Showing posts with label அகநானூறு. Show all posts
Showing posts with label அகநானூறு. Show all posts

Thursday, 16 August 2012

அகநானூறு » தோழி கூற்று(4)

நூல் : அகநானூறு_4
பகுப்பு : களிற்றியானை நிரை
பாடல் :  தோழி கூற்று
திணை:  முல்லை
பாடியவர்: குறுங்குடி மருதனார்

"முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,
கருவி வானம் கதழ் உறை சிதறி,
கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன்,
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட்
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே."



குறிப்பு: தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைத்து வாடும் தலைவியை நோக்கி, 'கார்காலம் வந்துவிட்டது தலைவன் விரைவில் வந்து விடுவான்' என்று, பருவ காலத்தைச் சுட்டிக் காட்டி ஆற்றுவிக்கும் தோழி.

விளக்கம்
ஆராய்ந்து தேர்ந்தெடுத்த வளையல்களை அணிந்த அரிவையே, கூர்மையான முனை இருப்பினும், நறுமணத்தால் மட்டுமே மனதை கொல்லும் அரும்புகள் முல்லைக் கொடிகளில் தோன்றிவிட்டன. சத்தம் ஏதுமின்றி தேற்றா மரம், கொன்றை மரம் ஆகியவற்றின் அரும்புகள் மெதுவாக மலரத் தொடங்கிவிட்டன.

மழை பொழிய ஆரம்பித்துவிட்டது, இனிமையான கார்காலம் இது!. இத்தனை நாளாகத் தண்ணீர் இல்லாமல் வருந்திய இந்த உலகத்தின் துயரத்தைப் போக்குவதற்காக, மின்னல் வெட்டுகிறது. மேகமும், இதுவரை சேமித்து வைத்த நீர் தனக்கு போதுமானதாக எண்ணி, மழைத்துளிகளை வேகமாகக் கீழே அனுப்புகிறது.

மழை தொடர்ந்து பெய்வதால், பரல் கற்களை உடைய பள்ளங்களில் எல்லாம் தண்ணீர் நிறைந்து நிற்கிறது. இரும்பை முறுக்கிவிட்டது போன்ற கருப்பான, பெரிய கொம்புகளைக் கொண்ட ஆண் மான்கள் அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு மகிழ்ச்சியாகத் துள்ளுகின்றன. ஒட்டுமொத்தக் காடும் அழகு பெற்றுவிட்டது.

சிறிய மலைகளைக் கொண்ட நகரம் உறையூர். அங்கே மக்கள் ஆரவாரத்துடன் திருவிழா கொண்டாடுகிறார்கள். அந்த உறையூருக்குக் கிழக்கே உள்ள நீண்ட, பெரிய மலையில் காந்தள் அரும்புகள் மலர்கின்றன, மென்மையான உன்னுடைய அழகை காண இந்த பருவக்காலத்தில் அதிக பூக்கள் மலர்ந்துள்ளன. ஆகவே, இந்தக் கார்காலத்தைப் பார்த்தவுடன் உன் காதலன், உன் ஞாபகத்தில் விரைவில் திரும்பி வருவான்.

அவனுடைய தேரில் கட்டபட்டிருக்கும் சிறப்பான பிடரியைக் கொண்ட குதிரைகள், தன் தலைகளை வளைத்து ஆட்டிக்கொண்டே கடிவாளம் நெகிழும்படி அதிவேகமாக ஓடும் சக்தி பெற்றது. அப்படி வேகமாக ஓடி வரும்போது குதிரையின் மணி சத்தம் கேட்கவேண்டுமே? இதுவரை சத்தம் ஏதும் கேட்கவில்லையே என்று பதறாதே!.

உன் காதலன் வருகின்ற வழியில், ஒரு பூஞ்சோலை இருகின்றது, அங்கே யாழின் இசையைப் போல் இனிமையாகச் ரீங்காரமிட்டபடி வண்டுகள் காதல் செய்யும். மென்மையான மனம் கொண்ட உன் காதலன், வண்டின் காதல் சங்கீதத்தை கேட்டவுடன் தேரை நிறுத்திவிடுவான். தன்னுடைய தேரின் மணிச் சத்தத்தைக் கேட்டு அந்த வண்டுகள் பயந்து விலகி விடுமோ என்று எண்ணி, குதிரைகளின் கழுத்தில் உள்ள மணிகளைச் சத்தம் எழாதபடி கழட்டிவிட்டுருப்பான். எனவே! அவன் நமக்கு அருகில் கூட வந்து கொண்டிருக்கலாம். அதனால், கவலைப்படாதே தோழி, அவன் விரைவில் இங்கே வந்துவிடுவான், உன்னுடைய பிரிவுத் துயரம் தீரும்..!!!

Friday, 10 August 2012

அகநானூறு » தலைவன் கூற்று(3)

நூல் : அகநானூறு_3
பகுப்பு : களிற்றியானை நிரை
பாடல் : தலைவன் கூற்று
திணை: பாலை
பாடியவர்: எயினந்தை மகனார் இளங்கீரனார்

இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்,
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?


குறிப்பு: தலைவன் தலைவியை மணந்து இல்லறம் நடத்தினான். அப்போது தன் நெஞ்சம் வற்புறுத்தப் பொருள் தேடும் பொருட்டுத் தலைவியை விட்டுப்பிரிந்தான்.

விளக்கம்: தலைவன் தலைவியை மணந்து இல்லறம் நடத்தினான். என்னதான் இல்லறம் நல்லறமாக திகழ்ந்த போதிலும், தலைவனுக்கு மன உளைச்சல். ஏன்? சேமித்த பொருளெல்லாம் தீர்ந்திடவே, எதிர்கால நலன் கருத்தில் கொண்டு, தன் நெஞ்சம் வற்புறுத்தப் பொருள் தேடும் பொருட்டுத் தலைவியை விட்டுப்பிரிந்தான். இந்த நிகழ்வினை மிக அருமையாக விளக்கும் பாடல் இது.
பொருள் தேடும் பொருட்டு தலைவியை பிரிந்த தலைவன் வழியில் - கடலை போன்று தோற்றம் கொண்ட நீர்நிலையில் வாழும் முதலையின் கடினமான தோலுக்கு நிகரான உருவ அமைப்பு கொண்ட ஓமை மரம். ஓமை மரத்தின் கரிய அடியினையுடைய பெரிய கிளைகளில், அப்போது வெளி வந்த குஞ்சுகளை காவல் காக்கும் நிலையின்றி, அதன் பசிக்கு உணவு தேட வெளிச்சென்று, இரை கொணர்ந்து, ஈன்று காவற்பட்ட வளைந்த வாயினையுடைய தன் பேடைக்கு, ஊட்டி மகிழ்ந்திருக்கிறது.

நீண்ட, நெருப்புக்கு இணையாக சிவந்த செவியினை உடைய எருவை சேவல், தன் பனங்கிழங்கை ஒத்த கால்களை கொண்டு மேட்டினை கிளறி விரும்பிய இரை கண்டவுடன், உற்சாகம் பீறிட வானை அளாவிய உச்சியினையுடைய சிறப்பு வாய்ந்த மலையின் சாரலில், கொக்கரித்துக்கொண்டே நடனமாக அசைந்து சென்று மகிழ்ந்திருக்கிறது.

இரையாக சிறு மிருகங்களை வேட்டையாடி கொன்று அதன் குருதி வழிய புலால் துர்நாற்றம் வீச மிச்சம் இருக்கும் மாமிசத்தை மிகுந்த சந்தோஷத்தோடு, காட்டு வழியில் கொள்ளை புரியும் மனிதருக்கு ஒப்பாக கவர்ந்து செல்லும் மன நிலைக்கு ஒப்ப தலைவன் - சின்னஞ்சிறிய இலைகளையுடைய மராமரங்களைக் கொண்ட அகன்ற நெடிய நிழலில் நின்று அணிகலன்களை ஈட்டி வரும் எண்ணத்தாலே கடந்து செல்வதாக காட்டி எம்மைப் பின்னின்று தூண்டும் நெஞ்சமே!

முருங்கை பூவினையொத்த, காண்பதற்கு இனிய சிவந்த வாயினையும், அழகிய இனிய மொழியினையும், ஆய்ந்த அணியினையுமுடைய, எம் தலைவி, வளைந்த குழையோடு மாறுபட்ட எண்ணங்கள், என் மனதில் நிழலாடி தலைவியின் பிரிவை தடுக்கும், எனவே விரைவில் பொருள் தேடி தலைவியிடம் சேர்.

இப்படி, இயற்கையின் அழகோடு, தலைவனின் மனதை காயமாக்காமல் தடுத்து பொருள் தேட வழி சொல்கிறார் எயினந்தை மகனார் இளங்கீரனார்..!!!

Thursday, 26 July 2012

அகநானூறு பாடல் » தோழி கூற்று(2)

நூல் : அகநானூறு_2
பகுப்பு : களிற்றியானை நிரை
பாடல் : தோழி கூற்று
திணை: குறிஞ்சி 
பாடியவர்: கபிலர் 

குறிப்பு: யாரும் அறியாமல் பகலில் தினைப் புனத்தில் தலைவியை சந்தித்து வந்த தலைவனிடம் தினை விளைந்து விட்டதால், இனி காவலுக்குத் தலைவி வரமாட்டாள், எனக் கூறித் திருமணத்திற்குத் தோழி தூண்டுவதாக அமைந்துள்ள அற்புதமான செம்மொழிப் பாடல்.

"கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலாவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
இவளும், இனையள் ஆயின், தந்தை
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே".

விளக்கம்: களவில் தலைமக்களாகிய தலைவனும் தலைவியும் கலந்தனர். இருவரின் இணையிலா நட்பு வளர்மதியாய் வளர்ந்தது. தகப்பனது தினை புனத்தின் விளைச்சலை காக்கைகள் குருவிகள் கொத்தாது, பகற்பொழுதில் தலைவி காவல் காத்து நிற்கிறாள். தலைவனது சந்திப்பிற்கு தினைப்புனம் துணையாகியது. பகலிலேயும் இரவிலேயும் ஒருவரை ஒருவர் கூடி மகிழ்கின்றனர். இவர்களது காதல் களத்திற்கு துணையாக நிற்கிறாள் தோழி. நாட்கள் நகர்கின்றன.

ஒரு பகற் பொழுதில் தலைவியைக் காண தலைவன் தினைப் புனத்திற்கு ஓடோடி வருகின்றான். நெஞ்சினிலே ஓவியமாய் வடித்து வைத்திருந்த தலைவியை அவனது கண்கள் தேடுகின்றன. தினைப் புனைத்தின் ஓரத்தில் ஒயிலாக எதிர் திசை நோக்கிப் பார்த்தவாறு
பெண்ணொருத்தி நிற்கக் கண்டு அவளருகே ஆவலாய் விரைகின்றான். சந்தடி கேட்டுத் திரும்பிய பெண் தன் தலைவியின் தோழியென உணர்கின்றான். தோழிக்கு, தலைவனது தேடல் புரிகிறது. "என் தலைவி எங்கே?" என்ற வினா எழுப்பு முன்னே புரிந்து கொண்ட தோழி பேசுகிறாள்.

"எங்கள் மலை நாட்டிற்குரியவனே, இங்கே வாழையும் பலாவும் பழுத்துக் கனிந்தன. அப்பழங்களிலேயிருந்து தேன் வழிந்தோடிப் பாறைச் சுனையில் நிறைந்தது. காட்டிலிலுள்ள பல காய்களையும் கனிகளையும் வயிறு புடைக்கத் தின்றதாலே ஏற்பட்ட வறட்சியைப் போக்கிக் கொள்ள ஓடி வந்தது ஓர் ஆண் குரங்கு. பாறைச் சுனையில் குளமாய்த் தேங்கியிருந்த தேனை நீர் என்றெண்ணிக் குடித்தது. மது ஒத்த தேனைக் குடித்த ஆண் குரங்கு மயங்கி மரமேற முடியாமல், மலைச்சாரலில் இயற்கையாய் அமையப் பெற்ற மலர்ப் படுக்கையில் கண்ணுங்குகிறது. இவ்வாறு விலங்கினங்கூட எதிர்பாராத இன்பத்தைத் தந்துதவும் மலைநாட்டின் தலைவனே" என ஒன்பது வரிகளிலே மலைநாட்டின் பேரழகைப் புலப்படுத்துகின்ற வகையில் தலைவியின் கூற்றாய் பதிவு செய்கிறார் கபிலர்.

இந்த அளவிற்குத் தோழி பேசியவள் தலைவனை நோக்கி திடுமென "குறித்த இன்பம் நினக் எவன்அரிய" என ஒரு வினாவை எழுப்புகிறாள். "எவன்" என்பது "என்ன?" எனும் பொருளைத் தரும். ஓர் அற்புதமான உவமையாலே தலைவனைத் தேற்றுவது அற்புதம். தலைவியைக் காணாது தவிக்கும் தலைவன், தலைவியின் இன்பம் இனி கைக் கூடாமல் போய் விடுமோ என தலைவன் நினைத்து துவண்டு விடுவானோ என்று நினைத்த தோழி, தலைவனைத் தேற்றுகிற நயம் நம் செம்மொழித் திறத்திற்கோர் எடுத்துக்காட்டு.

"தலைவா! நின் மலைநாட்டு விலங்குகளும் எதிர்பாராது இன்பத்தைப் பெறுகின்ற பேற்றினைப் பெற்றிருக்கின்ற போது, இம்மலை நாட்டுத் தலைவனாகிய உனக்குக் "குறித்த இன்பம்" எவ்வாறு கைகூடாமல் இருக்கும். எளிமையாகக் கிடைத்தற்குரியதுதான்" என்று பக்குவமாய் எடுத்துக் கூறுகின்ற பாங்கு மிக அற்புதம்.

மயக்கம் தெளிந்த தலைவன் தலைவியைக் காணாமைக்குக் காரணம் யாதோ? எனத் தலைவனையே சிந்திக்க வைத்து விடுகிறது தோழியின் கூற்று. இருந்தாலும் தலைவன் "எங்கே தன்னை ஒருவேளை தலைவி வெறுத்து விட்டாளோ" என சிந்தித்துவிடுவானோ என ஐயுற்ற தோழி, அடுத்த நொடியிலேயே "வெறுத்த ஏஏர் வேய்புரை பணைத்தோள் நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு இவளும் இணையன்" எனப் பேசுகிறாள். தலைவியின் உருவ அழகு அரை வரியில் அடங்கிவிடுகிறது. "வெறுத்த ஏஏர்" என்பதே அது. "செறிந்த அழகு" என்பது இதன் பொருள். "வெறு" என்ற சொல் "செறிவு" என்னும் பொருளுடையது. இன்று இச்சொல் "வெறுத்தல்" என வேறு பொருளைத் தருகிறது. சொற்களின் பொருள் காலத்தால் மாறுபடுவதற்கு இது ஓர் உதாரணம். இது பேச்சு மொழிகளில் காணப்படுகின்ற இயல்பு.

அடுத்து "நிறைந்த அழகு" என்பதனை நயமாகவும் நாகரிகமாகவும் "வேய்புரை பனைத்தோள்" என தோளின் உருண்டு திரண்டு மென்மையாமைந்த பெண் நலம் எடுத்துப் பேசப்படுகிறது. இத்தகை பேரழகு பொருந்திய பெருமாட்டியின் உள்ளம், தலைவனை எண்ணி எண்ணிக் கனல்பட்ட மெழுகாய் உருகி, அவள் வாடும் திசை நோக்கி ஓடுகிறது என்பதனை, "நின்மாட்டு இவளும் இணையள்" என்ற அழகான தொடரால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தோழியின் வாயிலாக சொல்லக்கேட்ட மூன்று சொற்களும், தன்னையே நினைந்து கரைந்துருகும் தலைவியினிடத்துப் பாகாய் உருகுமாறு தலைவனைச் செய்துவிடுகிறது. தோழி முன்னரே "நிறுப்ப நில்லா நெஞ்சமொடு" என்றாள். இதுவோ களவியல்- மற்ற இருவருக்கும் உள்ள நெஞ்சத் தொடர்பினை நெஞ்சக் கலப்பினை, கசிந்துருகும் காதலை அறியக் கூடாத காலம்.

அத்தருணத்தில் தலைவனைக் காண இயலாத நிலையில், தன்னந்தனியே வருந்தும் தலைவி, தன் நெகிழ்ந்த, சோர்வுற்ற, வாடிய, உடலாலும் புலம்பும் உள்ளத்தாலும், தன்னைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாதே என எண்ணுகிறாள். இதற்காகத் தன்னைவிட்டுத் தலைவனைத் தேடித்தேடி ஓடி நிற்கும் தன் நெஞ்சினைத் தன்வயப்படுத்துவதற்கு முயன்று முயன்று முடியாதமையாலே துடித்துத் துவண்டுவிட, அவளின் துடிப்பையும் துயரத்தையும் துடைப்பது ஒன்றே தன் கடமையெனறும், அதன்வழி "களவையும்" காத்தவளாவேன் என்பதனை உள்ளடக்கியே, தோழி "இவளும் இணையள்" எனக் கூறுகின்றாள்.

தற்போது தலைவியோ வீட்டில் இருத்தப்பட்டாள். அவள் பகற்பொழுதில் வெளியே வருவது இயலாது. அவள் வாழும் வீடோ கட்டுக்காவல் நிறைந்தது. எனவே இரவில் காவலர் அறியாவண்ணம் வரமுடிந்தால் வருக என நயமாய் உரைப்பதைப் பாருங்கள்-.
".... தந்தை
அருங்கடிக் காவலர் கோர்பதன்ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை" என்பது பாடல் வரிகள். தலைவியைக் காணலாம் எனும் நம்பிக்கை தலைவனின் நெஞ்சில் வேரூன்றியது. இவ்வேளையை எதிர்பார்த்த தோழி, வேறு ஓர் எண்ணத்திற்கு வித்திடுகின்றாள். தலைவா களவு போதும், இனி திருமணம்தான் உகந்தது உனக்கு. உலகறிய ஊரறிய திருமணம் செய்து கொண்டால், இதுபோன்று மறைந்து மறைந்து நின்று தயங்க வேண்டியதில்லை. பெருமுயற்சி கொண்டு காணக் கால்கடுக்க தவம் செய்ய வேண்டியதில்லை என நயமாக நல்லறம் காத்து வாழும் இல்லறத்திற்கு கோடிட்டுக் காட்டுகின்ற தோழியின் அறிவுரை தமிழர் பண்பாட்டின் முத்தாய்ப்பாய் உள்ளது.

"திங்களும் நிலாவும் நிரைமதியாய் ஊர் கோள் கொண்டது" என இறுதியாய்க் கூறுகிறாள். மூவேங்கை மலர்ந்ததால் தினை பற்றி அறுக்கப்படும். தினைப் புனங்காத்த மகளிர் வீட்டிற்கு அனுப்பப்படுவர். எனவே இனி தலைவி வரமாட்டாள். நீ அவளைக் காண்பது அரிது. எதிர்வரும் நிறைமதிநாள் திருமணத்திற்குகந்த நன்னாள். அந்நாளில் பிறர் வந்தும் பெண் கேட்கக் கூடும். எனவே காலங்கடத்தாது நீ வந்து திருமண முயற்சியை மேற்கொள்" என இறுதியாக தலைவனுக்கு வேண்டுகோள் வைக்கிறாள் தலைவி. காதலும், களவும், கைக்கிளையும் நிறைந்து விரியும் நம் செம்மொழிக் காப்பியமான அகத்துறை இலக்கியங்களின் மையக்கரு தமிழரின் உயர்நெறிக் கொள்கைகளையே கொண்டிருக்கிறது என்பதை இப்பாடலில் பார்க்க முடிகிறது


Tuesday, 24 July 2012

களிற்றியானை நிரை - அகநானூறு பாடல் : தலைவி கூற்று (1)

நூல் : அகநானூறு (2)

பகுப்பு : களிற்றியானை நிரை

பாடல் : தோழி கூற்று

திணை: குறிஞ்சி

பாடியவர்: கபிலர்

குறிப்பு: யாரும் அறியாமல் பகலில் தினைப் புனத்தில் தலைவியை சந்தித்து வந்த தலைவனிடம் தினை விளைந்து விட்டதால், இனி காவலுக்குத் தலைவி வரமாட்டாள், எனக் கூறித் திருமணத்திற்குத் தோழி தூண்டுவதாக அமைந்துள்ள அற்புதமான செம்மொழிப் பாடல்.

கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலாவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
இவளும், இனையள் ஆயின், தந்தை
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே. 


விளக்கம்: களவில் தலைமக்களாகிய தலைவனும் தலைவியும் கலந்தனர். இருவரின் இணையிலா நட்பு வளர்மதியாய் வளர்ந்தது. தகப்பனது தினை புனத்தின் விளைச்சலை காக்கைகள் குருவிகள் கொத்தாது, பகற்பொழுதில் தலைவி காவல் காத்து நிற்கிறாள். தலைவனது சந்திப்பிற்கு தினைப்புனம் துணையாகியது. பகலிலேயும் இரவிலேயும் ஒருவரை ஒருவர் கூடி மகிழ்கின்றனர். இவர்களது காதல் களத்திற்கு துணையாக நிற்கிறாள் தோழி. நாட்கள் நகர்கின்றன.

ஒரு பகற் பொழுதில் தலைவியைக் காண தலைவன் தினைப் புனத்திற்கு ஓடோடி வருகின்றான். நெஞ்சினிலே ஓவியமாய் வடித்து வைத்திருந்த தலைவியை அவனது கண்கள் தேடுகின்றன. தினைப் புனைத்தின் ஓரத்தில் ஒயிலாக எதிர் திசை நோக்கிப் பார்த்தவாறு
பெண்ணொருத்தி நிற்கக் கண்டு அவளருகே ஆவலாய் விரைகின்றான். சந்தடி கேட்டுத் திரும்பிய பெண் தன் தலைவியின் தோழியென உணர்கின்றான். தோழிக்கு, தலைவனது தேடல் புரிகிறது. "என் தலைவி எங்கே?" என்ற வினா எழுப்பு முன்னே புரிந்து கொண்ட தோழி பேசுகிறாள்.

"எங்கள் மலை நாட்டிற்குரியவனே, இங்கே வாழையும் பலாவும் பழுத்துக் கனிந்தன. அப்பழங்களிலேயிருந்து தேன் வழிந்தோடிப் பாறைச் சுனையில் நிறைந்தது. காட்டிலிலுள்ள பல காய்களையும் கனிகளையும் வயிறு புடைக்கத் தின்றதாலே ஏற்பட்ட வறட்சியைப் போக்கிக் கொள்ள ஓடி வந்தது ஓர் ஆண் குரங்கு. பாறைச் சுனையில் குளமாய்த் தேங்கியிருந்த தேனை நீர் என்றெண்ணிக் குடித்தது. மது ஒத்த தேனைக் குடித்த ஆண் குரங்கு மயங்கி மரமேற முடியாமல், மலைச்சாரலில் இயற்கையாய் அமையப் பெற்ற மலர்ப் படுக்கையில் கண்ணுங்குகிறது. இவ்வாறு விலங்கினங்கூட எதிர்பாராத இன்பத்தைத் தந்துதவும் மலைநாட்டின் தலைவனே" என ஒன்பது வரிகளிலே மலைநாட்டின் பேரழகைப் புலப்படுத்துகின்ற வகையில் தலைவியின் கூற்றாய் பதிவு செய்கிறார் கபிலர்.

இந்த அளவிற்குத் தோழி பேசியவள் தலைவனை நோக்கி திடுமென "குறித்த இன்பம் நினக் எவன்அரிய" என ஒரு வினாவை எழுப்புகிறாள். "எவன்" என்பது "என்ன?" எனும் பொருளைத் தரும். ஓர் அற்புதமான உவமையாலே தலைவனைத் தேற்றுவது அற்புதம். தலைவியைக் காணாது தவிக்கும் தலைவன், தலைவியின் இன்பம் இனி கைக் கூடாமல் போய் விடுமோ என தலைவன் நினைத்து துவண்டு விடுவானோ என்று நினைத்த தோழி, தலைவனைத் தேற்றுகிற நயம் நம் செம்மொழித் திறத்திற்கோர் எடுத்துக்காட்டு.

"தலைவா! நின் மலைநாட்டு விலங்குகளும் எதிர்பாராது இன்பத்தைப் பெறுகின்ற பேற்றினைப் பெற்றிருக்கின்ற போது, இம்மலை நாட்டுத் தலைவனாகிய உனக்குக் "குறித்த இன்பம்" எவ்வாறு கைகூடாமல் இருக்கும். எளிமையாகக் கிடைத்தற்குரியதுதான்" என்று பக்குவமாய் எடுத்துக் கூறுகின்ற பாங்கு மிக அற்புதம்.

மயக்கம் தெளிந்த தலைவன் தலைவியைக் காணாமைக்குக் காரணம் யாதோ? எனத் தலைவனையே சிந்திக்க வைத்து விடுகிறது தோழியின் கூற்று. இருந்தாலும் தலைவன் "எங்கே தன்னை ஒருவேளை தலைவி வெறுத்து விட்டாளோ" என சிந்தித்துவிடுவானோ என ஐயுற்ற தோழி, அடுத்த நொடியிலேயே "வெறுத்த ஏஏர் வேய்புரை பணைத்தோள் நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு இவளும் இணையன்" எனப் பேசுகிறாள். தலைவியின் உருவ அழகு அரை வரியில் அடங்கிவிடுகிறது. "வெறுத்த ஏஏர்" என்பதே அது. "செறிந்த அழகு" என்பது இதன் பொருள். "வெறு" என்ற சொல் "செறிவு" என்னும் பொருளுடையது. இன்று இச்சொல் "வெறுத்தல்" என வேறு பொருளைத் தருகிறது. சொற்களின் பொருள் காலத்தால் மாறுபடுவதற்கு இது ஓர் உதாரணம். இது பேச்சு மொழிகளில் காணப்படுகின்ற இயல்பு.

அடுத்து "நிறைந்த அழகு" என்பதனை நயமாகவும் நாகரிகமாகவும் "வேய்புரை பனைத்தோள்" என தோளின் உருண்டு திரண்டு மென்மையாமைந்த பெண் நலம் எடுத்துப் பேசப்படுகிறது. இத்தகை பேரழகு பொருந்திய பெருமாட்டியின் உள்ளம், தலைவனை எண்ணி எண்ணிக் கனல்பட்ட மெழுகாய் உருகி, அவள் வாடும் திசை நோக்கி ஓடுகிறது என்பதனை, "நின்மாட்டு இவளும் இணையள்" என்ற அழகான தொடரால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தோழியின் வாயிலாக சொல்லக்கேட்ட மூன்று சொற்களும், தன்னையே நினைந்து கரைந்துருகும் தலைவியினிடத்துப் பாகாய் உருகுமாறு தலைவனைச் செய்துவிடுகிறது. தோழி முன்னரே "நிறுப்ப நில்லா நெஞ்சமொடு" என்றாள். இதுவோ களவியல்- மற்ற இருவருக்கும் உள்ள நெஞ்சத் தொடர்பினை நெஞ்சக் கலப்பினை, கசிந்துருகும் காதலை அறியக் கூடாத காலம். அத்தருணத்தில் தலைவனைக் காண இயலாத நிலையில், தன்னந்தனியே வருந்தும் தலைவி, தன் நெகிழ்ந்த, சோர்வுற்ற, வாடிய, உடலாலும் புலம்பும் உள்ளத்தாலும், தன்னைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாதே என எண்ணுகிறாள். இதற்காகத் தன்னைவிட்டுத் தலைவனைத் தேடித்தேடி ஓடி நிற்கும் தன் நெஞ்சினைத் தன்வயப்படுத்துவதற்கு முயன்று முயன்று முடியாதமையாலே துடித்துத் துவண்டுவிட, அவளின் துடிப்பையும் துயரத்தையும் துடைப்பது ஒன்றே தன் கடமையெனறும், அதன்வழி "களவையும்" காத்தவளாவேன் என்பதனை உள்ளடக்கியே, தோழி "இவளும் இணையள்" எனக் கூறுகின்றாள்.

தற்போது தலைவியோ வீட்டில் இருத்தப்பட்டாள். அவள் பகற்பொழுதில் வெளியே வருவது இயலாது. அவள் வாழும் வீடோ கட்டுக்காவல் நிறைந்தது. எனவே இரவில் காவலர் அறியாவண்ணம் வரமுடிந்தால் வருக என நயமாய் உரைப்பதைப் பாருங்கள்-.
".... தந்தை
அருங்கடிக் காவலர் கோர்பதன்ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை" என்பது பாடல் வரிகள். தலைவியைக் காணலாம் எனும் நம்பிக்கை தலைவனின் நெஞ்சில் வேரூன்றியது. இவ்வேளையை எதிர்பார்த்த தோழி, வேறு ஓர் எண்ணத்திற்கு வித்திடுகின்றாள். தலைவா களவு போதும், இனி திருமணம்தான் உகந்தது உனக்கு. உலகறிய ஊரறிய திருமணம் செய்து கொண்டால், இதுபோன்று மறைந்து மறைந்து நின்று தயங்க வேண்டியதில்லை. பெருமுயற்சி கொண்டு காணக் கால்கடுக்க தவம் செய்ய வேண்டியதில்லை என நயமாக நல்லறம் காத்து வாழும் இல்லறத்திற்கு கோடிட்டுக் காட்டுகின்ற தோழியின் அறிவுரை தமிழர் பண்பாட்டின் முத்தாய்ப்பாய் உள்ளது.

"திங்களும் நிலாவும் நிரைமதியாய் ஊர் கோள் கொண்டது" என இறுதியாய்க் கூறுகிறாள். மூவேங்கை மலர்ந்ததால் தினை பற்றி அறுக்கப்படும். தினைப் புனங்காத்த மகளிர் வீட்டிற்கு அனுப்பப்படுவர். எனவே இனி தலைவி வரமாட்டாள். நீ அவளைக் காண்பது அரிது. எதிர்வரும் நிறைமதிநாள் திருமணத்திற்குகந்த நன்னாள். அந்நாளில் பிறர் வந்தும் பெண் கேட்கக் கூடும். எனவே காலங்கடத்தாது நீ வந்து திருமண முயற்சியை மேற்கொள்" என இறுதியாக தலைவனுக்கு வேண்டுகோள் வைக்கிறாள் தலைவி. காதலும், களவும், கைக்கிளையும் நிறைந்து விரியும் நம் செம்மொழிக் காப்பியமான அகத்துறை இலக்கியங்களின் மையக்கரு தமிழரின் உயர்நெறிக் கொள்கைகளையே கொண்டிருக்கிறது என்பதை இப்பாடலில் பார்க்க முடிகிறது.

Friday, 20 July 2012

அகநானூறு » கடவுள் வாழ்த்து

அகநானூறு - கடவுள் வாழ்த்து

கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு, அத் தோலா தோற்கே;
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே
செவ் வான் அன்ன மேனி, அவ் வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று,
எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை,
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்,
வரி கிளர் வயமான் உரிவை தைஇய,
யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்
தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே.


எழுதிய புலவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்.

அகநானூற்றின் கடவுள் வாழ்த்து, சிவபெருமானை நம் கண் முன்னே நிறுத்துவது போல பாடப்பட்டிருகிறது. உரை இல்லாமலேயே எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளது.


பொன் போல் ஒளி வீசும் மஞ்சள் நிறக் கொன்றை மலரை சூடியவனாக சிவபெருமான் போற்றப்படுகிறான். கொன்றை மலர் கார்காலத்தில் மலரும், அப்படி கார்காலத்தில் மலர்ந்த, பொன்னைப் போல் நிறம் கொண்ட, புத்தம் புதிய கொன்றை மலர்களைத் தாராகவும் மாலையாகவும் திருமுடியில் சுற்றியிருக்கும் கண்ணியாகவும் அணிந்திருக்கிறான் சிவபெருமான்.

தார் குறிப்பு:
ஆண்டாள் மாலை என்று தற்போது சொல்கிறோமே, இரண்டு குஞ்சம் வைத்து, கழுத்தில் சூடினால் நீண்டு இருபுறமும் தொங்குமே அதனைத் தார் என்று சொல்வார்கள். ஒரே ஒரு குஞ்சத்துடன் வளையம் போல் கட்டினால் அது மாலை. மிகவும் நெருக்கமாகச் சிறு சிறு வளையமாகக் கட்டினால் அது கண்ணி. இன்றைக்கும் வைதிகச் சடங்குகளின் போது கழுத்தில் மாலையும் கை மணிக்கட்டுகளில் கண்ணிகளும் அணிந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது.

தார் ஆண்களுக்கும், மாலை பெண்களுக்கும் கண்ணி இருபாலருக்கும் உரியவை. தார் ஆண்களுக்கு உரியது என்றால் அது எப்படி ஆண்டாள் மாலை ஆகியது என்று யாராவது கேட்டால் 'போய் ஆண்டாள் கதையைப் படியுங்கள். அவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆனதை நுண்மையாகப் படித்துப் பாருங்கள். அப்போது புரியும்' என்று சொல்லலாம்.

இந்தப் பாடலில் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்தவன் சிவபெருமான் என்று சொல்லும் போது அவன் ஆணுமாய் பெண்ணுமாய் அல்லனுமாய் நிற்பதைக் குறிக்கிறார் போலும் புலவர். உமையவளுக்கு இடபாகம் தந்து நிற்கும் சிவபெருமான் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்திருப்பதில் தடையென்ன?

'மார்பின் அஃதே' என்னும் அடுத்த அடியின் முதல் பகுதியை கொன்றைத் தாரன், மாலையன், கண்ணியன் என்ற தொடருடன் சேர்த்துப் படித்தால் சிவபெருமானின் மார்பு நிறைய கொன்றைப்பூவே நிறைந்திருக்கிறது என்ற பொருள் கிடைக்கிறது. ஆனால் உரையாசிரியர்கள் இதனை அதே வரியில் இருக்கும் அடுத்தப் பகுதியுடன் சேர்த்துப் பொருள் கொள்கிறார்கள். 'மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்' என்பதை ஒரே வரியாகக் கொள்கிறார்கள். இந்த அடிக்கு உரையாசிரியர்கள் தரும் பொருள் 'குற்றமில்லாத பூணூல் மார்பில் விளங்குகின்றது'. மை என்பது இங்கே கருமையைக் குறித்து 'மை இல்' என்பது குற்றமற்ற / வெண்ணிறமான என்ற பொருளைத் தருகிறது.

"நுதலது இமையா நாட்டம்" - நெற்றியில் இமைக்காத திருக்கண். சிவபெருமானின் திருவுருவத்தில் இருக்கும் சிறப்புகளில் அடுத்த சிறப்பாகப் புலவர் குறிப்பது நெற்றிக் கண். தேவர்களின் கண்கள் இமைக்காமல் இருக்குமாம். எல்லா தேவர்களைப் போல் சிவபெருமானின் திருக்கண்களும் இமைக்காமல் இருக்கும் போது அவரது சிறப்பான மூன்றாவது கண்ணும் இமைக்காமல் இருக்குமாம் நெற்றியில்.

"இகல் அட்டு கையது கணிச்சியொடு மழுவே; 
மூவாய் வேலும் உண்டு அத்தோலாதோற்கே!" - தேவதேவனான சிவபெருமான் தோல்வி என்பதே அறியாதவன். அதனால் அவனுக்குத் தோலாதவன் என்று ஒரு திருப்பெயரைத் தருகிறார் புலவர். எந்த வித தடையையும் நீக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவன். பகையெனும் தடையை நீக்கி அவன் திருக்கைகளில் விளங்குகின்றன மழுவும் மூவாய் வேலான திரிசூலமும். இகல் என்றால் பகை. பகையை வென்று கையில் இருக்கிறது மழு. மூவாய் வேலும் அந்த தோல்வியில்லாதவனிடம் உண்டு. கணிச்சி என்றாலும் மழு என்றே பொருள் சொல்கிறது அகரமுதலி. இங்கே புலவர் 'கணிச்சியொடு மழுவே' என்று ஏன் சொன்னார் என்பது புரியவில்லை. கணிச்சி என்றால் குந்தாலி என்று ஒரு பொருளை உரையாசிரியர் தந்திருக்கின்றனர்.

"ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே" -சிவபெருமானது ஊர்தி தரும வடிவான காளை; ஏறு. அவன் ஒரு பாகத்தில் இருப்பவள் உமையவள். சேர்ந்தோள் உமையே.

"செவ் வான் அன்ன மேனி" - அவனது திருமேனி சிவந்த வானத்தைப் போன்ற நிறம் உடையது. செவ்வான் அன்ன மேனி. அந்த வானில் விளங்கும் பிறை நிலவைப் போல் வளைந்த வெண்மையான கூர் பல்லினை உடையவன்.

"அவ் வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று" - விளங்கு என்றால் வளைவு. நேராக நில்லாமல் வளைந்து நிற்பதால் தான் மிருகங்களை விலங்கு என்றனர் போலும். வால் என்றால் வெண்மை. வை என்றால் கூர்மையான. எயிறு என்றால் பல். சிவபெருமானின் உருத்திர வடிவம் இங்கே போற்றப்படுகின்றது போலும். இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை என்று ஐந்து கரத்தனையும் இதே உவமையுடன் இன்னொரு பெரியவர் போற்றுவதையும் நினைவு கூரலாம்.

"எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை" - தீ கொழுந்து விட்டு எரிவதைப் போல் மேல் நோக்கிக் கட்டி விளங்கும் பல சுற்றுகள் கொண்ட சடை முடியை உடையவன் சிவபெருமான். மெல்லிய கோடு போல் இருக்கும் இளைய பிறையைச் சூடி ஒளிவிடும் தலை.

"முதிராத் திங்களொடு சுடரும் சென்னி" - முதிராத் திங்களொடு சுடரும் சென்னி. மற்றவர் இளம்பிறை என்று சொல்ல இப்புலவர் முதிரா திங்கள் என்று சொன்னது பெரும் சுவையாக இருக்கிறது.

"மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்" - திங்களை முதிர்ச்சியடையாத என்று சொன்னதைப் போல், என்றும் இளமையுடன் திகழும் அழிவில்லாத தேவர்களை மூவா அமரர் என்கிறார் புலவர். தேவரும் முனிவரும் பிறரும் என்று இருக்கும் யாவரும் அறிய முடியாத தொன்மையான மரபினை உடையவன் சிவபெருமான். எல்லோர்க்கும் மூத்தவன்.

"வரி கிளர் வயமான் உரிவை தைஇய" - வரியை உடைய புலித்தோலாடையை அணிந்தவன் சிவபெருமான். இங்கே வயமான் என்று குறித்திருக்கிறார் புலவர். அதன் நேர் பொருள் மான். மான் தோலாடையும் சிவபெருமானுக்கு உண்டு. அதனால் இங்கே மான் தோலாடையைத் தான் புலவர் குறித்துள்ளார் என்று சொல்லலாம். ஆனால் மானுக்கு புள்ளிகள் உண்டு; வரிகள் இல்லை. இங்கே வரி கிளர் என்று சொன்னதால் இது புலித்தோலாடையைத் தான் குறிக்கிறது என்று பொருள் கொண்டார்கள் போலும் உரையாசிரியர்கள். உரிவை என்றால் உரிக்கப்பட்ட தோல் ஆடை.

"யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்" - யாழைப் போல் இனிமையான குரலையும் கருமையான கழுத்தினையும் உடைய அந்தணன் சிவபெருமான். இங்கே யாழ் ஆகுபெயராக மறைகளைக் குறித்தது என்று உரைகள் சொல்கின்றன. அந்தணன் என்று இங்கே குறித்தமையாலும் சிவபெருமானது திருவாக்கு மறைவாக்கு என்பதாலும் அப்பொருளும் பொருத்தமுடைத்தே என்று தோன்றுகிறது.

"தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே" - தொல் முறை மரபினன் சிவபெருமான் என்று முன்னர் சொன்னார் புலவர். முடிவும் இல்லாதவன் என்று இங்கே சொல்கிறார். முடிவு இல்லாத சிவபெருமானின் திருவடி நிழலில் உலகம் நிலையாக நிற்கின்றதே என்கிறார். இந்த உலகையும் மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் ஆனவர்களைக் காக்கத் தானே ஆலகாலத்தை உண்டு மணிமிடற்றன் ஆனான் சிவபெருமான். அவன் திருவடி நிழலின் பெருமை சொல்லவும் அரிதே!

Thursday, 19 July 2012

அகநானூறு


அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்

இது அகநானூறு மூன்று பகுப்புகளாக அமைந்துள்ளது. அவை:

களிற்றியானைநிரை:

1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.

மணிமிடை பவளம்:

121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.

நித்திலக் கோவை:

301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.

அகநானூற்றால் அறிய வரும் வரலாற்றுச் செய்திகள்:

அகப்பொருள் நூலான அகநானூறில் புறப்பொருள் செய்திகளும் உள்ளன. தித்தன், மத்தி, நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், போன்ற பெருநில வேந்தர்கள் பற்றியும், ஆதன்எழினி, ஆட்டனத்தி, அன்னிவிஞிலி, பாணன், பழையன் போன்ற குருநில மன்னர்கள் பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது. அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் 20,25 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலும் வாணிபமும்:

நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க "குடவோலை முறை" பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்திஅகந்நானூறு வழி தெரிகிறது. யவனர்கள் வாசனைத் பொருளான மிளகைப் பெறுவதற்காகவே தமிழத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற செய்தியை

"யவனர் தந்தவினைமாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியொடு பெயரும்"

என்னும் வரிகள் மூலம் அறியலாம். இது தமிழர்களின் வாணிப வளத்தைக் காட்டுகிறது.

வாழ்க்கை முறை மற்றும் பண்பாடுகள்

அகநானூற்றின் 86, 136 ஆம் பாடல்களில் தமிழர் தம் திருமண நிகழ்ச்சி கூறப்படுகிறது. "மணவிழாவில் மணப்பந்தலில் வெண்மணல் பரப்பி விளக்கேற்றி, மணமகளுக்கு நீராட்டி, தூய ஆடை அணிகள் அணிவித்து, இறைவழிபாடு நடத்தி, திங்கள் உரோகிணியைக் கூடிய நல்ல வேளையில் வாகை இலையோடு அருகின் கிழங்கையும் சேர்த்துக் கட்டப்பெற்ற வெண்ணூலை தலைவிக்குக் காப்பாகச் சூட்டுவர்"- என்று விளக்கப்படுகிறது.