவம் இருக்கத் தொடங்கினார். அதனால் அவருக்கு ராஜரிஷி என்ற பட்டம் கிடைத்தது. ராஜரிஷி என்றால் முனிவர்களுக்கெல்லாம் மன்னன் என்று பொருள்.
அப்போதும் அடங்கவில்லை விசுவாமித்திரரின் ஆசை. அவர் பிரம்ம ரிஷி பட்டம் வாங்க விரும்பினார். அதனால் தவத்தை தொடர்ந்தார்.தேவர்கள் எல்லாம் பயந்தார்கள். விசுவாமித்திரர் ஏற்கனவே கோபமும் பொறாமை குணமும் கொண்டவர். இதில் பிரம்ம ரிஷிக்கான தகுதியை அடைந்து விட்டால் அவரை யாராலும் வெல்ல முடியாது என்று பயந்து அவரின் தவத்தைக் குலைக்க தேவலோகப் பெண்ணான மேனகையை அனுப்பி வைத்தனர்.அவளது அழகில் முனிவனும் மயங்கினான். இருவருக்கும் ஒரு பெண் குழந்தைப் பிறந்தது. பெண்ணாசைக் கொண்டதால் விசுவாமித்திரரின் பிரம்ம ரிஷி கனவு தகர்ந்தது.
புத்தி தெளிந்த விசுவாமித்திரர் மீண்டும் தவம் இருக்கத் தொடங்கினார். தேவர்கள் மறுபடியும் ரம்பையை அனுப்பி வைத்தார்கள். இம்முறை மயங்காத விசுவாமித்திரர் அவளை சபித்து அனுப்பினார்.


முனிவர்களுக்கு காமம்,கோபம், கர்வம் கூடாது என்பதால் இம்முறையும் அவரது தவத்தின் வலிமை குறைந்தது.பட்டு திருந்தி அனைத்தையும் அடக்கி அவர் தவம் இருக்க... கடைசியில் தேவர்கள் தோன்றி அவருக்கு பிரம்ம ரிஷி என்ற பட்டத்தைக் கொடுக்க நினைத்தனர். ஆனால் விசுவாமித்திரர் தேவர்கள் வாயால் அந்தப் பட்டத்தைப் பெறுவதை விட , தான் எதிரியாகக் கருதும் தனது முன்னோடியான வசிஷ்டர் வாயால் அதை சொல்ல வைக்க வேண்டும் என்று விரும்பினார். 
அதை தேவர்களிடம் வெளிப்படுத்த அவர்கள் வசிஷ்டரை வரவழைத்தனர்.வசிஷ்டரும் தன் வாயால் விசுவாமித்திரரை பிரம்ம ரிஷி என்று வாயாராப் புகழ்ந்து பாராட்டினார்.ஆக, நண்பர்களை விட எதிரி கையால் பட்டம், பாராட்டுப் பெறுவதைத்தான் இப்படி குறிப்பிடுகிறார்கள்.

No comments:

Post a Comment