Wednesday, 19 December 2012

உயிர் காக்கும் தந்திரம்

சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.

நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?” 

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை. 

அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது. 

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது. 

நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.

ஏற்றத்தாழ்வு நமக்கு இயற்கை

* தெய்வீக வழியில் நடப்பவன் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.. வயது தளர்ந்த காலத்தில் மற்றவர்கள் படும் துன்பத்தைச் சிந்தித்துப் பார்த்து வாழ வேண்டும்.

* சுகமாக வாழும் போதே துக்கத்தையும் பழகிக் கொள்ளுங்கள், ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும் என்பதை உணரவேண்டும்.

* வெயில் அதிகமாக இருந்தால் மழை வரும். அது போல் அநீதி அதிகமானால் தான் மகான்கள் அவதரிப்பார்கள்.

* ஞானிகளின் கோபம் மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்துவிடும், ஆனால், பாமரர்களின் கோபம் பிறவி தீரும் வரை மறையாது. எனவே, கோபத்தை அறவே விடுங்கள்.

* உருவத்தில் மனிதனாகவும், குணத்தில் மிருகமாகவும் இருக்கக்கூடாது, மனிதத் தன்மையில் இருந்து தெய்வத்தன்மை பெற வேண்டும். அது முடியாவிட்டால் மிருகத்தன்மைக்காவது போகாமல் இருக்க வேண்டும்.

* எதிர்ப்பு இருந்தால் தான் உலகம் நம்மை அறியும். அதற்காக வருந்தாதீர்கள். நமக்கு வேண்டாதவரும் வாழவேண்டும் என்பதுதான் நமது பண்பாடு.

- வாரியார் 

Tuesday, 18 December 2012

வாழும் வழி

வாழும் வழி THIRTY TIPS (படித்ததில் பிடித்தது):-

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3.இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4.உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. நிறைய புத்தகம் படியுங்கள்.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

10.உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16.கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19.வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20.முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.

21.வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22. மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24.அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29.உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

Monday, 17 December 2012

உயர்ந்த நிலைக்கு செல்லும் வழி

* கண்ணுக்கு தெரிந்த இந்த உலகத்துக்கு சேவை செய்வதோடு, கண்ணுக்குக் காணாத கடவுளுக்கும் சேவை செய்ய வேண்டும்.

* மாவட்டங்களுக்கு இடையே எல்லைக்கல் இருப்பது போன்று மனிதனுக்கும் விலங்குக்கும் இடையில் உள்ள எல்லைக்கல் தான் "கடவுள் நினைவு'. கடவுள் உணர்வு இல்லையென்றால் அவன் பெரிய அறிஞனாக இருந்தாலும் விலங்காகவே கருதப்படுவான்.

* இறைவனை எஜமானாகக் கருதி, சேவை செய்வதில் அனுமனைப் போல் நடந்து கொள்ள வேண்டும்.

* பணம், பதவி, குலம், பருமன், உயரம் இவை மனிதனை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதில்லை, அறிவு தான் கொண்டு செல்கிறது.

* நாம் எந்த பாவத்தை செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். நன்றி மறப்பது என்னும் பாவத்துக்கு மட்டும் மன்னிப்பே கிடையாது. 

* சத்தியம் என்ற தாய், ஞானம் என்ற தந்தை, தருமம் என்ற சகோதரன், கருணை என்ற நண்பன், சாந்தி என்ற மனைவி, பொறுமை என்ற புதல்வன் இவர்களே நமக்கு உகந்த உறவினர்கள் ஆவர்.

-வாரியார் 

Sunday, 16 December 2012

வைட்டமின் ஈ யின் முக்கியத்துவம்

வைட்டமின் ஈ இல்லா விட்டால் வைட்டமின் ஏ யும் சி யும் உடலில் அழிந்துவிடும்

புற்றுநோய் ஏற்படுவதற்கும் வைட்டமின் ஏ பற்றாக்குறை ஒரு காரணம் என்று அண்மையில் வெளியான மருத்துவ ஆய்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

வைட்டமின் ஏ குறைவால் இரவில் பார்வை மந்தம், தோல் வறட்சி, எளிதாக சளி பிடிப்பது, எலும்பு வளர்ச்சியின்மை, பாலியல் உறுப்புகள் பிரச்னை என நிறைய பாதிப்புகள் மனிதனைத் தாக்க காத்திருக்கின்றன. 

இந்தப் பிரச்னைகளை தினமும் 500 மில்லி கிராம் வைட்டமின் ஏ சத்தினை உட்கொள்ளுவதன் மூலம் விரட்ட முடியும். எப்படி? வைட்டமின் ஏ அதிகம் நிறைந்திருக்கும் பால், முட்டை, மஞ்சள் கரு, வெண்ணெய், மாம்பழம், பப்பாளிப்பழம், பேரிக்காய், பலாப்பழம், ஆரஞ்சு, தக்காளிப்பழம், பச்சை கேரட் ஆகியவற்றை உண்டாலே போதும். இவற்றில் வைட்டமின் ஏ சத்து நிறைந்திருக்கிறது.

சிகரெட் பிடித்து புகையை ஊதித்தள்ளு பவர்கள் இனி கொஞ்சம் விழிப்பாக இருப்பது நல்லது. ஆமாம் சிகரெட் பிடிப்பவர்கள் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து இழுத்தால் போதும் 25 மில்லி கிராம் வைட்டமின் சி யை சிகரெட் எடுத்துக் கொள்கிறது. தினமும் உணவில் அதிகமாகப் புரதச் சத்து உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்பவர்கள் வைட்டமின் சி யையும் அதிகம் சேர்க்க வேண்டும். புரதச்சத்து உடலில் அதிகரிக்கும்போது வைட்டமின் சி தேவையும் அதிகரிக்கிறது. 

அதற்குத் தகுந்தாற்போல் வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளைச் சேர்கக வேண்டும். வைட்டமின் சி குறைவால் உள்காயங்கள், பலவீனமான எலும்பு, பல், ஈறு நோய்கள், சோம்பேறித்தனம், களைப்பு ஆகிய பிரச்னைகள் ஏற்படும். சராசரியாக ஒவ்வொரு வருக்கும் தினம் 400 மில்லி கிராம் வைட்டமின் சி தேவை. இது கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளிப் பழம், சாத்துக்குடி, தக்காளி, முட்டைக்கோசு, கேரட், உருளைக் கிழங்கு ஆகியவற்றில் இருந்து அதிகம் கிடைக்கிறது. 

நாம் அதிகம் கவலைப் படாத ஒரு வைட்டமின் என்றால் நிச்சயம் அது வைட்டமின் ஈ-யாகத்தான் இருக்கும். உண்மை யில் வைட்டமின் ஈ இல்லா விட்டால் வைட்டமின் ஏ யும் சி யும் உடலில் அழிந்துவிடும். இந்து இரு வைட்டமின்களையும் பாதுகாப்பதுதான் ஈ-யின் முக்கிய வேலை. இது நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது. தசைகளை வலுவாக்குகிறது. 

வைட்டமின் ஈ குறைந்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, சோம்பேறித்தனம், பலவீனம், கவனக்குறைவு ஆகிய பிரச்னைகள் ஏற்படும். ரத்தம் உறையாமை நோய் உள்ளவர்கள் வைட்டமின் ஈ உணவு வகைகளை அதிகம் சேர்க்கக் கூடாது. அப்படி சாப்பிட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. பட்டாணிக்கடலை, கோதுமை, ரவா, புழுங்கலரிசி, முட்டை, சூரியகாந்தி விதை ஆகியவற்றில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது.

Saturday, 15 December 2012

மனமிருப்பவன் என்ன செய்வான்?

* ஞானத்தைக் கொடுப்பவர் குருவைத் தவிர வேறு யாருமில்லை. நம் வாழ்க்கையில் சிறந்த ஒரு ஆசிரியர் கிடைத்துவிட்டால் நிச்சயம் பிறவிக்கடலைத் தாண்டிவிடலாம்.

* நாம் பிறவாத இடமோ, பேசாத மொழியோ, தோன்றாத குலமோ கிடையாது. எனவே எல்லா நாடும் நமது நாடே, எல்லா மக்களும் நமது சகோதரர் என்று கருதி சாந்தமாகவும், அன்பாகவும் வாழ வேண்டும்.

* கிரகம் என்றால் வீடு அல்லது இருப்பிடம். "வி' என்றால் மேன்மை. மேன்மையான இருப்பிடம் விக்ரகம். இறைவனது திருவருள் சிறப்பாக விளங்கி தோன்றும் உயர்ந்த இடம் விக்ரகம்.

* விலங்குகளிலிருந்து மனிதன் உயர்ந்து காட்சி அளிப்பது தெய்வ உணர்ச்சி ஒன்றினால் தான். "மனித வாழ்க்கைக்கு கடவுள் வணக்கம் தேவையா? நாங்கள் கடவுளை வணங்காமல் வாழவில்லையா?' என்று சிலர் கேட்கிறார்கள். மானம் உள்ளவன் ஆடை உடுப்பான், மனம் உள்ளவன் இறைவனை வணங்குவான்.

வாரியார் 

Friday, 14 December 2012

பூமியில் இருக்கும் அபூர்வமான 6 இடங்கள்!!!

எல்லோருக்கும் உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவ்வாறு உலகைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, நமக்கு பிடித்த, சற்று வித்தியாசமான இடங்களைத் தான் பார்க்க விரும்புவோம். அத்தகைய வித்தியாசமான சுற்றுலாத்தளங்களில், அவ்வப்போது இயற்கைக்குப் புறம்பாக நடந்த விபத்துக்களில் ஒரு சில இடங்கள் கண்ணைப் பறிக்கும் வகையில் சற்று வித்தியாசமாகவும் கவர்ச்சிகரமாகவும் மாறியுள்ளது. இப்போது அத்தகைய இடங்களில் ஒரு 6 அபூர்வமான இடங்களைப் பற்றி பார்ப்போமா!!!

எரிமலைக் குளம்

இந்த குளம் இயற்கைப் பண்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வித்தியாசமான இடங்களில் ஒன்றாகும். இந்த இடம் பம்முக்ளே (Pamukklae) என்னும் இடத்தில், எரிமலையின் வெடிப்புகள் காரணமாக நீரூற்று ஏற்பட்டு, அதன் பக்கவாட்டில் கால்சியம் கார்பனேட் அதிக அளவு சேர்ந்து குளம் போல் உருவாக்கியுள்ளது. இந்த குளத்திற்கு ட்ரேவெர்டின் குளம் (Travertine Pool) என்று பெயர். மேலும் இந்த குளம் சற்று சரிவாக படிக்கட்டுகள் போன்று அமைந்துள்ளது.

புள்ளி புள்ளியாக காணப்படும் ஏரி

இந்த சலைன் அல்கலி ஏரி (saline alkali lake) பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒசொயூஸ் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரில் 8-10 கனிமங்கள் உள்ளன. இதனால் கோடை காலத்தில் இங்கு தண்ணீர் ஆவியாகி, அந்த கனிமங்களுடன் சேர்ந்து, நீரின் மேற்பரப்பில் புள்ளிப் போன்ற ஒரு தோற்றத்தை தருகிறது. இதனால் அந்த ஏரி பார்க்க ஓட்டை ஓட்டையாக இருப்பது போன்று காணப்படும்.

கற்கள் தானாக நகரும் வறண்ட இடம்

இந்த இடத்திற்கு ரேஸ்ட்ராக் பால்யா (Racetrack Playa) என்று பெயர். இது கலிபோர்னியாலிவல் உள்ள ஒரு வறண்ட ஏரி என்றாலும், கண்ணுக்கினிய ஒரு விஷயம் உள்ளது. அது என்னவென்றால், இந்த இடத்தில் இருக்கும் கற்கள் தானாக நகர்கிறது என்பது தான். மேலும் அவ்வாறு நகரும் கற்கள் நகர்ந்ததற்கான அடையாளத்தோடு நகர்கிறது என்பது தான் இதன் சிறப்பு. அதிலும் இந்த கற்கள் பலத்த காற்றின் காரணமாக நகர்கிறது என்பது உண்மை. அப்படியெனில் எந்த அளவு காற்றடிக்கும் என்று யோசித்து பாருங்களேன்..


சஹாரா பாலைவனம்

உலகில் உள்ள வித்தியாசமான இடங்களில் சஹாரா பாலைவனத்தில் உள்ள ரிச்சட் வடிவம் (Richat Structure) ஒன்று. சொல்லப்போனால், அதை சஹாராவின் கண் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த இடத்தின் அமைப்பு பரந்த, விரிந்த பாலைவனத்தில் வண்ணமயமாக இருப்பதோடு, மேலும் பார்த்தால் கண்கள் சலிக்காமல் பார்க்கும் அளவுக்கு அமைந்துள்ளது.


வித்தியாசமான தீவு

இந்த பூமியில் இருக்கும் தீவுகளில் இந்தியப் பெருங்கடலில் உள்ள சோகோட்ரா தீவு (Socotra Islands) ஒரு புதிரான இடம். ஏனெனில் இந்த தீவுகளில் உள்ள அனைத்து மரங்களும், விலங்குகளும் வித்தியாசமான வடிவத்தோடு காணப்படும். இது போன்ற வடிவம் கொண்ட மரங்கள் மற்றும் விலங்குகளை எங்கும் காண முடியாது என்பதே இதன் சிறப்பு

இவையே உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதிரான இடங்கள். மேலும் இந்த இடங்கள் உலக சுற்றுலா பயணம் செல்லும் போது பார்க்க வேண்டும் என்று தோன்றும் ஒரு சிறந்த இடங்களாக அமையும். இதை போன்ற வேறு இடங்கள் உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.