அகத்திய மாமுனிவரின் நேரடி சிஷ்யராக
கருதப்படும் சித்தர் திருமூலர் அருளிய திருமந்திர பாடல்களில், போலிச்சாமியார்களை
அரசு ஒடுக்காவிட்டால் மழை பெய்யாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
திருச்சியை அடுத்த துறையூர் இந்திரா நகரில் அகத்தியர் சன்மார்க்க
சங்கம் ஓங்காரகுடிலில் செயல்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளாக ரங்கராஜ தேசிக ஸ்வாமிகள்
இச்சங்கத்தை தலைமையேற்று நடத்துகிறார். அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில்,
இலவச குடிநீர், இலவச திருமணங்கள் என்று சேவை புரிகின்றனர். பவுர்ணமி தோறும் இங்கு
நடக்கும் திருவிளக்கு பூஜையில், விதவைப் பெண்களும் பங்கேற்கலாம் என்பது
சிறப்பம்சம். இங்கு, காலை, மதியம், இரவு என தினந்தோறும் நித்ய அன்னதானம்
நடக்கிறது. திருக்குறள் குறித்து தினந்தோறும் ஓங்கார குடில் வரும் பக்தர்களுக்கு
விளக்கம் கூறும் ரங்கராஜ தேசிக ஸ்வாமிகள், தற்போது உண்மையான ஆன்மிகத்தை
பக்தர்களுக்கு போதிக்கும் பொருட்டு சித்தர்களின் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து
வருகிறார்.
சித்தர்களின் பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளை அளித்தாலோ அல்லது
தற்காலத்துக்கு நன்றாக பொருந்தும் வகையில் உள்ள சித்தர் பாடல்கள் குறித்தோ ரங்கராஜ
தேசிக ஸ்வாமிகளிடம் பக்தர்கள் கூறினால், உடனடியாக அப்பாடலை ஆராய்வார். பக்தர்கள்
கூறியது சரியாக இருக்கும்பட்சத்தில், ஓங்காரகுடிலில் உள்ள அறிவிப்பு பலகை,
அவர்களது பத்திரிக்கைகள் மற்றும் துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு வழங்குவதை கடந்த
ஐந்தாண்டாக வாடிக்கையாக வைத்துள்ளனர்.
*சர்ச்சை சாமியார்கள்: பெங்களூரு பிடதி ஆசிரம பீடாதிபதி நித்தியானந்தா, நடிகை
ரஞ்சிதாவுடன் இருப்பதை போன்ற வீடியோ, "டிவி'யில் வெளியானதால் உலகம் முழுவதும்
அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. இவ்விஷயம் சற்று ஓய்ந்த நிலையில், மதுரை இளைய
ஆதினமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டார். இதனால் கொதிப்படைந்த சிவனடியார்கள்
உள்ளிட்ட மதுரை ஆதின மீட்புக்குழுவினர், "ஆதினத்தை மீட்போம்' என்று
போர்க்கொடி உயர்த்தி, மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை
நடத்தி வருகின்றனர். தமிழகத்தை தாண்டியும் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள நித்தியானந்தா,
மதுரை ஆதினம் அருணகிரிநாதர் தவிர, ஊர், பெயர் தெரியாத ஏராளமான சர்ச்சை சாமியார்கள்
தமிழகத்தில் நீக்கமற நிறைந்துள்ளனர்.
*"காவி' விழிப்புணர்வு: சர்ச்சை சாமியார்கள் மட்டுமல்லாது போலிச்சாமியார்கள் பிரச்னையும்
தமிழகத்தில் பெரிய பிரச்னையாக உள்ளது. இவற்றை மையப்படுத்தி, மக்களிடையே
சாமியார்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த துறையூர் ஓங்காரகுடில்
முனைந்துள்ளது. காவிச்சாமியார்கள் யார்? அவர்களில் உண்மையானவர்கள் யார்? அவர்களை
இனம் காணுவது எப்படி? என்பது குறித்து அகத்திய மாமுனிவரின் நேரடி சிஷ்யராக
கருத்தப்படும், திருமந்திரம் என்ற அரிய மந்திரத்தை மக்களுக்கு வழங்கிய, சித்தர்
திருமூலரின் பாடல்களை இவர்கள் துண்டு பிரசுரங்களாக வெளியிட்டுள்ளனர்.
*மழை பெய்யாது:
போலிச்சாமியார்களை இனம்கண்டு, அவர்களை அரசு ஒடுக்கவில்லை என்றால் அரசுக்கும்,
மக்களுக்கும் இன்னல்கள் ஏற்படும். பருவமழை பொய்த்து பஞ்சம் ஏற்படும் போன்ற
எச்சரிக்கையை திருமூலர் பட்டியலிட்டு இருப்பது பெருத்த ஆச்சரியமாக இருக்கிறது.
"தற்போதைய காலக்கட்டத்துக்கும் பொருந்தும் வகையில் உள்ள இப்பாடல்களின் மீது
அரசு தனிக்கவனம் செலுத்தினால்போதும். நாட்டுக்கும், காவியை மட்டுமே நம்பும்
அப்பாவி பக்தர்களுக்கு மிகவும் நல்லது' என்று துண்டு பிரசுரங்களை படிக்கும்
பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment