Wednesday 20 June 2012

கலாம் பதவியைத் தேடவில்லை, பதவிதான் அவரைத் தேடி வந்தது.!!!


 He Did Not Seek The Office The Office Sought Him

 2002ம் ஆண்டு அப்துல் கலாம் குடியரசுத் தலைவரானபோது அந்தப் பதவிதான் அவரைத் தேடி வந்தது. அவர் பதவியைத் தேடிப் போகவில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான நட்வர்சிங்.

இதுகுறித்து ஹிண்டு பத்திரிக்கையில் அவர் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்...

தனது சுயசரிதை நூலில், மறைந்த பி.சி.அலெக்சாண்டர் கூறுகையில், எனக்கு குடியரசுத் தலைவர் பதவி கிடைக்காமல் போனதற்கு நடவர்சிங்தான் காரணம் என்று கூறியிருந்தார். 2002ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவி அவருக்குக் கிடைக்காமல் போனது குறித்து இப்படி அவர் கூறியிருந்தார். மேலும், அப்போதைய பிரதமரின் (வாஜ்பாய்) முதன்மைச் செயலாளராகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்த பிரிஜேஷ் மிஸ்ராவையும் அவர் சாடியிருந்தார். நானும், மிஸ்ராவும் சேர்ந்துதான் அலெக்சாண்டருக்குப் பதவி கிடைக்காமல் செய்து விட்டதாக அவர் வருத்தப்பட்டிருந்தார். 


உண்மையில் இது நகைப்புக்குரியது. நாங்கள் இருவரும் தனியாக நிறுவனம் எதையும் நடத்தவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் பல வழிமுறைகளை கடைப்பிடித்தாக வேண்டியது அலெக்சாண்டருக்கே தெரிந்திருக்கும். ஆனால் அலெக்சாண்டர் ஒரு நல்ல மனிதர். அருமையான சிவில் சர்வன்ட் ஆக இருந்தவர். அதேசமயம் எதையும் கணக்குப் போட்டுப் பார்த்து நடைபோடக்கூடியவர்.

அவருக்கு 1992ம் ஆண்டு துணைக் குடியரசுத் தலைவர் பதவி கிடைக்க நான் கடுமையாக முயன்றேன். ஆனால் அது ஈடேறவில்லை. இது மறைந்த பிரதமர் நரசிம்மராவுக்கு நன்றாக தெரியும். அந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு எனது வீட்டில் ஒரு டின்னர் வைத்தேன். அதில், அடல் பிகாரி வாஜ்பாய், கே.ஆர்.நாராயணன், ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சந்திரேசகர் டெல்லியில் இல்லாததால் வர முடியவில்லை.

முதலில் வாஜ்பாய்தான் வந்தார். அப்போது கே.ஆர்.நாராயணன் அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த எனது மனைவி, வாஜ்பாயிடம் சென்று முனுமுனுத்த குரலில், நீங்கள் நாராயணனை ஆதரிப்பீர்களா என்று கேட்டார். அதைக் கேட்ட வாஜ்பாய் ஆமாம் என்று கூறுவது போல தலையை அசைத்தார்.

டின்னரின்போது நாராயணனுக்கு எதிரே வாஜ்பாய் அமர்ந்திருந்தார். நான் அப்போது வாஜ்பாயின் தீவிர ரசிகன். அவர் மிக அருமையான மனிதர், அதி புத்திசாலித்தனமானவர். நான் நேரடியாகவே வாஜ்பாயிடம் கேட்டேன், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு நாராயணனை நிறுத்தினால் உங்களது கட்சி ஆதரிக்குமா என்று. அதற்கு வாஜ்பாயும், ஆதரிப்போம் என்று நேரடியாகவே பதிலளித்தார்.

இதையடுத்து டின்னர் முடிந்ததும் நான் அலெக்சாண்டரிடமும், பிரதமரிடமும் இதைத் தெரிவித்தேன். அதைக்கேட்டு அலெக்சாண்டர் ஒன்றும் பேசவில்லை. பிரதமர் நரசிம்மராவ், நான் சொன்னதை மனதில் வைத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

உண்மையில் நரசிம்மராவும் சரி, அலெக்சாண்டரும் சரி கே.ஆர்.நாராயணை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் நாராயணனை யாராலும் தடுக்க முடியாது என்பது தெரிந்து போயிற்று. அவர் குடியரசுத் துணைத் தலைவரானார். ஐந்து ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலைவராவும் உயர்ந்தார்.

1997ல் தான் நாம் சுதந்திரம் வாங்கி 50 ஆண்டுகளை பூர்த்தி செய்திருந்தோம். அந்த சமயத்தில் தலித் ஒருவர் குடியரசுத் தலைவரானது பெருமையான, பொருத்தமான விஷயம். ஏமாற்றத்தில் இருந்த அலெக்சாண்டரை 1992ம் ஆண்டு மகாராஷ்டிர ஆளுநராக நியமித்தார் நரசிம்ம ராவ். 97ல் மீண்டும் ஆளுநரானார். 2002ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

ஆளுநர் பதவியிலிருந்து வெளியே வந்த அலெக்சாண்டர் 2002 குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பினார். இதுகுறித்து அவர் தனது சுயசரிதை நூலில், நானாக பதவிக்கு ஆசைப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் என்னை அழைத்தது என்று கூறியுள்ளார். அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. ஆனால் வியப்புக்குரிய ஒன்று என்னவென்றால் அவர் காங்கிரஸ் கட்சியை பயன்படுத்திக் கொள்ள நினைத்ததுதான்.

அலெக்சாண்டரை தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக்க முடிவு செய்திருப்பதை அறிந்த காங்கிரஸ் தலைவர் என்னையும், மன்மோகன் சிங்கையும் அழைத்து, நடக்கும் நிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாக கவனிக்குமாறு கேட்டுக் கொண்டார். நாங்களும் அமைதியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம்.

அப்போது குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன், எங்களை அழைத்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நான் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்றார். அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அலெக்சாண்டர் போட்டியிட்டால் நான் போட்டியிடத் தயார் என்றார். அது எங்களுக்குக் குழப்பத்தைக் கொடுத்தது. அதேசமயம், நாராயணனுக்கு காங்கிரஸ் தலைவரின் ஆதரவு அப்போது இல்லை.

எங்களுக்கு அப்போது இரண்டு தெளிவுகள் தேவைப்பட்டன - ஏன் தேசிய ஜனநாயக் கூட்டணி நாராயணனை எதிர்த்தது, காங்கிரஸ் தலைவர் ஏன் அலெக்சாண்டரை ஆதரிக்கவில்லை என்பதே அது. நான் அப்போது பிரிஜேஷ் மிஸ்ராவுடன் நல்ல தொடர்பில் இருந்தேன். அவர் பல காரணங்களைக் கூறினார். முக்கியக் காரணம் என்னவென்றால் நாராயணனின் உடல் நிலை. அவருக்கு அப்போது பக்கவாதம் வந்திருந்தது. இரு கால்களும் கிட்டத்தட்ட செயலிழந்த நிலையில் இருந்தன.

மேலும் நாராயணன், பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் செல்ல வேண்டிய பயணத்தை விரும்பவில்லை, ரத்து செய்தார். அதேசமயம், தனது மகள் தூதராக இருந்த ஸ்வீடனுக்கு செல்ல விரும்பினார். மேலும், 2002ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி டெல்லி வந்த மேகவதி சுகர்ணோபுத்திரியை அவர் வரவேற்க மறுத்தார். அது கடமையிலிருந்து தவறிய செயல் என பிரிஜேஷ் மிஸ்ரா விமர்சித்தார்.

அலெக்சாண்டரை காங்கிரஸ் தலைவரை ஆதரிக்க மறுத்ததற்கு அரசியல் தான் காரணம். தனிப்பட்ட காரணம் என்று எதுவும் இல்லை. அலெக்சாண்டர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர். அவரைப் போய் எப்படி காங்கிரஸ் ஆதரிக்க முடியும் என்பது காங்கிரஸ் தலைவரின் வாதம்.

மேலும், நாராயணனும் சரி, அலெக்சாண்டரும் சரி, இருவருமே கேரளத்தவர்கள். ஒரு கேரளத்தவர் குடியரசுத் தலைவராக இருந்த நிலையில் மீண்டும் ஒரு கேரளத்தவரையே தேர்வு செய்ய காங்கிரஸ் தலைவர் விரும்பவில்லை.

இப்படி அடுத்தடுத்து நிகழ்வுகள் வேகமாக போய்க் கொண்டிருந்தன. 2002ம் ஆண்டு மே 19ம் தேதி பிரதமர் வாஜ்பாயை காங்கிரஸ் தலைவர் சந்தித்துப் பேசினார். அப்போது நாராயணனை நாங்கள் ஆதரிக்க முடிவு செய்திருக்கிறோம் என்று வாஜ்பாயிடம் காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார். ஆனால் வாஜ்பாயோ, நாராயணனை மீண்டும் குடியரசுத் தலைவராக்க நாங்கள் விரும்பவில்லை என்றார்.

இந்த நிலையில் பக்கவாத சிகிச்சைக்காக ஊட்டி போயிருந்த நாராயணன் மே 22ம் தேதி டெல்லி திரும்பினார். அவரை காங்கிரஸ் தலைவர் சந்தித்து, 2வது முறையாக உங்களைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் விரும்புவதாக தெரிவித்தார். 2 நாட்கள் கழித்து பிரதமர் வாஜ்பாய், நாராயணனை சந்தித்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீங்களே தொடர தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஆதரவு இல்லை என்று கூறினார்.

இதற்கிடையே நாராயணன் மீண்டும் பதவியில் நீடிக்கும் ஆர்வத்தை வேகப்படுத்த ஆரம்பித்தார். இதனால் குழப்ப நிலை ஏற்பட்டது. இருப்பினும் தனக்கு வேகமாக ஆதரவு குறைவதைக் கண்ட நாராயணன், பதவியிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக குடியரசுத் தலைவர் பதவிக்கு மீணடும் கே.ஆர்.நாராயணன் போட்டியிட மாட்டார் என்று குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அறிக்கை வெளியானது.

இதற்கிடையே, துணைக் குடியரசுத் தலைவராக இருந்த கிஷன் காந்த் குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டால் ஆதரிப்பதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
ஜூன் 8ம் தேதிதான் மிக முக்கிய நாள். அன்று பிரிஜேஷ் மிஸ்ரா எனக்குப் போன் செய்தார். தன்னை வந்து சந்திக்குமாறு அவர் கோரினார். அவரை பார்த்தபோது, குடியரசுத் தலைவர் பதவிக்கு கிஷன் காந்த்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரிப்பதாக தெரிவித்தார். மேலும் என் முன்னிலையிலேயே வாஜ்பாய்க்கும் அவர் போன் செய்தார். அவரிடம், நட்வர்சிங் இங்கே இருக்கிறார். கிஷன் காந்த்துக்கு காங்கிரஸின் ஆதரவை அவர் உறுதிப்படுத்தியுள்ளார் என்றார்.

மேலும், பிரதமர் ஒரு மதிய உணவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் அதில் பங்கேற்பதாகவும், அவர்களிடம் அவர் ஒப்புதல் பெறவுள்ளதாகவும் தெரிவித்தார். இதை முடித்த பின்னர் மாலையில், பிரதமரும், காங்கிரஸ் தலைவரும் கிஷன் காந்த்தை நேரில் சந்தித்து முடிவைத் தெரிவிப்பார்கள் என்றும் மிஸ்ரா தெரிவித்தார்.

இதை நான் உடனடியாக காங்கிரஸ் தலைவரிடம் தெரிவித்தேன். கிஷன் காந்த்துக்கும் ஏற்கனவே இது தெரிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அன்று மாலை 3 மணியளவில் உடனே வந்து தன்னை பார்க்குமாறு அழைத்தார் பிரிஜேஷ் மிஸ்ரா. அப்போது அவர் என்னிடம் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களிடம் கிஷன் காந்த்தை நிறுத்த போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றும் இதுதொடர்பாக பிரதமர் எடுத்த தீவிர முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் கூறினார்.

இதையடுத்து அலெக்சாண்டரின் பெயர் மீண்டும் முதலிடத்திற்கு வந்தது. எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. இந்த புதிய திருப்பம் குறித்து காங்கிரஸ் தலைவரிடம் தெரிவித்தேன். ஆனால் அலெக்சாண்டர் குறித்த காங்கிரஸ் தலைவரின் கருத்தில் மாற்றம் ஏற்படாது என்பதும் எனக்குத் தெரியும்.

இந்தநிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தன்னைக் கைவிட்டது குறித்து அறிந்து உடைந்து போனார் கிஷன் காந்த். அவருக்கு அது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அடுத்த ஒரு மாதத்தில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். நான் அவரது வீட்டுக்கு போனபோது கிஷன் காந்த்தின் 104 வயது தாயார் தனது மகனின் தலையை எடுத்து தனது மடியில் கிடத்தி அழுதபடி இருந்த காட்சி என்னை உலுக்கி விட்டது.

அலெக்சாண்டர் பெயர் மீண்டும் முதலிடத்தில் வந்த நிலையில் திடீரென, முலாயம் சிங் யாதவ், அப்துல் கலாமின் பெயரைப் பரிந்துரைத்தார். அது முற்றிலும் யாருமே எதிர்பாராத ஒரு பெயர். கலாமை சாதாரண முறையில் கூட யாரும் பரிந்துரைத்திருக்கவில்லை, அவர் ஒரு 'டார்க் ஹார்ஸ்' கூட கிடையாது. ஆனால் அவர்தான் கடைசியில் குடியரசுத் தலைவரானார். அவர் பதவியைத் தேடி வரவில்லை, பதவிதான் அவரைத் தேடிப் போனது.

டெல்லியில் பதவியேற்க கலாம் வந்தபோது, பிரமோத் மகாஜன் அவரைச் சந்தித்தார். இரண்டு கோரிக்கைகளை அவர் கலாமிடம் வைத்தார் - காலர் வைத் கோட் போட்டுக் கொள்ள வேண்டும், ஹேர்ஸ்டைலை மாற்ற வேண்டும் என்பதே அது. அதைக் கேட்ட கலாம் கூறினார், மிஸ்டர் மகாஜன், காலர் வைத்த கோட் ஓ.கே, ஆனால் ஹேர்ஸ்டைலை மாற்றுவது குறித்து பேச்சுக்கே இடமில்லை என்றார் சிரித்தபடி...

No comments:

Post a Comment