Sunday, 10 June 2012

புறநானூறு : முன்னுரை

இந்நூலை தமிழகத்துக்குப் புறநானூறு என்னும் இந்நூல், புது நூல் அன்று; இது, காலஞ்சென்ற டாக்டர் திரு. உ. வே. சாமிநாதைய ரவர்களால் சென்ற ஐம்பது ஆண்டுகட்கு முன்பே அச்சேற்றி வெளியிடப்பெற்றது; தமிழர்களின் பண்டை நாகரிகத்தை ஆராய்ந்த ஆராய்ச்சி யறிஞர் பலரும்  கண்டறிந்தது; மேலைநாட்டுத் தமிழ்ப்புலவரான மறைத்திரு. ஜி.யூ. போப் முதலியோர்களால் சில பாட்டுக்கள் மொழிபெயர்த்து ஆங்கிலத்திற் காட்டப்பெற்றது.

அரசியல் சமுதாயம் சமயம் முதலிய வாழ்க்கைத் துறைகளில் உழைக்கும் அறிஞர் பலரும் இந் நூலின் செய்யுட்களுட் பலவற்றைப் பயன்கொண்டுள்ளனர்; கருத்துக்களை மேற்கொண்டுள்ளனர். இப்போது சென்னை மாநில அரசியல் முதலமைச்சர் உணவுநிலைபற்றிப் பேச்சு நிகழ்த்த வேண்டியிருந்த காலையில், இப் புறநானூறு ஒருசில கருத்துக்களை அவர்க்கு வழங்கிச் சிறப்பளித்தது. தென்குமரியின் தெற்கிலுள்ள இந்துமாக்கடல் தோன்றுதற்குமுன் தோன்றிய செய்யுட்களும், அது தோன்றியபின் பாரத இராமாயண நிகழ்ச்சிகட்கு முன்னும்  பின்னும் தோன்றிய செய்யுட்களும் திருவேங்கடத்தில் திருமால் கோயிலும்,  பழனியில் முருகன் கோயிலும், இராமேச்சுரத்தில் இராமலிங்கர் கோயிலும் தோன்றுதற்குமுன் தோன்றிய செய்யுட்களும், சிலம்பு பாடிய இளங்கோவடிகளும், மணிமேகலை பாடிய சாத்தனாரும் தோன்றுதற்கு முன்னும் பின்னும் தோன்றிய செய்யுட்களும் இப் புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன. சுருங்கச் சொல்லுமிடத்து, மிகப் பழைய நூல்க ளெல்லாவற்றிற்கும் பழைய தெனக் கருதப்படும் தொல்காப்பியத்துக்கு முன்னே தோன்றிய செய்யுட்களும் பின் தோன்றிய செய்யுட்களும் தன்னகத்தே கொண்டு, தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது இப்புறநானூறு என்பது மிகையாகாது.

இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே, நம் தமிழகத்தில் விளங்கிய புலவர் பெருமக்கள் அவ்வப்போது பாடிய பாட்டுக்களின் தொகுப்பாக விளங்கும் இத் தொகை நூல், தொல்காப்பியப் புறத்திணையியலில் அடங்கியுள்ளபுறத்துறைகட் கேற்ப, திணையும் துறையும் வகுக்கப் பெற்றுப் புறத்துறையிலக்கணத்துக்குச் சீர்த்த இலக்கியமாகவும் இலங்குகிறது. ‘‘மக்கள், தமது வாழ்விடை எண்ணும் எண்ணங்களும், சொல்லும் சொற்களும் இயற்கை இலக்கண வரம்புக்குட்பட்டு இயலுவன; இவ்விலக்கணத்தோடு ஒட்டிய இயற்கைமொழி இலக்கணம் தமிழ்மொழியின் தொல்லிலக்கணம்’’ என மொழிநூலறிஞர் உரைப்பதற்கேற்பவே, இந்நூற்கண் காணப்படும் எண்ணங்களும் சொற்களும் இலக்கண வொழுக்கமும் இலக்கியச் செறிவும் பெற்றுத் திகழ்கின்றன. மேலும், இவ் விலக்கண வொழுக்கமும் இலக்கியச் செறிவும் பண்டைத் தமிழ் மக்களின் நல்லொழுக்கத்தையும், சீரிய நாகரிகப் பண்பாட்டையும் நல்லறிஞர் நன்கு தெளிய விளக்கி நிற்கின்றன.

இப் புறநானூறு போலவே, வேறே ஏழு தொகை நூல்கள் இப்புறப் பாட்டுக் காலத்தனவாய் உள்ளன. அவற்றோடு கூட்டி எண்வகைத் தொகைநூல்கள் என இயம்புவது மரபு. அவை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு எனப்படும். இவை யனைத்தும் பல புலவர்கள் பல காலத்திற் பாடிய பாட்டுக்களின் தொகையாகும். புறநானூற்றுச் செய்யுட்களைப் போலவே, இவை தொன்மையும் இலக்கண வொழுக்கமும் இலக்கியச் செறிவும் உடையன. இவ்வெட்டனுள், புறமும், பதிற்றுப்பத்தும் ஒழிய ஏனைய யாவும் அகப்பொருள் நெறிக்குரியன. பரிபாடல் என்பது இசை நூலே; ஆயினும் இது புறப்பொருளும் அகப்பொருளும் தழுவி இயலுவது. செல்வாக்குள்ள சூழலில் தக்கதோரிடம் பெறுவதே தமது அறிவின் எல்லையாகக் கருதித் தம்மையே வியந்து, அப்பொருள் அமைதி காணாது. அதனை இகழ்ந்துரைக்கும் சிறுமை, தமிழருட் சிலர்பால் இக்காலத்தே சிறிது காணப்படுகிறது. அவரது அறியாமைக்கு இரங்கும் தமிழுலகம், அவரது சிறுமையைப் பொருளாகக் கொண்டு அக முதலிய பொருணூல்களைத் தள்ளி யொதுக்கும் கீழ்மையை அடையாதென்பது ஒருதலை.

நிற்க. இந்நாளில், மண்ணுலக நல்வாழ்க்கைக்கமைந்த அரசியல் வகைகள், நாடுதோறும் வேறுவேறு வகையவாயினும்,பொதுவாக அரசியல் வாழ்வில் என்பதை,மக்கட்கு நால்வகை உரிமைகள் இன்றியமையாது வேண்டப்படுகின்றன  இரண்டாவது உலகப் போரை வென்றியுற முடித்து அரசியலறிஞர் வற்புறுத்தியுள்ளனர். அதனை யுணர்ந்த அரசியலுலகம் அத்லாந்திக் கார்ட்டர்  எனப்படும் உரிமை யாவணம் வகுத்தது; அது நீர்மேலெழுத்தாய் நிலைபேறின்றி விளங்காதாக, பண்டைநாளில் நம்தமிழகத்தே அவ்வுரிமை விளங்கியிருந்ததென்று காட்டும் பேரிலக்கியம் இப் புறநானூறு என இதனைக் கற்றுணர்ந்தோர்  நன்கறிவர். பேச்சுரிமை, வழி பாட்டுரிமை, அச்சமின்மை, வறுமையின்மை என்ற  நான்கும் அத்லாந்திக் சார்ட்டரால் உரிமைகளாக வற்புறுத்தப்படுகின்றன. இந்த நான்கையும் பண்டைத் தமிழர் தம்முடைய பிறப்புரிமையாகக்கொண்டு வாழ்ந்த திறத்தை இப் புறநானூறும் ஏனைத் தொகை நூல்களும் நன்குணர்த்துகின்றன.  இவ்வுரிமை வாழ்வில் ஊறிவந்ததனால்தான், நமது தமிழகம் இன்றுகாறும் வேற்று நாட்டவரது படை யெடுப்பால் சீரழிந்து, நடை, உடை, மொழி, கலை, பண்பாடு முதலிய வாழ்க்கைக் கூறுகளில் நிலைதிரிந்து சீர்மை யிழந்து தொன்மை நலம் மாறிவிடும் சிறுமைநிலை மிக எய்தாது, அரசியல், வாணிபம், பொருளாதாரம்,  கலை முதலிய துறைகளில் தனித்துநின்று உரிமைச் செயலாற்றும் ஒட்பம் குன்றா வியல்புடன் திகழ்கிறது என்னலாம். இந்நிலை வலிமிகப் பெற்றுப் பண்டைய நலம் முற்றும் பெற்றுச் சிறத்தற்கு வேண்டும் நல்லறிவுக்கு இத் தொகை நூல்கள் சீரிய கருவூலங்களாகும்; அவற்றுள் புறநானூறு மிகச் சிறந்த தென்பது  மிகையாகாது.

இந் நாளைய அரசியல் இயக்கத்தின் விளைவாகத் தமிழகம் தமிழர்க்கே யுரிய தனியுரிமை நாடாகும் தகுதிபெற இருக்கிறது. அத்தகுதியைப் பெறாவாறு தடுக்கும் தடைகளைத் தகர்த்தெறிதற்கும் பண்டைத் தொகை நூலறிவு பெருந்துணையாகும்.

புறநானூற்றுத் தமிழகம் மேற்கே கேரளநாட்டையும், வடமேற்கே கன்னட நாட்டையும், வடக்கே ஆந்திர நாட்டையும் தன்னகத்தேகொண்டிருந்தது.   

No comments:

Post a Comment