தன்னார்வ தொண்டு என்று கூறிக்கொண்டு சுய
விளம்பரம் செய்து அதில் ஏதாவது காரியம் சாதித்துக் கொள்ளத்தான் பெரும்பாலோனோர்
நினைக்கின்றனர். ஆனால், படத்தில் காணும் இந்த வயதால் முதிர்ந்த இளைஞர் தன்னார்வ
தொண்டுக்கான இலக்கணமாக திகழ்கிறார்.
ஆம், பெங்களூர் பன்னரகட்டா சாலையின் அருகிலுள்ள அரகெர லேஅவுட் , 5வது மெயின் சாலை
சந்திப்பில் முதியவர் ஒருவர் படு சுறுசுறுப்பாக போக்குவரத்தை சரி செய்து
கொண்டிருந்தார். இவரை அந்த சாலையில் அடிக்கடி பார்த்ததால், அன்று வண்டியை விட்டு
இறங்கிச் சென்று அவரிடம் பேச்சு கொடுத்தோம்.
அவர் கூறிய விஷயங்கள் நம்மை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்று விட்டன. அரகெர
9வது மெயினில் வசித்து வரும் அவரது பெயர் ராமச்சந்திரா. பெங்களூரிலுள்ள பாஷ்
நிறுவனத்தில் நிதித்துறையில் துணை மேலாளராக 39 ஆண்டுகள் பணிபுரிந்து
ஓய்வுபெற்றுவிட்டார்.
தற்போது 64 வயதாகும் ராமச்சந்திரா ஓய்வு பெற்றது முதல், கடந்த 5 ஆண்டுகளாக எந்த
ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இதுபோன்று போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில்
ஈடுபட்டு வருகிறார். காலை 6 மணிமுதல் 10 மணிவரையிலும், மாலை 5.30 மணிமுதல் 7.30
மணிவரையிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகிறார்.
மழை, வெயில், பனி என்றும் பாராமல் ஒரு நாள் தவறாமல் இந்த சமுதாய பணியை மிகுந்த
அக்கறையுடன் அவர் செய்து வருகிறார். வாகனங்கள் வெளியிடும் புகையில் நின்று சேவை
புரியும் இந்த மாமனிதருக்கு மூச்சுத் திணறல் பிரச்னை இருக்கிறது. ஆனாலும்,
அதைப்பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை.
நீண்ட நேரம் நிற்பதால் கால் வலிக்குமே என்றதற்கு," எனக்கு கால் வலி, மூச்சுத்
திணறல் எல்லாப் பிரச்னைகளும் இருக்கிறது. ஆனால், அதையெல்லாம்
பொருட்படுத்துவதில்லை. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் பலர் நேரத்துக்கு
அலுவலகம் செல்ல முடியாது. அதற்காகவே நான் போக்குவரத்தை சரிசெய்கிறேன். இதில், ஒரு மனநிறைவு கிடைக்கிறது. எனது உயிர் இருக்கும் வரை இந்த பணி
தொடரும்" என்றார்.
இதை பார்த்தாவது சமூக சேவைக்கான அர்த்தத்தை தெரிந்து கொண்டு போலி சமூக சேவகர்கள்
திருந்த வேண்டும். சம்பளம் பெற்றாலும் சரியான நேரத்துக்கு பணிக்கு செல்லாத பலரை
பார்க்கிறோம். ஆனால், சிறிதும் பலனை எதிர்பாராமல் தினமும் 6 மணிநேரம் சமூக சேவை
செய்யும் ராம் சந்திரா நீண்ட ஆயுள், ஆரோக்கியத்தோடு தனது பணியை தொடர
வேண்டும்.
No comments:
Post a Comment