Thursday 2 August 2012

அழகை மேம்படுத்தும் பாதாம் எண்ணெய்..!!!

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய தானியங்களை சாப்பிடுவோம். அதில் மிகவும் சுவையாக, உடலுக்கு மிகுந்த நன்மையை தரும் வகையில் இருப்பது பாதாம் பருப்பு. இந்த பருப்பு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதில்லை, இதனால் செய்யப்படும் எண்ணெய் சருமத்திற்கும் மிகுந்த அழகைத் தருகிறது. சொல்லப்போனால் இயற்கை எண்ணெய் அனைத்துமே சருமத்திற்கு நல்ல அழகைத் தரும். ஆனால் அதில் பாதாம் எண்ணெய் மிகவும் சிறந்தது. சரும பராமரிப்பிற்கு மற்ற கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதை விட, இந்த எண்ணெயை பயன்படுத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா!!!

* பாதாம் எண்ணெய் அனைத்து வகையான சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. இந்த எண்ணெய் மிகவும் அடர்த்தி குறைவாக இருப்பதால், சருமமானது இதனை விரைவில் உறிஞ்சிக் கொள்ளும். ஆனால் இது மற்ற சருமத்தை விட, வறண்ட சருமத்திற்கு மிகவும் ஏற்றது. ஆகவே இதனை வைத்து தினமும் மசாஜ் செய்தால், சருமம் மென்மையாவதோடு, வெடிப்புக்கள் நீங்கி அழகாக இருக்கும்.

* உதடுகளில் வெடிப்புகள் இருக்கிறதா? அப்படியென்றால் அந்த பிரச்சனைக்கு ஒரே சிறந்த தீர்வு பாதாம் எண்ணெய் தான். இதனை ஒரு 'லிப் கிளாஸ்' மாதிரி பயன்படுத்த வேண்டும். அதற்கு 5-6 துளிகள் பாதாம் எண்ணெயுடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் விட்டு நன்கு கலக்கவும். பின்பு அதனை ஒரு சிறிய டப்பாவில் போட்டு ஒரு வாரத்திற்கு உதடுகளில் வறட்சி ஏற்படும் போதெல்லாம் தடவ வேண்டும். இதனால் உதடுகளில் வெடிப்புகள் போவதோடு, உதடுகள் மென்மையாகவும், சற்று உதட்டின் நிறங்களும் கூடும்.

* முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் பொதுவாக போதிய சத்துக்கள் இல்லாததால் ஏற்படுகிறது. அத்தகைய சத்துக்களான வைட்டமின் ஏ மற்றும் பி, பாதாம் எண்ணெயில் அதிகமாக இருக்கிறது. ஆகவே அதனை அதிகம் பயன்படுத்தினால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் இருப்பதோடு, புதிய செல்களும் உருவாகும். இதனால் முகமானது நன்கு பொலிவோடும், இளமையான தோற்றத்தையும் தரும்.

* பாதாம் எண்ணெய் சருமத்திற்கு அதிகமான நன்மைகளை தருகிறது. அதிலும் முகத்தில் தோன்றும் கருவளையங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை எளிதில் நீக்கும் அதற்கு தினமும் முகத்திற்கு பாதாம் எண்ணெயை காட்டனால் தொட்டு, முகத்தில் கண்களுக்கு அடியில் மற்றும் கரும்புள்ளிகள் இருந்தால் முகம் முழுவதும் தடவி சற்று நேரம் மசாஜ் செய்யவும். அவ்வாறு தொடர்ந்து செய்தால், முகமானது பளிச்சென்று இருக்கும்.

* பாதாம் எண்ணெயும் ஒரு சிறந்த ஃபேசியல் ஸ்க்ரப். இதனை வைத்து முகத்திற்கு செய்யும் போது முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் எளிதில் வெளியேறிவிடும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து, முகத்திற்கு தடவி காய வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது முன்பு இருந்ததை விட, செய்த பின் நன்கு அழகாக இருக்கும்.

No comments:

Post a Comment