Thursday, 16 August 2012

அகநானூறு » தோழி கூற்று(4)

நூல் : அகநானூறு_4
பகுப்பு : களிற்றியானை நிரை
பாடல் :  தோழி கூற்று
திணை:  முல்லை
பாடியவர்: குறுங்குடி மருதனார்

"முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,
கருவி வானம் கதழ் உறை சிதறி,
கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன்,
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட்
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே."குறிப்பு: தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைத்து வாடும் தலைவியை நோக்கி, 'கார்காலம் வந்துவிட்டது தலைவன் விரைவில் வந்து விடுவான்' என்று, பருவ காலத்தைச் சுட்டிக் காட்டி ஆற்றுவிக்கும் தோழி.

விளக்கம்
ஆராய்ந்து தேர்ந்தெடுத்த வளையல்களை அணிந்த அரிவையே, கூர்மையான முனை இருப்பினும், நறுமணத்தால் மட்டுமே மனதை கொல்லும் அரும்புகள் முல்லைக் கொடிகளில் தோன்றிவிட்டன. சத்தம் ஏதுமின்றி தேற்றா மரம், கொன்றை மரம் ஆகியவற்றின் அரும்புகள் மெதுவாக மலரத் தொடங்கிவிட்டன.

மழை பொழிய ஆரம்பித்துவிட்டது, இனிமையான கார்காலம் இது!. இத்தனை நாளாகத் தண்ணீர் இல்லாமல் வருந்திய இந்த உலகத்தின் துயரத்தைப் போக்குவதற்காக, மின்னல் வெட்டுகிறது. மேகமும், இதுவரை சேமித்து வைத்த நீர் தனக்கு போதுமானதாக எண்ணி, மழைத்துளிகளை வேகமாகக் கீழே அனுப்புகிறது.

மழை தொடர்ந்து பெய்வதால், பரல் கற்களை உடைய பள்ளங்களில் எல்லாம் தண்ணீர் நிறைந்து நிற்கிறது. இரும்பை முறுக்கிவிட்டது போன்ற கருப்பான, பெரிய கொம்புகளைக் கொண்ட ஆண் மான்கள் அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு மகிழ்ச்சியாகத் துள்ளுகின்றன. ஒட்டுமொத்தக் காடும் அழகு பெற்றுவிட்டது.

சிறிய மலைகளைக் கொண்ட நகரம் உறையூர். அங்கே மக்கள் ஆரவாரத்துடன் திருவிழா கொண்டாடுகிறார்கள். அந்த உறையூருக்குக் கிழக்கே உள்ள நீண்ட, பெரிய மலையில் காந்தள் அரும்புகள் மலர்கின்றன, மென்மையான உன்னுடைய அழகை காண இந்த பருவக்காலத்தில் அதிக பூக்கள் மலர்ந்துள்ளன. ஆகவே, இந்தக் கார்காலத்தைப் பார்த்தவுடன் உன் காதலன், உன் ஞாபகத்தில் விரைவில் திரும்பி வருவான்.

அவனுடைய தேரில் கட்டபட்டிருக்கும் சிறப்பான பிடரியைக் கொண்ட குதிரைகள், தன் தலைகளை வளைத்து ஆட்டிக்கொண்டே கடிவாளம் நெகிழும்படி அதிவேகமாக ஓடும் சக்தி பெற்றது. அப்படி வேகமாக ஓடி வரும்போது குதிரையின் மணி சத்தம் கேட்கவேண்டுமே? இதுவரை சத்தம் ஏதும் கேட்கவில்லையே என்று பதறாதே!.

உன் காதலன் வருகின்ற வழியில், ஒரு பூஞ்சோலை இருகின்றது, அங்கே யாழின் இசையைப் போல் இனிமையாகச் ரீங்காரமிட்டபடி வண்டுகள் காதல் செய்யும். மென்மையான மனம் கொண்ட உன் காதலன், வண்டின் காதல் சங்கீதத்தை கேட்டவுடன் தேரை நிறுத்திவிடுவான். தன்னுடைய தேரின் மணிச் சத்தத்தைக் கேட்டு அந்த வண்டுகள் பயந்து விலகி விடுமோ என்று எண்ணி, குதிரைகளின் கழுத்தில் உள்ள மணிகளைச் சத்தம் எழாதபடி கழட்டிவிட்டுருப்பான். எனவே! அவன் நமக்கு அருகில் கூட வந்து கொண்டிருக்கலாம். அதனால், கவலைப்படாதே தோழி, அவன் விரைவில் இங்கே வந்துவிடுவான், உன்னுடைய பிரிவுத் துயரம் தீரும்..!!!

No comments:

Post a Comment