Wednesday 9 January 2013

செவிப் ( காது ) பாதுகாப்பு! (மருத்துவ ஆலோசானை)

காது பாதுகாப்பு:

1. காதின் வெளிப்பக்கத்தை சோப்பு மற்றும் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

2.காதில் இருக்கும் மெழுகு போன்ற பொருளை (குரும்பியை) எடுக்கக்கூடாது. அது செவிக்பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது. கசப்பாக இருக்கும் அதில் எந்த பூச்சியும் நுழையாது.

3. ஒரு வேளை பூச்சி ஏதாவது காதிற்குள் நுழைந்து விட்டால் சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய் அல்லது கடலை அல்லது நல்லெண்ணெய் அல்லது ஏதாவது ஒரு சுத்தமான எண்ணெய் காதில் விட்டால் அந்தப் பூச்சியைக் கொன்றுவிடும். பிறகு பீச்சான குழலைப் பயன்படுத்தி எடுத்துவிடலாம். பூச்சி கண்ணுக்கு தெரிந்தால் சாமணத்தால் அதை எடுத்து விடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதே சிறந்ததாகும்.

4.காதில் குச்சிபோட்டுக் குடையக்கூடாது. குச்சியைப் பயன்படுத்தினால் செவிப்பறை கிழிந்துபோக வாய்பப்புண்டு. நலிவுக்கும் உள்ளாக்கும், காதில் சீழ் வழியக்கூடிய அபாயமும் ஏற்படக்கூடும்.

5. காதிலுள்ள உரோமங்கள் மிகவும் முக்கியமானவை, தூசியும், பூச்சியும் காதுக்குள் நுழையாமல் அவை தடுக்கின்றன. எனவே, இவற்றை வெட்டி எடுக்கக்கூடாது.

6.சொத்தைப்பல், கடைவாய்ப்பல் சரியான வெளிவராதிருந்தால், நாக்கு மற்றும் வாய்ப்புண்கள், டான்சில் சதை வளர்ச்சி , கழுத்து எலும்பு தேய்வு, புற்றுநோய் போன்ற நலிவுகள் மற்ற உறுப்புக்களை பாதிப்பதினால் காதில் வலி ஏற்படக்கூடும்.

7. காதில் வலி ஏற்பட்டால் கெட்டியான குறும்பியோ அல்லது புறச்செவியில் நலிவோ ஏற்பட்டிருக்கலாம். இதற்காக மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் காதில் சொட்டு மருந்தைப் போட்டுக் கொள்ளக்கூடாது. தவறான சொட்டு மருந்து காதை அதிகமாக, எதிர்பாராத வகையில் பாதிக்கக்கூடும்.

8. காது வலி தொண்டையில் அழற்சி காரணமாக இருக்கலாம். நோய்க்கிருமிகள் தாக்கத்தின் விளைவாகவும் இருக்கலாம். காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணரை அணுகி சிகிச்சைப் பெறுவது நல்லது.

9. காது திடீரெனக் கேட்கவில்லையென்றால் உடன் 48 மணி நேரத்திற்குள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். காலம் தாழ்த்துவது அல்லது உதாசீனமாக விட்டுவிடுவது விபரித விளைவுகளை ஏற்படுத்துக்கூடும்.

10. குடும்பத்தில் பிறவிச் செவிடர்கள் இருந்தால் இரத்த உறவில் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் காது கேளாமலிக்க வாய்ப்புண்டு.

11. சிறு குழந்தைப் பருவத்தில் காது கேட்கவில்லை என்றால் அந்தக் குழந்தையின் பேச்சும் பாதிக்கக்கூடும். காலங் கடத்தாது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே சிறந்ததாகும்.

12.சில மருந்துகள் செவிட்டுத் தன்மையை ஏற்படுத்தும். ஆகையால் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ள்க்கூடாது.

13.அதிக இரைச்சலான இடங்களில் வேலை செய்வோர் செவிப்பாதுகாப்பு அடைப்பான்களைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

14. சுவாசிப்பதில் தவறான முறையில் மூச்சு வெளியேற்றுவதும் காது வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். மூச்சு உறுப்புகளில் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் காதுவலி ஏற்படலாம்.

15. காது கேட்கவில்லையெனில் நீங்களாகவே கடைகளில் உள்ள பல ரகங்களிலான கேட்க உதவும் பொறியமைவுகளில் ஏதேனும் ஒன்றை வாங்கிப் பயன்படுத்துவது கூடாது. செவித்திறன் குறைவின் அளவைப் பொறுத்து அதற்கேற்ற அமைவினையே பயன்படுத்த வேண்டும்.

16. உணர்வு நரம்பின் செவிட்டுத் தன்மைக்கேற்ற பொறியை மருத்துவரின் பரிந்துரைப்படி பொருத்திக் கொள்ள வேண்டும்.

17. கேட்கும் தன்மைக்கேற்ப பேச்சுத்தன்மையும் அமைகிறது. எனவே செவிட்டுத்தன்மையை புறக்கணிக்கக்கூடாது.

18.அடிக்கடி சளி பிடித்தாலும் தொண்டை வலி ஏற்பட்டாலும் காதின் கேட்புத்திறன் பாதிக்கக்கூடும்.

19.மூக்கை, வேகமாகச் சிந்தக்கூடாது. சிந்தினால் முக்கிலும் தொண்டையிலும் உள்ள கிருமிகள் நடுச் செவிக்குள் புகுந்து காதைச் செவிடாக்கிவிடக்கூடும்.

20. குழந்தைகளின் காதில் ஒருபோதும் அறையக்கூடாது. அறைந்தால் காதுக்கு ஊறு ஏற்பட்டு கேளாமல் போனாலும் போய்விடும்.

21.தண்ணீரில் குதித்துக் குளிப்பதாலும், கடல் நீரல் குளிப்பதாலும் நோய்தொற்று நடுச்செவிக்குழல் மூலம் காதுக்குள் சென்று கடுமையான காது வலியை ஏற்படுத்தக்கூடும்.

1 comment:

  1. ஐயா,
    பயனுள்ள தகவல். எனக்கும் இப்போது உதவுகிறது.
    நன்றி !

    ReplyDelete