Friday 2 November 2012

கார்ப்பரேட் மயமாகும் இந்திய விவசாயம்!. கண்ணீரில் மூழ்கும் விவசாயிகள்!!


இன்றைய இளைய தலைமுறையினர் அரிசி சோறு சாப்பிடுவதை விட பர்கர், பீட்ஸா போன்ற துரித உணவுகளை சாப்பிடுவதைத்தான் விரும்புகின்றனர்.
அரிசியைப் பற்றியும், நெல் உற்பத்தியைப் பற்றியும் வருங்கால சந்ததியினர் மறந்து போய்விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு விவசாயம் சார்ந்த தொழில்கள் மறக்கப்பட்டு வருவதாக கவலையோடு பதிவு செய்தது புதிய தலைமுறையின் ரௌத்திரம் பழகு நிகழ்ச்சி



உழுதவன் கணக்கு பார்த்தால் : 

வறட்சி ஏற்பட்டால் வானத்தை பார்ப்பதும், வெள்ளம் வந்தால் கண்ணீரில் மூழ்குவதும் விவசாயிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. விவசாயிகளின் துயர் துடைக்க ஆளும் அரசுகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.


பலகட்ட தாக்குதல்கள் : 

மழை வெள்ளத்தால் சேதம். தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை கையேந்துவதால் சரியான நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் வறட்சியில் வாடும் பயிர்கள் என பலகட்ட தாக்குதல்களை விவசாயிகள் சந்திக்கின்றனர்.


விவசாயிகள் தற்கொலை : 

இந்தியாவில்தான் விவசாயிகள் ஆண்டுதோறும் சராசரியாக 16000 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிபரம். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 2,56,193 விவசாயிகள் தற்கொலை கொண்டுள்ளனராம்.


நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வு : 

மக்கள் தட்டில் உணவு போட்ட விவசாயிகள் தங்கள் கழுத்தில் சுருக்குக் கயிரைப் போட்டுகொள்கின்றனர். நகருக்கு உணவு கொடுத்த விவசாயிகள் பிழைப்புத் தேடி நகர்புறங்களுக்கு இடம்பெயரத் தொடங்கிவிட்டனர். இதனால் இனி விவசாயம் என்னவாகும் என்பதுதான் கவலை.


உணவுப் பஞ்சம் ஏற்படும் : 

இன்றைக்கு விவசாயம் முற்றிலும் மாறிவருகிறது. உணவுப்பயிர்களை விடுத்து பணப்பயிர்களை பயிரிடத் தொடங்கிவிட்டனர். இதனால் வருங்காலத்தில் இந்தியா மிகப்பெரிய உணவுப் பஞ்சத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.


விளை நிலங்கள் குறைந்துள்ளன : 

நாடாளுமன்றத்தில் பேசிய இந்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சரத்பவார், நாடு முழுவதும் விளைநிலங்களின் பரப்பளவு 2 சதவிகிதம் குறைந்திருப்பதாக கூறினார். 

இந்த நிலங்களை நம்பியிருந்த லட்சக்கணக்கான விவசாயிகளின் கதி என்னவாகும் என்று கேள்வி எழுப்பியது ரௌத்திரம் பழகு.

மானியத்தை குறைத்த அரசு :

புதிய பொருளாதார கொள்கையில் எதுவும் இல்லை. உர மானியம், மின்சார மானியம் என பலவற்றையும் நிறுத்தப் போவதாக அபாயகரமான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது அரசு. விவசாயத்தை நம்பியுள்ள நாட்டில் விவசாயிகளை ஊக்குவிக்கும் எந்த திட்டங்களையும் அரசு அறிவிக்கவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.


கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் :

அமெரிக்கா போன்ற நாடுகளில் விவசாயத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் விவசாயத்திற்கு மானியம் கொடுக்க மறுக்கப்படுகிறது. இந்திய விவசாயம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கு மாறப்போகிறது. அப்படி எனில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் கதி இன்னமும் மோசமாகும் அபாயம் உருவாகியுள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.


பள்ளிகளில் பாடம் இல்லை : 

இதே நிலை நீடித்தால், வருங்கால சந்ததிக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாமலேயே போய்விடும். விவசாயம் சார்ந்த கல்வி பள்ளிப் பருவத்திலேயே அளிக்கப்படுவதில்லை.


கப்பலில் அரிசி வருமா?

இந்தியாவின் வளர்ச்சிக்கு மூல காரணமாக இருப்பது விவசாயம்தான். ஆனால் நம் நாட்டில் உற்பத்தி செய்த உணவுப் பொருளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை. இதே நிலை நீடித்தால், கப்பலில் அரிசி எப்போது வரும் என்று கையேந்தி நின்ற காலம் மீண்டும் வந்தாலும் ஆச்சரியமில்லை என்று ஆழ்ந்த கவலையோடு நிகழ்ச்சியை நிறைவு செய்தது ரௌத்திரம் பழகு.

No comments:

Post a Comment