Tuesday 12 June 2012

புறநானூறு : போரும் சோறும்.!!!!

நூல் : புறநானூறு; தொகுப்பு எண் : 02
தலைப்பு : போரும் சோறும்.!!!!
பாடியவர் : முரஞ்சியூர் முடிநாகராயர்
பாடபட்டோன் : சேரமான் பெருஞ்சோற் றுதியஞ்சேரலாதன்
திணை : பாடாண்
துறை : செவியறிவுறூஉ ; வாழ்த்தியலும் ஆம்..

பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் சேரமன்னருள் ஒருவன் இவனை உதியனென்றும், உதியஞ்சேர லென்றும், உதியஞ்சேரல னென்றும் மாமூலனாரும் கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமானும் பாடுவர். பாண்டவரும் துரியோதனனாதியோரும் பொருத காலத்து இரு திறத்துப் படைகட்கும் பெருஞ்சோறிட்டு இச்சேரமான் நடுநிலைபுரிந்தானென்பது பற்றி, இவன் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் எனப்படுகின்றான். முரஞ்சியூ ரென்பது இப்பாட்டைப் பாடிய ஆசிரியர் முடி நாகனாரது ஊராகும். இவர் தலைச்சங்கப் புலவருள் ஒருவரென இறையனார் களவியலுரை கூறுகிறது. நாகனார் என்பது பிற்காலத்து ஏடெழுதினோரால் நாகராயர் எனப் பிறழ எழுதப்பட்டுவிட்டது.

இப்பாட்டில், இச்சேரமான், நிலம், விசும்பு, காற்று, தீ, நீர், என்ற  ஐம்பெரும்பூதங்களின் இயற்கைபோலப் பொறை, சூழ்ச்சி, வலி, தெறல், அளியென்ற ஐந்தும் உடையவன் என்றும், பாண்டவராகிய ஐவரும் துரியோதனன் முதலிய நூற்றுவரும் பொருதகளத்தில் அவர் படைக்குப் பெருஞ்சோறு வரையாது கொடுத்தவன் என்றும், மேலைக்கடற்கும்  கீழைக்கடற்கும் இடையிற் கிடக்கும் நாடு முற்றும் இவற்கேயுரியது என்றும், இமயமும் பொதியமும் போல இவன் நடுக்கின்றி நிலை பெறுதல்  வேண்டுமென்றும் கூறி வாழ்த்துகின்றார்.

மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரு மென்றாங்
கைம்பெரும் பூதத் தியற்கை போலப்

போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும்
வலியுந் தெறலும் அளியு முடையோய்
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின்
வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந
வான வரம்பனை நீயோ பெரும

அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
பாஅல் புளிப்பினும் பகலிருளினும்

நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ வத்தை அடுக்கத்துச்

சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தணர் அருங்கட னிறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே. (2)

உரை : மண் திணிந்த நிலனும் - அணுச்செறிந்த நிலனும்;  நிலனேந்திய விசும்பும் - அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும்; விசும்பு தைவரு வளியும் - அவ்வாகாயத்தைத் தடவிவரும் காற்றும்; வளி தலைஇய தீயும் - அக்காற்றின்கண் தலைப்பட்ட தீயும்; தீ முரணிய  நீரும் என்று - அத்தீயோடு மாறுபட்ட நீருமென; ஐம்பெரும் பூதத்து இயற்கை போல - ஐவகைப்பட்ட பெரிய பூதத்தினது தன்மை போல;  போற்றார்ப் பொறுத்தலும் - பகைவர் பிழைசெய்தால் அப்பிழையைப்  பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும் - அப்பிழை பொறுக்குமளவல்ல  வாயின் - அவரையழித்தற் குசாவும் உசாவினது அகலமும்; வலியும் -  அவரையழித்தற் கேற்ற மனவலியும் சதுரங்கவலியும்; தெறலும் -  அவ்வாற்றால் அவரை யழித்தலும்; அளியும் உடையோய் - அவர்  வழிபாட்டால் அவர்க்குச் செய்யும் அருளு முடையோய்; நின் கடல்  பிறந்த ஞாயிறு - நினது கடற்கண் தோன்றிய ஞாயிறு; பெயர்த்தும் - பின்னும்; நின் வெண்டலைப் புணரிக் குடகடல் குளிக்கும் - நினது  வெளிய தலைபொருந்திய திரையையுடைய மேல்கடற்கண்ணே மூழ்கும்; யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந - புதுவருவாய் இடையறாத  வூர்களையுடைய நல்ல நாட்டிற்கு வேந்தே; வானவரம்பனை - வானவரம்ப; பெரும-; நீ-; அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ - அசைந்த தலை யாட்ட மணிந்த குதிரையையுடைய பாண்டவர்  ஐவருடனே சினந்து; நிலம் தலைக் கொண்ட பொலம் பூந் தும்பை  ஈரைம் பதின்மரும் - நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும்; பொருது களத்தொழிய - பொருது போர்க்களத்தின்கட் படுந்துணையும்;  பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் - பெருஞ் சோறாகிய மிக்க வுணவை இரு படைக்கும் வரையாது வழங்கினோய்;  பா அல் புளிப்பினும் - பால் தன் இனிமை யொழிந்து புளிப்பினும்; பகல் இருளினும் - ஞாயிறு தன்  விளக்கமொழிந்து இருளினும்; நாஅல் வேதம் நெறி திரியினும் - நான்கு வேதத்தினது ஒழுக்கம் வேறுபடினும்; திரியாச் சுற்றமொடு -  வேறுபாடில்லாத சூழ்ச்சியையுடைய மந்திரிச் சுற்றத்தோடு; முழுது சேண் விளங்கி - ஒழியாது நெடுங்காலம் விளங்கி; நடுக்கின்றி நிலியர் -  துளக்கமின்றி நிற்பாயாக; அடுக்கத்து - அரைமலையின் கண்; சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை - சிறிய தலையையுடைய  மறிகளையுடையவாகிய பெரியகண்ணையுடைய மான்பிணைகள்; அந்தி அந்திக்காலத்தே; அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கில்  துஞ்சும் - அந்தணர் செய்தற்கரிய கடனாகிய ஆவுதியைப் பண்ணும்  முத்தீயாகிய விளக்கின் கண்ணே துயிலும்; பொற்கோட்டு இமயமும்  பொதியமும் போன்று - பொற் சிகரங்களையுடைய இமயமலையும் பொதியின் மலையும் போன்று - எ-று.

குளிக்கும் நாடென இயையும். குளிக்கும் நாடென இடத்து நிகழ்  பொருளின் தொழில் இடத்துமேல் நின்றது. நீயோ, ஓ: அசைநிலை, அன்றி,  இதனை வினாவாக்கி, ஞாயிறு குளிக்கு மென்பதனை முற்றாக்கி வானவரம்ப  னென்பதனை அவ்வினாவிற்குப் பொருளாக்கி உரைப்பாருமுளர். முத்தீயாவன:  ஆகவனீயம், காருகபத்தியம், தென்றிசையங்கி. ஆங்கும் அத்தையும்  அசைநிலை, வானவரம்பனை: ஐகாரம் முன்னிலை விளக்கி நின்றது. நிலந்  தலைக்கொண்ட வென்பதற்கு நிலங்கோடல் காரணமாகத் தலைக்கட் சூடிய  வெனினு மமையும்.

போற்றார்ப் பொறுத்தல் முதலிய குணங்களையுடையோய், பொருந,  வரையாது கொடுத்தோய், வானவரம்ப, பெரும, நீ புளிப்பினும் இருளினும்  திரியினும் இமயமும் பொதியமும் போன்று நடுக்கின்றிச் சுற்றமொடு விளங்கி  நிற்பாயாக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. போற்றார்ப் பொறுத்தல்  முதலாகிய குணங்களை அரசியலடைவாற் கூறுகின்றாராதலின், பூதங்களின்  அடைவு கூறாராயினார்.

இதனாற் சொல்லியது தன்கடற் பிறந்த ஞாயிறு தன்கடற் குளிக்கும் நாட னாதலால் செல்வமுடையையாக வென்று வாழ்த்த வேண்டுவதின்மையின்  நீடுவாழ்கவென வாழ்த்தியவாறாயிற்று. 

விளக்கம்: குளிக்குமென்னும் பெயரெச்சவினை ஞாயிற்றின் வினையாயினும், ஞாயிற்றுக்கும் நாட்டுக்கு முள்ள தொடர்பு இடத்து நிகழ்  பொருளுக்கும் இடத்துக்கு முள்ள தொடர்பாவது பற்றி, குளிக்கும் நாடென  முடிந்தது. இது பற்றியே “குளிக்கும் நாடென இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்துமேல் ஏறி நின்ற” தென்றார். வானவரம்பனை, வானவரம்பவென முன்னிலையாய்க் கொள்ளாது, நீயோ வானவரம்பனை?” என வினாவாக்கிக் கூறுவதுமுண்டென்றற்கு, வினாவாக்கி யுரைப்பாரு முளர் என்றார். துபொருது நிலத்தை முன்பே கவர்ந்து கொண்டமையின், நிலம்  தலைக்கொண்ட வென்பதற்கு நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட எனவுரை  கூறினார். நிலந்தலைக்கொண்ட தும்பை யென்பதற்கு, நிலத்தைக்  கைக்கொள்ளுதல் காரணமாகத் தலையிற் சூடிக்கொண்ட தும்பை என்றும் பொருள்  கூறலாமாதலால்  “நிலங்கோடல்  காரணமாகத்  தலைக்கட் சூடிய   வெனினு  மமையும்”  என்றார். பெருஞ் சோற்று மிகுபதம்  - பெரிய சோறாகிய மிக்க வுணவு. பொருது களத்தொழிந்தவழி, சோறு  கொடுத்தற்கு வழியின்மையின், ஒழிய வென்றதற்கு, “போர்க்களத்தின்கட்  படுந்துணையும்” என்று பொருள் கூறினார். முழுது என்பது எஞ்சாமை குறித்தலின், ஒழியா தென்றுரைத்தார். திரியாச் சுற்றம் என்றவிடத்து, திரிதல்  சுற்றத்தார்க் காகாது அவரது சூழ்ச்சிக் காதலால், இதற்கு வேறுபாடில்லாத  சூழ்ச்சியையுடைய மந்திரச் சுற்றம் என்று உரைகூறினார். சிறுதலை நவ்விப்  பெருங்கண் மாப்பிணை யென்றவிடத்து, பிணை யென்றது பெண்மானுக்  கானமையின் சிறுதலை நவ்வி யென்றது சிறிய தலையையுடைய மான்மறிக்  காயிற்று. மறி, கன்று. “மறியிடைப் படுத்த மான்பிணை” (ஐங் 401) என  வருதல் காண்க. அரசியலடைவாவது பொறை, சூழ்ச்சி, வலி, தெறல், அளியென நிற்கும் நீருமென முறையே பாட்டின்கட் கூறப்படுகின்றன.

பொறைக்கு நிலமும், சூழ்ச்சிக்கு விசும்பும், வலிக்கு வளியும்,  தெறலுக்குத் தீயும், அளிக்கு நீரும் அடைவு எனவுணர்க. “அகழ்வாரைத்  தாங்கும் நிலம்” (குறள்.151) என்றும், “விசும்பினன்ன சூழ்ச்சி”  (பேரா. உரை. மேற். உவம.6) என்றும், “வளி மிகின் வலியு மில்லை” (புற.51) என்றும் வருதல் காண்க. பூதங்களின் அடைவாவது நிலம், நீர்,  தீ, வளி விசும்பு என நிற்பது. பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்று  நடுக்கின்றி நிலியர் என இப்பாட்டுக் கூறுவதை யுட்கொண்டே  இளங்கோவடிகள், இமயத்தும் பொதியிலிடத்தும் உயர்ந்தோ ருண்மையின்,  உயர்ந்தோர் இவற்றிற்கு ஒடுக்கம் கூறார் என்று கூட்டி, இமயமாயினும்  பொதியிலாயினும் புகாரேயாயினும் “நடுக்கின்றி நிலைஇய வென்ப தல்லதை, ஒடுக்கங் கூறார் உயர்ந்தோருண்மையின், முடித்த கேள்வி  முழுதுணர்ந்தோரே” என்று கூறுவது ஒப்புநோக்கத்தக்கது. இமயப்  பொற்கோட்டையும் பொதியத்தையும் சேர வெடுத்தோதுதலால், இமயத்து அடிப் பகுதியில் நடந்த பாரதப் போர்நிகழ்ச்சியில் சேரமான்  செய்த நடுநிலையுதவியை இவர் நேரிற் கண்டறிந்தவ ரெனத் துணிதற்  கிடனாகிறது.

No comments:

Post a Comment