அகநானூறு - கடவுள்
வாழ்த்து
கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு, அத் தோலா தோற்கே;
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே
செவ் வான் அன்ன மேனி, அவ் வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று,
எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை,
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்,
வரி கிளர் வயமான் உரிவை தைஇய,
யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்
தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே.
எழுதிய புலவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்.
அகநானூற்றின் கடவுள் வாழ்த்து, சிவபெருமானை நம் கண் முன்னே நிறுத்துவது போல பாடப்பட்டிருகிறது. உரை இல்லாமலேயே எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளது.

பொன் போல் ஒளி வீசும் மஞ்சள் நிறக் கொன்றை
மலரை சூடியவனாக சிவபெருமான் போற்றப்படுகிறான். கொன்றை மலர் கார்காலத்தில் மலரும்,
அப்படி கார்காலத்தில் மலர்ந்த, பொன்னைப் போல் நிறம் கொண்ட, புத்தம் புதிய கொன்றை
மலர்களைத் தாராகவும் மாலையாகவும் திருமுடியில் சுற்றியிருக்கும் கண்ணியாகவும்
அணிந்திருக்கிறான் சிவபெருமான்.
தார் குறிப்பு:
ஆண்டாள் மாலை என்று தற்போது சொல்கிறோமே, இரண்டு குஞ்சம் வைத்து, கழுத்தில் சூடினால் நீண்டு இருபுறமும் தொங்குமே அதனைத் தார் என்று சொல்வார்கள். ஒரே ஒரு குஞ்சத்துடன் வளையம் போல் கட்டினால் அது மாலை. மிகவும் நெருக்கமாகச் சிறு சிறு வளையமாகக் கட்டினால் அது கண்ணி. இன்றைக்கும் வைதிகச் சடங்குகளின் போது கழுத்தில் மாலையும் கை மணிக்கட்டுகளில் கண்ணிகளும் அணிந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது.
தார் ஆண்களுக்கும், மாலை பெண்களுக்கும் கண்ணி இருபாலருக்கும் உரியவை. தார் ஆண்களுக்கு உரியது என்றால் அது எப்படி ஆண்டாள் மாலை ஆகியது என்று யாராவது கேட்டால் 'போய் ஆண்டாள் கதையைப் படியுங்கள். அவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆனதை நுண்மையாகப் படித்துப் பாருங்கள். அப்போது புரியும்' என்று சொல்லலாம்.
இந்தப் பாடலில் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்தவன் சிவபெருமான் என்று சொல்லும் போது அவன் ஆணுமாய் பெண்ணுமாய் அல்லனுமாய் நிற்பதைக் குறிக்கிறார் போலும் புலவர். உமையவளுக்கு இடபாகம் தந்து நிற்கும் சிவபெருமான் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்திருப்பதில் தடையென்ன?
'மார்பின் அஃதே' என்னும் அடுத்த அடியின் முதல் பகுதியை கொன்றைத் தாரன், மாலையன், கண்ணியன் என்ற தொடருடன் சேர்த்துப் படித்தால் சிவபெருமானின் மார்பு நிறைய கொன்றைப்பூவே நிறைந்திருக்கிறது என்ற பொருள் கிடைக்கிறது. ஆனால் உரையாசிரியர்கள் இதனை அதே வரியில் இருக்கும் அடுத்தப் பகுதியுடன் சேர்த்துப் பொருள் கொள்கிறார்கள். 'மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்' என்பதை ஒரே வரியாகக் கொள்கிறார்கள். இந்த அடிக்கு உரையாசிரியர்கள் தரும் பொருள் 'குற்றமில்லாத பூணூல் மார்பில் விளங்குகின்றது'. மை என்பது இங்கே கருமையைக் குறித்து 'மை இல்' என்பது குற்றமற்ற / வெண்ணிறமான என்ற பொருளைத் தருகிறது.
"நுதலது இமையா நாட்டம்" - நெற்றியில் இமைக்காத திருக்கண். சிவபெருமானின் திருவுருவத்தில் இருக்கும் சிறப்புகளில் அடுத்த சிறப்பாகப் புலவர் குறிப்பது நெற்றிக் கண். தேவர்களின் கண்கள் இமைக்காமல் இருக்குமாம். எல்லா தேவர்களைப் போல் சிவபெருமானின் திருக்கண்களும் இமைக்காமல் இருக்கும் போது அவரது சிறப்பான மூன்றாவது கண்ணும் இமைக்காமல் இருக்குமாம் நெற்றியில்.
"இகல் அட்டு கையது கணிச்சியொடு மழுவே;
மூவாய் வேலும் உண்டு அத்தோலாதோற்கே!" - தேவதேவனான சிவபெருமான் தோல்வி என்பதே அறியாதவன். அதனால் அவனுக்குத் தோலாதவன் என்று ஒரு திருப்பெயரைத் தருகிறார் புலவர். எந்த வித தடையையும் நீக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவன். பகையெனும் தடையை நீக்கி அவன் திருக்கைகளில் விளங்குகின்றன மழுவும் மூவாய் வேலான திரிசூலமும். இகல் என்றால் பகை. பகையை வென்று கையில் இருக்கிறது மழு. மூவாய் வேலும் அந்த தோல்வியில்லாதவனிடம் உண்டு. கணிச்சி என்றாலும் மழு என்றே பொருள் சொல்கிறது அகரமுதலி. இங்கே புலவர் 'கணிச்சியொடு மழுவே' என்று ஏன் சொன்னார் என்பது புரியவில்லை. கணிச்சி என்றால் குந்தாலி என்று ஒரு பொருளை உரையாசிரியர் தந்திருக்கின்றனர்.
"ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே" -சிவபெருமானது ஊர்தி தரும வடிவான காளை; ஏறு. அவன் ஒரு பாகத்தில் இருப்பவள் உமையவள். சேர்ந்தோள் உமையே.
"செவ் வான் அன்ன மேனி" - அவனது திருமேனி சிவந்த வானத்தைப் போன்ற நிறம் உடையது. செவ்வான் அன்ன மேனி. அந்த வானில் விளங்கும் பிறை நிலவைப் போல் வளைந்த வெண்மையான கூர் பல்லினை உடையவன்.
"அவ் வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று" - விளங்கு என்றால் வளைவு. நேராக நில்லாமல் வளைந்து நிற்பதால் தான் மிருகங்களை விலங்கு என்றனர் போலும். வால் என்றால் வெண்மை. வை என்றால் கூர்மையான. எயிறு என்றால் பல். சிவபெருமானின் உருத்திர வடிவம் இங்கே போற்றப்படுகின்றது போலும். இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை என்று ஐந்து கரத்தனையும் இதே உவமையுடன் இன்னொரு பெரியவர் போற்றுவதையும் நினைவு கூரலாம்.
"எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை" - தீ கொழுந்து விட்டு எரிவதைப் போல் மேல் நோக்கிக் கட்டி விளங்கும் பல சுற்றுகள் கொண்ட சடை முடியை உடையவன் சிவபெருமான். மெல்லிய கோடு போல் இருக்கும் இளைய பிறையைச் சூடி ஒளிவிடும் தலை.
"முதிராத் திங்களொடு சுடரும் சென்னி" - முதிராத் திங்களொடு சுடரும் சென்னி. மற்றவர் இளம்பிறை என்று சொல்ல இப்புலவர் முதிரா திங்கள் என்று சொன்னது பெரும் சுவையாக இருக்கிறது.
"மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்" - திங்களை முதிர்ச்சியடையாத என்று சொன்னதைப் போல், என்றும் இளமையுடன் திகழும் அழிவில்லாத தேவர்களை மூவா அமரர் என்கிறார் புலவர். தேவரும் முனிவரும் பிறரும் என்று இருக்கும் யாவரும் அறிய முடியாத தொன்மையான மரபினை உடையவன் சிவபெருமான். எல்லோர்க்கும் மூத்தவன்.
"வரி கிளர் வயமான் உரிவை தைஇய" - வரியை உடைய புலித்தோலாடையை அணிந்தவன் சிவபெருமான். இங்கே வயமான் என்று குறித்திருக்கிறார் புலவர். அதன் நேர் பொருள் மான். மான் தோலாடையும் சிவபெருமானுக்கு உண்டு. அதனால் இங்கே மான் தோலாடையைத் தான் புலவர் குறித்துள்ளார் என்று சொல்லலாம். ஆனால் மானுக்கு புள்ளிகள் உண்டு; வரிகள் இல்லை. இங்கே வரி கிளர் என்று சொன்னதால் இது புலித்தோலாடையைத் தான் குறிக்கிறது என்று பொருள் கொண்டார்கள் போலும் உரையாசிரியர்கள். உரிவை என்றால் உரிக்கப்பட்ட தோல் ஆடை.
"யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்" - யாழைப் போல் இனிமையான குரலையும் கருமையான கழுத்தினையும் உடைய அந்தணன் சிவபெருமான். இங்கே யாழ் ஆகுபெயராக மறைகளைக் குறித்தது என்று உரைகள் சொல்கின்றன. அந்தணன் என்று இங்கே குறித்தமையாலும் சிவபெருமானது திருவாக்கு மறைவாக்கு என்பதாலும் அப்பொருளும் பொருத்தமுடைத்தே என்று தோன்றுகிறது.
"தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே" - தொல் முறை மரபினன் சிவபெருமான் என்று முன்னர் சொன்னார் புலவர். முடிவும் இல்லாதவன் என்று இங்கே சொல்கிறார். முடிவு இல்லாத சிவபெருமானின் திருவடி நிழலில் உலகம் நிலையாக நிற்கின்றதே என்கிறார். இந்த உலகையும் மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் ஆனவர்களைக் காக்கத் தானே ஆலகாலத்தை உண்டு மணிமிடற்றன் ஆனான் சிவபெருமான். அவன் திருவடி நிழலின் பெருமை சொல்லவும் அரிதே!

No comments:
Post a Comment