Friday, 18 May 2012

மதுரையைக் கலக்கும் "உழவன் உணவகம்"..!!!!


அயல்நாட்டின் பீட்சாவையும் பர்கரையும் விற்பனை செய்வதற்காக குளுகுளு ஏ.சி. உணவகங்கள், சாலையோர கோபுரங்களாக உயர்ந்து நிற்கின்றன. அதேசமயம்... களி, கம்பஞ்சோறு, சோளப் பனியாரம், வல்லாரை சுடுச்சாறு, ராகி தோசை... பரம்பரைப் பரம்பரையாகத் தமிழ் மண்ணில் மணக்கும் இயற்கை உணவுகள்... இன்னும் ஃபிளாட்பார கடைகளில்தான் இருக்கின்றன.

இத்தகையக் கொடுமையை மாற்றுவதற்காகவும்... விவசாயிகள் மதிப்புக்கூட்டல் முறையில் லாபம் அடைவதற்காகவும், 'உழவன் உணவகம்' என்ற பெயரில் உழவர் சந்தையில் உணவகத்தை, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது உருவாக்கினார் சகாயம். ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே மிகுந்த வரவேற்பைப் பெற்றது இந்த உழவன் உணவகம்!
தற்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருக்கும் சகாயம், நாமக்கல் பாணியில் இங்கேயும் 'உழவர் உணவகம்' தொடங்கச் செய்திருக்கிறார். 

மதுரை-நத்தம் சாலையில் உள்ள நாராயணபுரம் பகுதியிலுள்ள ராமகிருஷ்ணமடத்தில் செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில்... தினை, கம்பு, சாமை, வரகு போன்ற சிறுதானியங்களில் செய்யப்படும் பாரம்பரிய உணவுகள் மற்றும் மூலிகை உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அத்திப்பழ அல்வா, முள்முருங்கை தோசை, செம்பருத்தி இட்லி, குதிரைவாலி பொங்கல், தினை சேவு, பனியாரம்... என நீளும் உணவு வகைகளை மக்கள் ஆர்வத்துடன் சுவைத்து வருகிறார்கள்.

உழவன் உணவகத்தில் கடை வைத்துள்ள பழையூர் சீனிவாசன், ''இதனால எங்க வருமானம் அதிகரிச்சுருக்கு. தினமும் 8 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. குறைஞ்ச விலையில, உடம்புக்கு ஆரோக்கியமான உணவுகள நாங்க கொடுக்கறதால... நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகமாயிட்டே இருக்காங்க. வெளிநாட்டுப் பயணிகளும் ஆர்வமா வந்து சாப்பிட்டு பாத்து, பாராட்டுறாங்க. அடுத்தக் கட்டமா... பால் பொருள்களை வெச்சு இயற்கையான நறுமணப்பால், குளிர்பானங்களைத் தயாரிச்சு விக்கலாம்னு இருக்கோம். இதெல்லாம் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு சவால் விடுற வகையில இருக்கும்'' என்று சொன்னார்.

'கப்பலோட்டிய தமிழன்' வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்தி தனலட்சுமியும் இங்கே ஒரு கடை வைத்திருக்கிறார். ''வறுமையில வாடிக்கிட்டிருந்த என்னைக் கூப்பிட்டு, பயிற்சி கொடுத்து, இங்க கடையும் வெச்சுக் கொடுத்திருக்காரு, கலெக்டர் சகாயம். இந்த வயசுலயும் சுயமா உழைச்சு சாப்பிடறது எனக்கு சந்தோஷமான விஷயமாவே இருக்கு. இந்த வியாபாரம் மூலமா, தினமும் ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்குது'' என்று உற்சாகமாகச் சொன்னார் தனலட்சுமி.

உழவன் உணவகத்தை நிர்வகித்து வரும் மதுரை வேளாண் விற்பனைத்துறை அலுவலர், ஆறுமுகம். ''உள்ளூர் மக்களை மட்டுமல்லாமல்... உலக அளவில் தனக்கான சந்தையை ஏற்படுத்தி வருகிறது, இந்த உழவன் உணவகம். இங்கிருந்து இலங்கை, ஆஸ்திரேலியா, ஓமன் போன்ற நாடுகளுக்கு ஆர்டரின் பேரில் உணவு வகைகளை ஏற்றுமதி செய்து வருகிறோம். சமீபத்தில் மதுரையில் நடந்த வடமாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சந்திப்புக் கூட்டத்துக்கு, இங்கிருந்துதான் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அவர்களெல்லாம் இந்த விவசாயிகளை மனதாரப் பாராட்டினார்கள். மொத்தத்தில் விவசாயிகளின் வருமானத்துக்கு வழிகாட்டியாகத் திகழ்வதுடன், நுகர்வோருக்கும் ஆரோக்கியமான உணவுகளைக் குறைந்த விலையில் கொடுத்து வருகிறது இந்த உழவன் உணவகம்'' என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

மதுரையில் இருக்கும் 'உழவன் உணவகம்' இப்படி சிறப்பாக செயல்பட ஆரம்பித்துள்ள நிலையில், ஏற்கெனவே சகாயத்தால் நாமக்கல்லில் துவங்கப்பட்ட 'உழவன் உணவகம்' கிட்டத்தட்ட மூடுவிழா நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்கிற செய்தி வேதனையைத் தருகிறது! 'உழவர்சந்தையில் உழவன் உணவகம் நடத்தக்கூடாது என்று அங்கு உணவகங்கள் நடத்தி வருபவர்கள் மிரட்டப்படுகிறார்களாம்!

நன்றி : விகடன் 

No comments:

Post a Comment