Thursday, 23 August 2012

3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!


தூத்துக்குடி அருகே, பாண்டிய மன்னர் காலத்தில் துறைமுக பட்டணமாக திகழ்ந்த கொற்கை கிராமத்தில், 3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், காயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், குலசேகரன்பட்டணம், கொற்கை உள்ளிட்ட கிராமங்கள், துறைமுக பட்டணமாக திகழ்ந்தன. இவற்றிக்கு, தலைமையிடமாக கொற்கை இருந்தது. இங்கிருந்து கடல் வழியாக கப்பல், படகுகளில், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முத்து, சிப்பி, பவளம் உள்ளிட்ட பொருட்களும், மற்ற அத்தியாவசிய பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதுபோல, இறக்குமதியும் நடந்தது. காலப்போக்கில், கொற்கை துறைமுகம் அழிந்து போனது. இந்நிலையில், பெங்களூரில் மத்திய அரசின் தொல்லியல் துறையில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும் அறவாழி, சில நாட்களுக்கு முன், சொந்த மாவட்டமான தூத்துக்குடி வந்தார். அவர், கொற்கையில், பொக்லைன் இயந்திரத்தால் தோண்டப்பட்ட குளத்தில், ஆய்வு மேற்கொண்டார். அங்கு, முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார்.


அறவாழி கூறியதாவது: இந்த குளத்தின் மேற்பரப்பில் களிமண்ணும், அதனடியில் சாதாரண மண்ணும், அதற்கடியில் கடற்கரை மண்ணும் உள்ளன. இதன்மூலம், இங்கிருந்த கடற்பரப்பில் முன்னோர்கள் வாழ்ந்தது தெரிய வருகிறது. காலப்போக்கில் அதற்கு மேல் மண், களிமண் படிந்தது. நடு அடுக்கிலுள்ள சாதாரண மண்ணில், இறந்த முன்னோர்களின் உடலை மண் பானைகளில் போட்டு புதைத்த, முதுமக்கள் தாழிகள் உள்ளன. சராசரியாக, நான்கு அடி உயரத்தில், 25க்கும் மேற்பட்ட தாழிகள், சிதிலமடைந்த நிலையில், இங்கு காணப்படுகின்றன. 

அதிலுள்ள மனித உடல்களின் எலும்புத் துண்டுகளை வைத்து பார்க்கும்போது, இவை, 2,500 முதல் 3,000 ஆண்டிற்கு முந்தையது என கணிக்கப்படுகிறது. எனினும், தொல்லியல் துறை நிபுணர்கள் மூலம், இங்கு மேலும் ஆராய்ச்சி மேற்கொண்டால், இங்கிருந்த முன்னோர்களின் வாழ்க்கை முறை, முதுமக்கள் தாழி போன்ற பல்வேறு அரிய பொருட்கள், தகவல்கள் துல்லியமாக தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, மிகப் பழமையான கண்ணகி கோவில் இங்குள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் முன்னோர்களின் முதுமக்கள் தாழிகள், தொல்லியல் துறை மூலமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதுபோல, கொற்கையிலும் முதுமக்கள் தாழிகளை முழுமையாக கண்டறிந்து, வேலியிட்டு பாதுகாத்து, அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென, வரலாற்று ஆய்வாளர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, மணல் கொள்ளைக்காகவும், புதையல் இருப்பதாக கிளப்பி விடப்பட்ட வதந்தி காரணமாகவும், இக்குளம் பொக்லைன் இயந்திரம் மூலம் தொடர்ந்து தோண்டப்பட்டு, மணல் எடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment