இருசக்கர வாகன திருட்டை தடுக்கும் நவீன தொழில்நுட்பம் கொண்ட புதிய பாதுகாப்பு கருவி பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொபைல்போனுடன் ஒருங்கிணைந்து செயல்படும் இந்த கருவியை வோடபோன் நிறுவனத்துடன் இணைந்து ஐ-ட்ரான்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பைக் திருட்டு சர்வசாதாரணமாகிவிட்டது. எவ்வளவு பூட்டு
போட்டிருந்தாலும், நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட பைக்குகளாக இருந்தாலும்,
கொள்ளையர்கள் எளிதில் திருடிச் சென்று விடுகின்றனர். இதுபோன்று அதிகரித்து வரும்
பைக் திருட்டு போலீசாருக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், பைக் திருட்டை தடுக்கும் அதிநவீன தொழில்நுட்பம்
கொண்ட டிகாப் என்ற பெயரில் புதிய கருவியை ஐ-ட்ரான்ஸ் நிறுவனம் பெங்களூரில்
அறிமுகம் செய்துள்ளது. வோடபோன் தொலைதொடர்பு நிறுவனத்துடன் இணைந்து இந்த கருவியை
ஐ-ட்ரான்ஸ் விற்பனைக்கு விட்டுள்ளது.
வோடபோன் சிம் கார்டு பொருத்தப்பட்ட இந்த கருவி பைக்கில்
பொருத்தப்படும். உரிமையாளரின் மொபைல்போன் மூலம் இந்த கருவியை கட்டுப்படுத்த
முடியும். உரிமையாளர் தவிர வேறு யாரேனும் பைக்கை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தால்
அதுகுறித்து உரிமையாளரின் மொபைல்போனுக்கு தகவல் பறந்து வரும்.
மேலும், பைக் ஸ்டார்ட் செய்து மர்ம நபர்கள் எடுத்துச் சென்றாலும்
பைக் எங்கிருக்கிறது என்பது குறித்த எஸ்எம்எஸ் தகவல் மொபைல்போனுக்கு தொடர்ந்து
வந்து கொண்டே இருக்கும். மேலும், போலீசார் உதவியுடன் உடனடியாக பைக்கை
கண்டுபிடித்து விட இந்த கருவி பெரிதும் உதவும் என்று ஐ-ட்ரான்ஸ் தெரிவித்துள்ளது.
பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி முன்னிலையில் இந்த
கருவி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.4,890 விலையில் இந்த புதிய பைக்
திருட்டு தடுப்பு கருவி விற்பனைக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment