Sunday 16 September 2012

சமயோசிதம் & சாமர்த்தியம்

சமயோசிதம்!
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வில்லுப்பாட்டுக் குழுவில் ஒரு பின்பாட்டுக்காரர் இருந்தார். ஒருமுறை காந்தி கதை வில்லுப்பாட்டு நடந்து கொண்டிருந்தது. அப்போது தண்டி யாத்திரையில் காந்தியின் உப்பு சத்தியாகிரகம் பற்றிய பாட்டை பின்பாட்டுக்காரரைப் பாடச் சொல்ல, அவருக்கு இரண்டாவது வரி மறந்துபோய், "உப்பை எடுத்தார்...உப்பை எடுத்தார்" என்று ஐந்தாறு முறை அதே வரியைப் பாடிக் கொண்டிருந்தார். மக்கள் திருதிருவென விழித்தனர்.

உடனே கலைவாணர்,"எவ்வளவோ போராடி உப்பு சத்தியாகிரகம் நடத்திய காந்தி, அங்கு சென்று ஒரே ஒரு தடவை தான் உப்பை எடுத்திருப்பாரா? பல தடவை குனிந்து குனிந்து உப்பை எடுத்திருப்பார். அதனால்தான் நம் பாட்டுக்காரரும் தத்ரூபமாக "உப்பை எடுத்தார்' என பலமுறை பாடிக் காட்டினார்'' என்று போட்டார் ஒரு போடு. பாடகரின் மறதியை தன் மதிநுட்பத்தால் மாற்றிய கலைவாணருக்கு கைத் தட்டல்கள் குவிந்தன.

சாமர்த்தியம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தார் வி.பாஷ்யம் ஐயங்கார். அவர் தம்முடைய ஓய்வு நேரத்தில் வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்து வந்தார். ஒருநாள் அந்த வெள்ளைக்காரர் இல்லத்துக்குள் ஐயங்கார் நுழைந்ததும் அங்கே இருந்த நாய் பாய்ந்து குரைத்தது. அதனால் ஐயங்கார் ஓட நேரிட்டது. அதைக் கண்ட வெள்ளையர் சிரித்துக் கொண்டே வெளியே வந்தார்.

"என்ன ஐயங்கார்! குரைக்கிற நாய் கடிக்காது என்ற பழமொழியை மறந்து விட்டீர்களோ?'' என்றார்.

"நண்பரே! அந்தப் பழமொழியை நீங்கள் அறிவீர்கள்; நானும் அறிவேன். ஆனால் நாய்க்கு அந்த பழமொழி தெரியுமா?'' என்று சாமர்த்தியமாகக் கேட்டார் ஐயங்கார்.

No comments:

Post a Comment