Friday 23 November 2012

வாத்தியங்களில் வீணையின் சிறப்பு தெரியுமா?

மற்ற இசைக்கருவிகளுக்கு இல்லாத சில தனிச் சிறப்புகள் வீணைக்கு உண்டு. அது, தோற்றத்துக்கு இனிய உருவத்தை உடையது. பெரு முழக்கம் செய்யாமல் தார ஸ்தாயியிலும் மந்தர ஸ்தாயியிலும் இனிதாக இசைப்பது.

வீணையை மீட்டி நிறுத்தி விட்டால், அதன் இன்னொலி உடனே நின்றுவிடுவதில்லை. அதன் ஒலி அலைகள் பின்னும் நீண்டு ஒலித்து மெல்லிய அலைகளைப் போல அடுத்தடுத்துப் பரவி நிற்கும். வலது கையிலே மீட்டிய ஒலி இடக்கையில் வாசிக்கும் போதும் இடையறாது ஒலித்து இன்பத்தை உண்டாக்குகிறது. மற்ற வாத்தியங்களில் அப்படியல்ல; வாத்தியத்திலிருந்து கையை எடுத்தவுடன் ஒலியும் நின்றுவிடும். பிடி கருவியில் வில்லை எடுத்துவிட்டால் உடனே ஒலி நிற்பதைக் காணலாம்.

வீணை அத்தகையதல்ல. அதனுடைய கமகம் வேறு எதற்கும் வராது. பிரணவ நாதம் வாத்தியத்தின் அமைப்புக்கேற்றபடி நீண்டு ஒலிக்கும். சரியானபடி அமைக்கப்பட்ட வீணையில் இந்த நாதம் நெடுநேரம் நிற்கும். இதனால் மனிதக் குரலைப் போலவே தோன்றும்படி வாசிக்க முடிகிறது. ஸ்வரங்களையும் கமகங்களையும் தக்கபடி இசைக்க முடிகிறது.

சக்தி அம்சமும் சிவ அம்சமும் உடைய வீணையில் நயமும் கம்பீரமும் ஒருங்கே திகழ்கின்றன. ஆத்மானுபூதிக்குத் துணை நிற்கும் வாத்தியம் வீணை. அதனால் இதைத் தேவவாத்தியம் என்பார்கள். தெய்வத் திருவருளைப் பெறுவதற்கும், ஆத்மாவின் பக்திப் பெருக்கை வெளியிடுவதற்கும் ஏற்றதாக விளங்குகிறது வீணை. யாக்ஞவல்கியர் தம்முடைய மனைவியருள் கார்கியை மட்டும் தம்முடன் மோட்சத்துக்கு அழைத்துச் சென்றாராம். மைத்ரேயியை அழைத்துச் செல்லவில்லை. அவளிடம், நீ உன் வீணைத் திறனால் மோட்ச லோகத்துக்குத் துணை இன்றியே வரலாம் என்று அவர் கூறினார். வீணையின் நாதம் மோட்ச இன்பத்தையும் கூட்ட வல்லது என்கிற தத்துவத்தையே இது குறிக்கிறது.

வீணை வகைகள்: வீணையை சிவபெருமானே உருவாக்கினார். அதனால் அதற்கு ருத்திர வீணை என்றும் பெயர். உருவ வேறுபாட்டினால் வீணையின் பெயர்களும் வேறுபடும். வட நாட்டில் ருத்திர வீணை, விசித்திர வீணை, கச்ச வீணை, சிதார், ஸூர் பஹார், ஸூர் சிங்கார் என்ற வகை வீணைகள் உள்ளன. தமிழ்நாட்டில் வீணையும், கோட்டு வாத்தியம் என வழங்கும் மகா நாடக வீணையும் வழக்கத்தில் உள்ளன. தென்னாட்டில் இசைக்கப்படும் வீணைக்கு சரஸ்வதி வீணை என்ற பெயரும் உண்டு.

No comments:

Post a Comment