Saturday 2 June 2012

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க 60,000 மாணவிகளுக்கு கடிதம் எழுதிய கலெக்டர்..!!!!

தருமபுரி மாவட்டத்தில் பெண்குழந்தைகளை சிறுவயதாக இருக்கும் பொழுதே மண முடித்துக்கொடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டாலும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் இன்னமும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. 
இந்த நிலையில், குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் லில்லி மாவட்டம் முழுவதும் உள்ள மாணவிகளுக்கு கடிதம் எழுதி அசத்தியுள்ளார். 

அவரது கடித விவரம்:

அன்புள்ள மாணவச்செல்வங்களுக்கு,

இந்த உலகத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் நிறைய உரிமைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை மற்றும் பங்கேற்கும் உரிமை. இப்படி கிடைக்கவேண்டிய இந்த உரிமைகள் அனைத்தும், இங்குள்ள எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்கின்றனவா...? குறிப்பாக இங்குள்ள பெண் குழந்தைகளுக்கு கிடைக்கின்றனவா...? என்று பார்த்தால் வருத்தமே மிஞ்சுகிறது.

குடும்ப பாரம் சுமத்தப்படுகிறது

நமது மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில். பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில் உள்ள உன்னைப்போன்ற “பெண்” குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதை அறிந்து வேதனை அடைகிறேன். சிறுவயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதால் அந்த குழந்தைகளின் குழந்தைப்பருவம் முற்றிலும் சிதைக்கப்படுகிறது. குழந்தையின் தலையில் குடும்பபாரம் சுமத்தப்படுகிறது. ஒரு குடும்பத்தின் பாரத்தை உன்னைப்போன்ற ஒரு குழந்தையால் சுமக்கமுடியுமா...?

பாழாகும் எதிர்காலம்

படிக்கும் வயதில் திருமணம் நடந்தால் உன்னுடைய எதிர்காலம் எப்படி போகும் என்பதை நீ முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.... மாணவ மணிகளே. குழந்தைகளுக்கு திருமணம் செய்விக்க கூடாது என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசுங்கள்... முடிந்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசுங்கள். இப்படி நீங்கள் பேசுவதால், உங்களுடைய ஊரில் நடக்கும் பல குழந்தை திருமணங்களை தடுக்க முடியும். குழந்தைக்கு திருமணம் செய்யக்கூடது” என்ற விழிப்புணர்வு ஏற்படும். இதனால், உன்னைப்போன்ற படிக்கும் குழந்தைகளின் திருமணம் இனிமேல் நடக்காது தடுத்து நிறுத்தப்படும்.

விழிப்புணர்வு ஏற்படுத்து

உனது கிராமத்தில், குழந்தைகளுக்கு எதிரான செயல்கள் நடந்தாலோ, அல்லது குழந்தைகளுக்கு இளவயதில் திருமானம் நடந்தாலோ, பெரியோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்தாலோ எனக்கு நீ கடிதம் மூலம் தெரியப்படுத்து. அல்லது கட்டணமில்ல தொலை பேசி எண் 1098 தகவல் சொல்லு... அல்லது என்னுடைய செல்போனில் 94441 61000 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு “நீ” எனக்கு தகவல் சொல்லலாம். அல்லது குறுந்தகவலில் செய்தி அனுப்பலாம். உன்னுடைய பெயர் விபரங்களை ரகசியமாக நான் வைத்துக்கொள்வேன். 

உன்னைப்போல படித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது பெற்றோர்கள் திருமானம் செய்விக்க நினைத்தால் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற என்னம் உனக்கு வரவேண்டும்.

அரசே ஏற்றுக்கொள்ளும்

ஒரு வேளை பாதிக்கப்படும், அந்த பெண்ணுக்கு எதிர்காலம் என்னவாகும் என்று நீ கவலைப்பட வேண்டாம்... அந்த பெண்ணின் கல்வி, விடுதி வசதி, வேலைவாய்ப்பு, வாழ்வதற்கு தேவையான எல்லா விதமான ஆலோசனைகளையும் அரசே செய்து கொடுக்கும் என்பதை நான் உனக்கு சொல்லிக் கொள்கிறேன் என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார் கலெக்டர் லில்லி.

கிட்டத்தட்ட 60 ஆயிரம் மாணவியர்களுக்கு இந்தக் கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment