நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் 8 வகையான
பழங்குடியின மக்களுமே பண்டைய பழங்குடியின மக்கள் என்றுதான் அழைக்கப்படுகின்றனர்.
இந்த பழங்குடியின மக்களின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவை மிகத் தொன்மையானது
என்பதாலேயே இந்த சிறப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பு பெற்றவர்களை மேலும் சிறப்பிக்கும் வகையில் மைசூரிலுள்ள இந்திய
மானுடவியல் ஆய்வுத்துறையின் தென்னிந்திய மையம், கோவையிலுள்ள தூர்தர்ஷன் மையம்
மற்றும் உதகை அகில இந்திய வானொலி நிலையம் ஆகியவை இணைந்து "பழங்குடி நாதம்'
என்ற பெயரில் பந்தலூர் பகுதியிலுள்ள கையுண்ணி பழங்குடி கிராமத்தில்
நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றபோதுதான் நீலகிரி மாவட்டத்தில் 8 வகையான பண்டைய
பழங்குடியினத்தவர் வசிப்பது பெரும்பாலானோருக்கே தெரியவந்தது. இவ்வகையாக தோடர்,
கோத்தர், இருளர், காட்டுநாயக்கர், பணியர் ஆகியோருடன் குரும்பர் இனத்தில் ஆலு
குரும்பர், பெட்ட குரும்பர் மற்றும் முள்ளுக்குரும்பர் என 3 பிரிவுகளுமாக மொத்தம்
8 வகையான பழங்குடியினத்தவர் நீலகிரியில் வசிக்கின்றனர்.
நீலகிரியில் வசிக்கும் பண்டைய பழங்குடியினத்தவரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு
குறைந்து கொண்டே வருவதாலும், அவர்களை ஒன்று திரட்டி அவர்களுக்குள் கலாசார உறவுகளை
மேம்படுத்துவதற்காகவும், அவர்களின் பாரம்பரிய கலைகள், இசை உள்ளிட்டவை
அழிந்து விடாமல் பாதுகாக்கவும். ஆவணப்படுத்துவதற்குமே இத்தகைய முயற்சி
மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மானுடவியல் துறையின் இணை இயக்குநர்
சி.ஆர்.சத்தியநாராயணா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய மானுடவியல் ஆய்வுத்துறையின் இயக்குநர்
கே.கே.மிஸ்ரா கூறுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் பழங்குடியினத்தவருக்கு
அவசியமென்பதால் அடிக்கடி இவற்றை நடத்த வேண்டுமெனவும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு
வகையான பழங்குடியினத்தவர் வாழும் பகுதிகளில் நடத்தும்போது அவர்களுக்குள்ள புரிதல்
அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டார்.
நீலகிரியில் வசிக்கும் பழங்குடியினத்தவர்களில் தோடர்கள் எருமை மேய்த்தல்,
விவசாயம், எம்பிராய்டரி ஆகியவற்றையும், கோத்தர்கள் இசைக் கலைஞர்களாகவும்,
மண்பாண்டத் தொழிலிலும், விவசாயத் தொழிலிலும் ஈடுபட்டவர்களாகவும் உள்ளனர்.
வேட்டைத்தொழிலையே பிரதானமாகக் கொண்டிருந்த இருளர்கள் தற்காலத்தில்
காட்டுக்குள்ளிருந்து தங்களுக்கு உணவு சேகரித்தலிலும், விவசாயக் கூலிகளாகவும்,
காட்டுநாயக்கர்கள்(இவர்களை தேன் குரும்பர்கள் எனவும் அழைப்பர்) தேன்
சேகரித்தலிலும், முள்ளுக்குரும்பர்கள்(இவர்களை வேடர்கள் எனவும் அழைப்பர்)
வேட்டையாடுதல் மற்றும் விவசாயத் தொழிலாளிகளாகவும், பெட்ட குரும்பர்கள் கூடை
மற்றும் பாய் முடைதல், வேட்டைக்கான உபகரணங்களை தயாரித்தல் ஆகியவற்றிலும், பணியர்கள்
கூலித் தொழிலாளிகளாகவும் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளனர்.
இவர்கள் ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொருவிதமான கலாசாரத்தையும், பேச்சு மொழியையும்,
தொழிலையும் கொண்டுள்ளதால் இவர்களுக்குள் பிணைப்பு ஏற்படுவது மிகவும் அரிதானதாகும்.
அத்துடன் இவர்களது வாழ்விடப் பகுதிகளும் மாறுபடுவதால் ஓரிரு பிரிவினரைத் தவிர மற்ற
அனைவரும் அடிக்கடி சந்திப்பது கூட இயலாததாகும்.
ஆனால், பழங்குடி நாதத்தின் மூலம் இவர்கள் 8 குழுவினரும் ஒன்றிணைந்ததோடு,
எதிர்காலத்தில் தங்களது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில்
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர். அப்போது
பழங்குடியினரின் வீடுகளுக்குள்ளும் தொலைக்காட்சி பெட்டிகள் வந்து விட்டதால்
தங்களது கலாசாரம் மெதுவாக அழிந்து வருவதாகவும், புதிதாக வரும் தங்களது தலைமுறைக்கு
தங்களது கலாசாரம் குறித்தே தெரியாமல் போய் விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பண்டைய பழங்குடியினரை சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும்
நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் காட்சிப் பொருளாக காண்பித்து விடுவதோடு மட்டும்
நமது கடமை முடிவடைந்துவிடுவதில்லை. இவர்களது பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும்
பாதுகாக்க ஏதாவது செய்தாக வேண்டுமென்பதே முதன்முறையாக நடத்தப்பட்டுள்ள இந்த
பழங்குடி நாதத்தின் குரலாக அமைந்திருந்தது.
No comments:
Post a Comment