Thursday, 5 July 2012

ஒருவர் மீது சுமத்திய வீண் பழிக்கு என்ன பிராயச்சித்தம்?

அறிந்தும் அறியாமலும் சில நேரங்களில் பிறர் மீது வீண் பழி சுமத்துவதற்கு நாம் காரணமாகி விடுகிறோம். பின்பு அதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்ற வருத்தம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு மகான் ஒருவர் எளிய வழி ஒன்றைக் கூறுகிறார்...


தலைசிறந்த மகான் ஒருவரிடம் வந்த ஒருவன், சுவாமி! நான் ஒருவர் மீது வீணாக பழி சுமத்திவிட்டேன். என் மனசாட்சி இப்போது உறுத்துகிறது. நான் செய்த தவறுக்கு ஏதாவது பிராயச்சித்தம் இருந்தால் கூறுங்கள் சுவாமி என்று கூறினான். அவனையே சிறிது நிமிடங்கள் உற்றுப் பார்த்த சுவாமி, ஒரு காகிதத்தை எடுத்து பல துண்டுகளாக கிழித்தார். அதை அவனிடம் கொடுத்து, நாளை காலை இது ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரது வீட்டு வாசலிலும் வைத்து விட்டு வா என்று கூறினார். அவ்வாறே செய்து விட்டு வந்தவன்,


இப்போது என் பாவம் தொலைந்திருக்கும் அல்லவா? என்று வினவினான். சிறிது நேரம் கழித்து, நீ இன்னொரு வேலை செய்! ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைத்த காகித துண்டுகளை மீண்டும் எடுத்து வா என்று கூறினார். இதைக் கேட்டு திகைத்த அவன், என்ன சுவாமி கூறுகிறீர்கள் காற்றில் அவையெல்லாம் பறந்து போயிருக்குமே என்றான். மகனே! இப்படித்தான் ஒருவர் மீது சுமத்திய பழியும்; காகிதத்துண்டு போல் உன் வாயிலிருந்து வந்த வார்த்தையும் திரும்ப வராது. அதற்காக கவலைப்படாதே! நீ மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேள். அவர் எல்லையற்ற கருணை கொண்டவர். நீ செய்த பாவத்தையும் அவர் பறந்தோடச் செய்வார். எனவே செய்த தவறுக்கு மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

புகைப்பழக்கத்தை நிறுத்த ஆரோக்கியமான வழிகள்..!!!


புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பது என்பது மிகவும் ஈஸியான ஒன்று. ஆனால் அதை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான செயல். பொதுவாக புகைப்பிடிப்பவர்களுக்கு, புகைபிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகளும் தெரியும், அதைவிட நிறுத்துவது கடினம் என்பதும் நன்றாக தெரியும். ஏனெனில் அதற்கு அடிமை ஆகிவிட்டால் அதை நிறுத்தும் போது பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். இவ்வாறு அதற்கு அடிமை ஆனவர்கள் நிறுத்த நினைக்கும் போது புதிதாக ஒரு சில பழக்கத்தை மேற்கொண்டால், ஈஸியாக அதனை நிறுத்தலாம். அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

புகைப்பழக்கத்தை நிறுத்த சில டிப்ஸ்...

1. சிகரெட்டை நிறுத்த நினைப்பவர்களுக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்காத சிகரெட் என்று ஒன்று உள்ளது. எப்படியென்றால் அந்த சிகரெட்டில் புகையிலை அல்லது நிக்கோட்டினுக்கு பதிலாக, ஒரு சில ஃப்ளேவரான புதினா அல்லது ஆசையைக் கட்டுப்படுத்தும் மெத்தனால் என்பவை இருக்கின்றன. இதனால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, மனநிறைவு அடையும் வகையில் இருக்கும்.

2. சூயிங்கம்-ஐ வாயில் போட்டு மெல்லலாம். அதற்காக அதிக நேரம் மென்றாலும் உடலுக்கு ஆபத்தானது. ஆகவே இனிப்பு குறைவாக இருக்கும் புதினா சுவையாலான சூயிங்கம்-ஐ வாயில் போட்டு மென்றால், சிறிது சுயக்கட்டுப்பாடானது மனதில் இருக்கும்.

3. புதினாவானது உடலுக்கு மிகவும் நல்லது. ஆகவே அவ்வாறு சூயிங்கம் போடும் போது, இந்த புதினா ஃப்ளேவரான சூயிங்கம் அல்லது சாக்லேட்டை சாப்பிடலாம்.

4. டார்க் சாக்லேட் மிகவும் சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. எப்போது புகைப்பழக்கத்தை விட வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சாக்லேட்டை சாப்பிட்டால் பசியானது அதிகரிப்பதோடு, வயிறு முழுவதும் உண்டுவிடுவர். மேலும் அந்த சாக்லேடில் உள்ள கோக்கோவானது, அதன் சுவையால் சிகரெட்டை மறக்கச் செய்துவிடும்.

5. நிறைய பேர் மிகவும் பிடித்த டூத் பிக்கை மெல்லுவார்கள். இது மிகவும் ஆரோக்கியமானது. அந்த டூத் பிக்கானது மூங்கில் அல்லது பிர்ச் மரத்தில் இருந்து செய்யப்படுவது. இதனை நீண்ட நேரம் மெல்லுவதால் பற்களில் உள்ள அழுக்கானது போய்விடும். இந்த டூத் பிக்கானது நிறைய ஃப்ளேவரில் உள்ளது.

6. சோம்பு, நட்ஸ் போன்றவற்றை வாயில் போட்டு மெல்லுதல் மிகவும் சிறந்த, ஆரோக்கியமான ஒன்று. நட்ஸில் பாதாம் கொட்டையை வாயில் போட்டு மென்றால் உடலுக்கு மிகவும் சிறந்தது.

7. எப்போதெல்லாம் புகைபிடிக்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறதொ, அப்போதெல்லாம் 2-3 வாழைப்பழங்களை சாப்பிடலாம். இது புகைப்பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி.

இவற்றையெல்லாம் செய்தால் புகைப்பழக்கம் போவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

மென்மையான சருமத்திற்கு ஏற்ற மூலிகைகள்!!!

மென்மையான சருமமானது பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே இருக்கும். அதிலும் முகத்தை அழகுப்படுத்தவும், பொலிவுடன் வைக்கவும், பெண்கள் கடைகளில் விற்கும் பல செயற்கை முறையில் தயாரித்த பொருட்களை வாங்கி, முகத்தை மென்மைப் படுத்துகின்றனர். எதை பயன்படுத்தி முகத்தை மென்மை பயன்படுத்தினாலும், இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை அழகுபடுத்துவதே சிறந்ததாகவும், எந்த ஒரு பக்க விளைவும் வராமல் இருக்கும். அவ்வாறு முகத்தை பொலிவாக்க செயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க ஒரு சில மூலிகைகள் இருக்கின்றன. இந்த மூலிகைகள் முகத்தை அழகுறச் செய்வதோடு பொலிவாக்கவும் செய்கின்றன. அது என்னனென்னவென்று சற்று படித்துப் பாருங்களேன்...

மென்மையான சருமத்தை பெற...


கற்றாழை : கற்றாழையில் இருக்கும் ஜெல் பகுதி சருமத்திற்கு மென்மையையும், பொலிவையும் தரும் குணமுடையது. இதற்கு முதலில் அந்த கற்றாழையில் ஜெல்லை முகத்திற்கு தினமும் தேய்த்து 3-4 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகமானது மென்மையை அடையும். மேலும் இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளையும் நீக்கும்.


சீமைத்துத்தி : இந்த மூலிகைச் செடியை அனைத்து அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்துவதை காணலாம். இந்த சீமைத்துத்தி இலையை நன்கு அரைத்து முகத்தில் தடவி, கழுவ வேண்டும். மேலும் இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்திற்கு பிரகாசத்தை தருகிறது. வேண்டுமென்றால் இந்த பேஸ்டில் சிறிது ஆலிவ் ஆயிலை விட்டு, முகத்திற்கு, கழுத்திற்கு வாரத்திற்கு ஒரு முறை தடவினால், முகம் பொலிவு பெறும்.

லாவெண்டர் : இது மற்றொரு மூலிகைச் செடி. முகத்தில் முகப்பரு இருப்பவர்கள், இதனை வைத்து சோப்பு, கிரீம் என்று பலவற்றை தயாரித்துள்ளனர். ஏனெனில் இதில் சருமத்திற்கு மென்மையைத் தரும் குணம் அதிகம் இருக்கிறது. வேண்டுமென்றால் லாவெண்டரை எடுத்து அரைத்து, அத்துடன் ஏதேனும் ஆலிவ் அல்லது பாதம் எண்ணெயை சேர்த்து முகத்தில் தடவி கழுவ வேண்டும். இதனை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். லாவெண்டர் ஆனது அனைத்து சருமத்திற்கும் பொருந்தாது. ஆகவே இதனை செய்யும் முன், அந்த கலவையை சிறு பகுதியில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அவ்வாறு செய்யும் போது அந்த இடத்தில் சிவப்பு நிறம் அல்லது புண் என்று எதுவும் நேராமல் இருந்தால் முகத்திற்கு பின் தடவலாம்.


மேற்கூரியவாறெல்லாம் செய்தால் முகமானது பொலிவுடன் பிரகாசமாக மின்னும். மேலும் மேலே சொன்ன பொருட்கள் அனைத்துமே கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியவை.

Wednesday, 4 July 2012

மனஉறுதி வேண்டும்..!!!


விவேகானந்தர் » சிந்தனைகள்

*அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தே தீரும்.


* பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்தும் பிள்ளைகள் கடவுளையும் மகிழ்ச்சி அடையச் செய்கின்றனர்.

* மனஒருமையுடன் பணியாற்றுங்கள். ஆர்வத்துடன் ஈடுபட்டால் பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியும்.

* தவறை எண்ணி வருந்த வேண்டாம். நமக்கு வழிகாட்டும் தெய்வமாக இருப்பதால் தவறைப் பெரும்பேறாகக் கருதுங்கள். 

*அமைதி, மன்னிக்கும் பெருந்தன்மை, மனஉறுதி ஆகிய நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்வில் வளரத் தொடங்குவீர்கள். 

*அடுத்தவர் கருத்தை கண்மூடித்தனமாக பின்பற்றாதீர்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். அதே சமயத்தில் உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்.

* விதையின் சக்தி தான் மரமாக வளர்கிறது. அதுபோல, ஒவ்வொருவரின் வாழ்வும் அவரவர் கொண்டிருக்கும் மன ஆற்றலைப் பொறுத்தே அமைகிறது.

- விவேகானந்தர்

Tuesday, 3 July 2012

அதர்வண வேதம் கூறும் உலகத்தின் வயது எவ்வளவு தெரியுமா.???

நூறாண்டு காலம் வாழ்க என்று தான் நாம் வாழ்த்துகிறோம். ஆனால், 43கோடியே 20 லட்சம் ஆண்டுகள் வாழ்க என்கிறது அதர்வண வேதம். வியாசர் அதர்வண வேதத்தை சுமந்து என்னும் முனிவருக்கு உபதேசித்து மக்களிடம் பரவச் செய்தார். இதில் 20 காண்டங்களும், 5038 செய்யுள்களும் உள்ளன. வருணன், அக்னி, விஷ்ணு, வாசஸ்பதி, சோமன், இந்திரன், மருத்து, அஸ்வினி தேவர்கள், சூரியன், வாயு, கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள் போன்ற தேவதைகள், இயற்கைச் சக்திகள் பற்றிய தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தர்வ என்றால் பயம். அதர்வம் என்றால் பயமற்ற தன்மையைத் தருவது என்பது பொருள். இச்சொல்லே அதர்வணம் என திரிந்தது. தீயசக்திகளிடம் இருந்தும், சம்சார பந்தத்தில் இருந்தும் ஏற்படும் அச்சத்தைப் போக்குவதால் அதர்வண வேதம் என்னும் பெயர் உண்டானது. 


தற்காலத்தில், அதர்வண காளி வழிபாடு முக்கியம் பெற்றுள்ளது. பிரத்யங்கிரா, காளி போன்ற சக்திகளே இவர்கள். கலியுகத்தில் மக்கள் தங்கள் பயத்தைப் போக்க இந்த தெய்வங்களுக்கு வழிபாடு நடத்துகிறார்கள். அதர்வண வேதத்தில் உலகத்தின் வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நூறால் பத்தாயிரத்தைப் பெருக்கி வருவதுடன் இரண்டு, மூன்று, நான்கு என்ற எண்களைச் சேர் என்ற குறிப்பு இதில் உள்ளது. அதாவது,  43 கோடியே 20 லட்சம்  ஆண்டுகள். இதனை ஆயிரம்  சதுர்யுக ஆண்டுகள் என்று  குறிப்பிடுவர். இவ்வளவு  காலமும், ஒருவன் வாழ வேண்டும் என நம் ஆயுள் நீடிக்கவும் இந்த  வேதம் வாழ்த்துகிறது.


அடேங்கப்பா! இவ்ளோ வருஷம் வாழலாமா?

ஞானம் பெற நல்வழிகாட்டும் குரு பூர்ணிமா இன்று.. வியாச பூஜை..!!!!

வேதத்துக்கு ஒரு வியாசர்: சாதுர்மாஸ்யம் எனப்படும் துறவிகளுக்கான விரத காலத்தின் துவக்கத்தில், வேதங்களைத் தொகுத்தவரான வியாசருக்கு பூஜை நடத்துவது வழக்கம். வியாசரின் பிறப்பைப் பற்றிய கதை வித்தியாசமானது. மீன் ஒன்றின் வயிற்றில் பிறந்தவள் சத்தியவதி. இவளை மீனவர் தலைவர் ஒருவர் வளர்த்து வந்தார். தந்தைக்கு உதவியாக ஆற்றைக் கடக்க பரிசல் ஓட்டுவது, மீன்களை உலர்த்துவது ஆகிய பணிகளைச் செய்தாள். ஒருமுறை, பராசரர் என்ற முனிவர் ஆற்றைக் கடக்க பரிசலில் ஏறினார். 

அந்நேரத்தில், உலகம் அதுவரை காணாத உத்தமமான நேரம் வந்தது. அந்த சமயத்தில், ஒரு குழந்தை பிறக்குமானால், அது, உலகத்துக்கே நன்மை விளைவிக்கும் பெருஞ்செயல்களைச் செய்யும் என்று பராசரரின் ஞான திருஷ்டிக்குப்பட்டது. எனவே, படகோட்டிய சத்தியவதியிடம் தன் விருப்பத்தைச் சொன்னார். முனிவரே... நான் கன்னிப் பெண். என்னை ஒருவருக்கு கன்னிகாதானம் செய்து கொடுப்பது என் தந்தையின் கடமை; அதனால், தங்களுக்கு உடன்பட முடியாது... என்றாள்.

அவளிடம், இந்தக் குழந்தையை பெற்றதுமே நீ கன்னித்தன்மை அடைந்து விடுவாய். என் தவ பலத்தால் அது முடியும்... என்று முனிவர் சொல்லவே, உலக நன்மை கருதி அவள் சம்மதித்தாள்; அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது, விஷ்ணுவின் அவதாரம் என்பதால், பிறந்த சில நிமிடங்களிலேயே, ஏழு வயது பாலகனாகி விட்டது. அவனுக்கு, கிருஷ்ண துவைபாயனர் என்ற பெயர் வைக்கப்பட்டது. வியாசர் தன் தாயிடம், அம்மா... நான் உலக நலன் கருதி வந்தவன். வேதங்களைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. வேதம் வாழ்ந்தால் தான் உலகம் வாழும். அவற்றை பிரிக்கும் பணியைச் செய்யப் போகிறேன். எனவே, உன்னோடு வாழ இயலாது. நீ எப்போதெல்லாம் நினைக்கிறாயோ, அப்போதெல்லாம் உன் முன் வருவேன்... என்று உறுதிமொழி அளித்து, அங்கிருந்து தன் தந்தையுடன் சென்று விட்டார். வியாசர் என்பது பெயரல்ல; அது ஒரு பதவி. ஜோதிடம் சொல்பவர்களை, ஜோதிடர் என்ற பொதுப் பெயரால் அழைப்பது போல, யாரெல்லாம் வேதங்களை பகுத்துப் பிரிக்கின்றனரோ அவர்கள் அனைவருமே வியாசர் தான். அந்தப் பதவியை அதற்கு முன் பலர் வகித்திருந்தனர். ஆனால், பராசர முனிவரின் மகனான வியாசரே அதில் முக்கியப் பங்கு வகித்தார். வேதங்கள் கடல் போன்றவை என்பதால் அவற்றை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்று நான்காகப் பிரித்து, அவற்றை இன்னின்ன பிரிவினர் படிக்க வேண்டும் என்ற புதிய பாதையை வகுத்தார்.

சாதாரண மக்களுக்கு வேதம் புரியாது என்பதாலும், கலியுகத்தில் வேதம் அழியும் நிலைக்கு வந்துவிடும் என்பதாலும், அவற்றை மக்கள் மதிக்க மாட்டார்கள் என்பதாலும், வேதத்தின் சாரமான தர்மத்தின் பெருமையைப் பறைசாற்றும், மகாபாரதம் எனும் இதிகாசத்தைப் படைத்தார். இது தவிர, ஸ்கந்த புராணம், விஷ்ணு புராணம், பிரம்ம புராணம், நாரத புராணம், கருட புராணம் உள்ளிட்ட, 18 புராணங்களையும் எழுதினார். இவற்றின் மூலம் இன்றும் நாம் வேதத்தின் சாரத்தை உணர்ந்து, தெய்வத்துக்கு பயந்து நடக்க வேண்டும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டுள்ளோம். நாட்டில் இன்றும் பல நன்மைகள் நடக்கிறது என்றால், அதற்கு காரணம், வியாசர் எழுதிய நூல்களைப் படித்து, அவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துக்கு ஏற்றாற்போல் நடந்து கொள்வதால் தான். மகாபாரதத்தில் ஒரு பாத்திரமாகவும் வியாசர் வருகிறார். தர்மர் நாடிழந்து, துன்பப்பட்டு, நம்பிக்கை இழந்திருந்த காலத்தில், அவரையும் விட கஷ்டப்பட்ட நளதமயந்தி, அரிச்சந்திரன் கதைகளை எடுத்துச் சொல்லி நம்பிக்கையூட்டினார் வியாசர். சத்தியவான் சாவித்திரியின் கதையை எடுத்துச் சொல்லி, ஒரு பெண்ணே எமனை எதிர்த்து ஜெயித்திருக்கும் போது, உன்னால் கவுரவர்களை வெல்ல முடியாதா? என்று கேட்டார். துன்பங்களை எதிர்த்து வெல்ல நமக்கு நம்பிக்கையூட்டும் கருத்துக்களை அளித்திருக்கும் வியாசரை, நாம் வியாசபூஜை நன்னாளில் நினைவு கூர்வோம். இவ்வளவு மகத்துவங்களுக்கும் சொந்தகாரரான வியாச பகவானுக்கு, மூன்று மத ஆச்சார்யர்கள் செய்யும் பூஜையே வியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரதமாகும். அற்புதமான இந்த விரதத்தை நான்கு மாதங்கள் செய்ய வேண்டும். ஆனாலும்.... ஒரு பக்ஷத்தை ஒரு மாதமாகக் கணக்கில் கொண்டு, நான்கு பக்ஷங்களாக அதாவது இரண்டு மாதங்கள் விரதம் அனுஷ்டிப்பது வழக்கமாகிவிட்டது.

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி.!!!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?


அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.


கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல் ..


"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு 
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் 
விருத்தனும் பாலனாமே.-

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.