'1941-ம் ஆண்டு அந்திப் பொழுது! சபர்மதி
ஆசிரமத்தில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்
காந்தியடிகள். அந்த அந்திப் பொழுதில் லாந்தர் விளக்கின் வெளிச்சத்தில் கொஞ்சும்
எழிலுடன் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியதை முதன் முதலில் கேட்டு பிரமித்தார்
காந்தி.
சுப்புலட்சுமியின் பாடலைக் கேட்ட காந்தியடிகள் இவ்வாறு
கூறினார்.
"அவரது குரல் மிக இனிமையாக இருக்கிறது. பிரார்த்தனை கீதம் பாடும்போது
தன்னையே இழந்து பாடுகிறார்.''
தேச விடுதலைக்குத் தன்னை முழுதும் அர்ப்பணித்துக் கொண்ட காந்தியடிகள் 1947-ல்
விடுதலை பெற்ற இந்தியாவைக் கண்டு மகிழ்ந்தார். சுதந்திர இந்தியாவில் 1947-ல்
அக்டோபர் 2-ல் காந்தியடிகள் தனது பிறந்தநாளைக் கொண்டாட எண்ணினார். அப்போது
மீராவின் பஜனைப் பாட்டான "ஹரிதும் ஹதோ' வை சுப்புலட்சுமி பாடிக் கேட்க
வேண்டும் என்கிற ஆசை அவருக்கு ஏற்பட்டது.
சுசேதா கிருபளானி மூலம் சுப்புலட்சுமியின் கணவர் சதாசிவத்துக்கு செய்தி அனுப்பி
வைக்கப்பட்டது. ""சுப்புலட்சுமிக்குப் பாடத் தெரியாது. வேறு யாரையாவது
பாடச் சொல்லுங்கள்'' என்று பதிலனுப்பினார்
சதாசிவம்.
சதாசிவத்தின் பதில் காந்தியடிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை. ""எனக்கு
வேறு யாரும் பாடுவதைவிட சுப்புலட்சுமி பாட்டைப் பாட வேண்டாம்; அவர் குரலில்
பேசினாலே போதும்'' என்றார்.
இறுதியில் "ஹரி, நீதான் மக்கள் துயரத்தைக் களைய வேண்டும்' என்ற பாடலை ஓர்
இரவுக்குள் கற்று, பாடிப் பயிற்சி பெற்று, பதிவு செய்யப்பட்ட ஒலிநாடா விமானத்தில்
தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மனதை உருக்கும் அந்தப் பாடல் வரிகளை சுப்புலட்சுமியின் குரலில் காது குளிரக்
கேட்டு மகிழ்ந்து போனார் மகாத்மா!
("தமிழ்நாட்டு பாரத ரத்தினங்கள்' என்ற நூலிலிருந்து)
No comments:
Post a Comment