Tuesday 24 April 2012

குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும்

குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும்

மோதிரம் போட்டிருப்பவரின் கைகளால் குட்டுப்படலாம் தப்பில்லை என்பதுதான் இதற்கான பொருள்.

நம் தலையில் குட்டுபவர் மோதிரம் போட்டிருந்தால் என்ன காப்பு போட்டிருந்தால் என்ன? மோதிரம் போட்டிருப்பவர் கையை பின்புறமாக திருப்பிக் குட்டினால் மோதிரம் தலையில் பட்டு சில நேரங்களில் காயம் கூட ஏற்படலாம். அப்படி இருக்கையில் மோதிரம் அணிந்தவரின் கையால் குட்டுப்படுவதில் என்ன பெருமை இருக்கிறது?

மேலும் நாம் தவறு ஏதும் செய்யாத போது அவரிடம் ஏன் குட்டு வாங்கணும்?

இப்படி எல்லாம் நினைக்கத்தோன்றுகிறதுதானே.

ஆனால் இதற்கு உண்மையான பொருள் உயர்ந்த இடத்தில் உள்ள ஒருவரின் கையால் பாராட்டுப்பெறுவது என்பதுதான் இதன் உண்மையானப் பொருள். அப்படி பாராட்டு வாங்கும் போது நமக்கு எளிதில் அங்கீகாரம் கிடைப்பதோடு நமக்கும் பாராட்டும் புகழும் விரைவில் வந்து சேரும். பாடலாசிரியராக வரவேண்டும் என்று விரும்பும் ஒரு கவிஞருக்கு இசையில் சிறந்த புகழ்ப்பெற்ற இசையமைப்பாளர் ஒருவர் அங்கீகாரம் கொடுத்து அவர் திறமையை பிறர் அறிய வெளிச்சம் போட்டு காட்டுவதை உதாரணமாகக் சொல்லலாம்.

தோன்றிற் புகழோடு தோன்றுதல் என்கிறார் வள்ளுவர்.
மோதிரக்கையால் குட்டுப்பட யாருக்குதான் ஆசை இருக்காது?

இதே பழமொழியை வேறுமாதிரி கோணத்திலும் சொல்லப்படுகிறது.

மோதகக் கையனை குட்டிக் கொள் என்பதுதான் மோதிரக் கையால் குட்டுப்படணும் என்றாகி விட்டது என்று சொல்கிறார்கள்.

மோதகக் கையன் யார்?

மோதகம் என்றால் கொழுக்கட்டை.கொழுக்கட்டை விரும்பி யார்? பிள்ளையார்தான்.

`மூஷிக வாகன மோதக ஹஸ்த என்ற பாடலும், `முதாகரத்த மோதகம் ஸதாவிமுக்தி சாதகம்' என்ற பாடலும் பிள்ளையாரையும் கொழுக்கட்டையையும் குறிப்பவை.

பிள்ளையார் கோயிலுக்குப் போனால் தோப்புக்கரணம் போட்டு இரு பக்கமும் நெறிப்பொட்டில் குட்டிக்கொள்வதை காணலாம். ஏன் இப்படி செய்கிறோம்?

இதற்கு அறிவியல் காரணம் சொல்லப்படுகிறது.

நம் உடலில் பஞ்ச பூதங்கள் இயங்குகின்றன. அவற்றை தட்டி எழுப்பவே நாம் தோப்புக்கரணம் போடுகிறோம். நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்வதில் விஞ்ஞான காரணம் சொல்லப்படுகிறது. அமெரிக்கா லாஸ் ஏஞ்சலைச் சேர்ந்த எரிக்ராயபின்° என்ற மருத்துவர் இப்படி குட்டிக் கொள்வதால் மூளையின் செல்கள் சக்திப் பெறுவதாகக் கூறுகிறார். தன்னிடம் வரும் நோயாளிகளுக்கும் இந்த எளிய பயிற்சியை சிபாரிசும் செய்கிறார்.
காது பிடித்து தோப்புக்கரணம் போடுவது அக்குப்பஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுவதாக யேல் பல்கலைக்கழக மருத்துவர் யூஜினியஸ் யங் என்பவர் தெரிவிக்கிறார். நம்முடைய நம்பிக்கைகளில் மருத்துவம் இருப்பதை அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். சரி பிள்ளையாருக்கு ஏன் குட்டிக் கொள்ள வேண்டும்? முருகனுக்கோ பிற கடவுளுக்கோ ஏன் குட்டிக்கொள்வதில்லை.
அகத்திய முனிவர் ஒரு முறை கமண்டலத்தில் நீர் எடுத்துக்கொண்டு பயணம் செய்து கொண்டிருந்தார். ஓரிடத்தில் கமண்டலத்தை வைத்து விட்டு ஓய்வெடுக்கும் போது காகமாக உருவெடுத்து வந்த பிள்ளையார் அந்த கமண்டல நீரை சாய்த்து விட அந்நீர் பெருக்கெடுத்து ஓடியது. காகம் தள்ளி விரிந்து ஓடியதால் காவிரி என்று அந்நதிக்கு பெயர் வந்தது. அடைத்து வைக்கப்பட்டிருந்த நீரை தள்ளியது யார் என்று அகத்தியர் தேடும் பொழுது பக்கத்தில் ஒரு சிறுவன் நின்றுக்கொண்டிருந்தான். அவன்தான் நீரை தள்ளி இருக்க வேண்டும் என்ற கோபத்துடன் அகத்தியர் அவனது தலையில் குட்டப் போக, அச்சிறுவன் பிள்ளையாராக மாறி காட்சியளித்தான்.
பிள்ளையாரைப் பார்த்ததும் அகத்தியரின் கை சட்டென்று நின்றது. அவரைப் போய் குட்டப்போனோமே என்று வருந்தியவர் பிறகு தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். பிள்ளையார் சிரித்தபடி நின்றார்.
அது முதல் பிள்ளையாரை மகிழ்வூட்ட தலையில் குட்டிக் கொள்வதாகவும் நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment