Monday 11 June 2012

புறநானூறு : இறைவனின் திருவுள்ளம்

நூல் : புறநானூறு; தொகுப்பு எண் : 01

தலைப்பு : இறைவனின் திருவுள்ளம் (கடவுள் வாழ்த்து)
பாடியவர் : பெருந்தேவனார்
பாடபட்டோன் : இறைவன்


இக்கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். பெருந்தேவனார் என்பது இவ்வாசிரியரது இயற்பெயர். தமிழில் பாரதத்தைப் பாடிய செயல்பற்றி இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என வழங்கப்படுகின்றார். இப்போது வெளியாகியிருக்கும் பாரத வெண்பா வென்னும் நூல் இவர் பாடிய தென்று கூறுவர். இப் பாரத வெண்பா உரையிடையிட்ட
பாட்டு. சங்கத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்ற இவற்றிற்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுட்களைப் பாடிச் சேர்த்தவர் இவர். இதனால் இவர் கடவுட்கொள்கை நிறைந்த வுள்ளமுடையரென்பது புலனாகும். இவர் பெரும்பாலும் சிவனையும் முருகனையும் பாடியிருக்கின்றார்; நற்றிணையில் உள்ள பாட்டு திருமாலைக் குறித்து நிற்பதாகப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரவர்களால் உரைகாணப்பட்டுள்ளது.

இப்பாட்டின்கண் ஆசிரியர் பெருந்தேவனார்,சிவனை அருந்தவத்தோன் என்று குறிப்பிட்டு, அவனுக்குக் கண்ணியும் மாலையும் கொன்றை; ஊர்தியும் கொடியும் ஆனேறு என்று குறித்து, அவனுடைய கறைமிடறும், பெண்ணுருவாகிய திறனும், தலையிற் சூடிய பிறையும் முறையே
அந்தணராலும் பதினெண் கணங்களாலும் புகழவும் ஏத்தவும் படும் எனத் தெரிவித்து, அதனால் நாமும் அவனை வணங்கி வாழ்த்துதல் வேண்டும் என்ற கருத்தை உய்த்துணர வைக்கின்றார்.

"கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை
ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப

கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை
மறைநவி லந்தணர் நுவலவும் படுமே
பெண்ணுரு ஒருதிரு னாகின் றவ்வுருத்
தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்

பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை
பதினெண் கணனு மேத்தவும் படுமே
எல்லா உயிர்க்கும் ஏம மாகிய
நீரற வறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே". (1)


உரை : கண்ணி - திருமுடிமேற் சூடப்படுங் கண்ணி;கார் நறுங் கொன்றை - கார்காலத்து மலரும் நறிய கொன்றைப்பூ; காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை - அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் அக்கொன்றைப்பூ; ஊர்தி வால் வெள்ளேறு - ஏறப்படுவதுதூய வெளிய ஆனேறு; சிறந்த சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப - மிக்க பெருமைபொருந்திய கொடியும் அவ்வானே றென்று சொல்லுவர்; கறை மிடறு அணியலும் அணிந்தன்று - நஞ்சினது கறுப்பு திருமிடற்றை அழகு செய்தலும் செய்தது; அக்கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படும் -அக்கறுப்புத்தான் மறுவாயும் வானோரையுய்யக் கொண்டமையின் வேதத்தைப் பயிலும் - அந்தணராற் புகழவும் படும்; பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று - பெண்வடிவு ஒருபக்கம் ஆயிற்று; அவ்வுறு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் - ஆய அவ்வடிவுதான் தன்னுள்ளே ஒடுக்கி மறைக்கினும் மறைக்கப்படும்; பிறை நுதல் வண்ணம் ஆகின்று - பிறை திரு நுதற்கு அழகாயது; அப்பிறை பதினெண்கணனும் ஏத்தவும் படும் - அப்பிறைதான் பெரியோன் சூடுதலாற் பதினெண்கணங்களாலும் புகழவும்படும்; எல்லா வுயிர்க்கும் ஏமமாகிய - எவ்வகைப்பட்ட உயிர்களுக்கும் காவலாகிய; நீர் அறவு அறியாக்கரகத்து - நீர் தொலைவறியாக் குண்டிகையானும்; தாழ் சடை - தாழ்ந்த திருச்சடையானும்;பொலிந்த-சிறந்த;அருந்தவத்தோற்கு -செய்தற்கரிய தவத்தை யுடையோனுக்கு எ-று.

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பதற்கு அவ்வடிவுதான் எல்லாப் பொருளையும் தன்னுள்ளே யடக்கி அவ்விறைவன் கூற்றிலே மறையினும் என்று உரைப்பினும் அமையும். நீரறவு அறியாக் கரகம் கங்கை யென்பாருமுளர். அக்கறை, அவ்வுரு, அப்பிறை என நின்ற எழுவாய்கட்கு,
நுவலவும் படும், கரக்கினும் கரக்கும், ஏத்தவும் படும் என நின்ற பயனிலைகள் நிரலே கொடுக்க, இவ்வெழு வாய்களையும் பிறவற்றையும் அருந்தவத்தோனென்க. ஏமமாகிய நீர் எனினு மமையும். அணியலு மணிந்தன்று என்பது “உண்ணலு முண்ணேன்” (கலி. 23) என்பது போல நின்றது. பதினெண்கணங்களாவார் தேவரும் அசுரரும் முனிவரும் கின்னரரும் கிம்புருடரும் கருடரும் இயக்கரும் இராக்கதரும் கந்தருவரும் சித்தரும் சாரணரும் வித்தியாதரரும் நாகரும் வேதாளமும் தாராகணமும் ஆகாசவாசிகளும் போகபூமியோரு, மென இவர்; பிறவாறும் உரைப்பர். இப்பெரியோனை மன மொழி மெய்களான் வணங்க, அறமுதல் நான்கும் பயக்கும் என்பது கருத்தாகக் கொள்க.

விளக்கம் : தலையிற் சூடப்படுவது கண்ணி யென்றும், மார்பில் அணியப்படுவது மாலை யென்றும் வழங்குவது மரபாதலால், கண்ணியென்பதற்குத் ‘திருமுடிமேற் சூடப்படும் கண்ணி‘ யென்றார். காமர், அழகு, வண்ணம், முன்னது நிறமும் பின்னது அழகும் குறித்து நின்றது.
செம்மேனியிற் கறுப்புநிறங் கொண்டு நிற்பதுபற்றி, கறையை நஞ்சுக் கறுப்பென்றும், அது நஞ்சினால் உண்டானதுபற்றி, நஞ்சினது கறுப்பு என்றும் உரைத்தார். அது மறை நவிலும் அந்தணராற் பரவப் படுதற்குக் காரணம் தொக்குநிற்றலின், அதனை விரித்து, வானோரையுய்யக் கொண்டமையின்” என்று உரை கூறினார். மறுவாயும் என்றது, அக்கறை மறுவாய் நுவலப்படுதற் குரித்தன் றாயினும் என்பதுபட நின்றது. நவிலுதல், பயிலுதல்; “வினைநவில் யானை” - (பதிற்.82) என்பதன் உரை காண்க. பிறை மகளிரால் தொழப்படுமேயன்றி ஏனோரால் பெரிதும் தொழப்படுதற்குக் காரணம் “பெரியோன் சூடுதலால்” என்பதனால் காட்டினார். அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பதற்கு, “எல்லாப் பொருளையும் தன்னுள்ளே அடக்கி அவ்விறைவன் கூற்றிலே மறையினும் மறையும்” என்று வேறு பொருள் கூறினும் பொருந்தும் என்றுரைக்கின்றார். அருந்தவத்தோற்கு அக்கறை நுவலவும் படும்; அவ்வுரு கரக்கினும் கரக்கும்; “கின்னரர் கிம்புருடர் விச்சாதரர் கருடர், பொன்னமர் பூதர் புகழியக்கர்- மன்னும், உரகர் சுரர்சாரணர் முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்; காந்தருவர் தாரகைகள் காணாப் பசாசகணம், ஏந்து புகழ் மேய விராக்கதரோ டாய்ந்ததிறற், போகா வியல்புடைய போக புவி யோருடனே, ஆகாச வாசிகளா வார்” என அடியார்க்கு நல்லார் காட்டும் பழைய வெண்பாக்களால் வேறு வகைப்படக் கூறுதலும் உண்டெனத் தோன்றுவதுபற்றி, “பிறவாறும் உரைப்ப” என்றார்.

No comments:

Post a Comment