சூரியன், வெள்ளி மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும், அபூர்வ நிகழ்வு வரும், ஜூன் மாதம் 6 தேதி நடக்கவுள்ளது. சராசரியாக, 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது நிகழ்கிறது. இதை, வெள்ளி இடை மறிப்பு எனவும் கூறுகின்றனர்.
சூரிய கிரகணம்:பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவு அமைந்தால், அது சூரிய கிரணம் அல்லது சூரிய மறைப்பு. சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் நிலவு மட்டுமல்லாமல் புதன் மற்றும் வெள்ளி ஆகிய, இரண்டு கோள்களும் வர இயலும். அவை உட்கோள்கள். சூரியனுக்கும், பூமிக்கும் ஒரே நேர்க்கோட்டில் அவை வரும்போது, கோள் மறைவு ஏற்படுகிறது. ஆனால், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கோள்கள், பூமியின் சுற்றுப்பாதைக்கு வெளியே சுற்றி வருகின்றன.
கோள் மறைவு:சூரியனை, புதன், 88 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. பூமி, புதன், சூரியன் ஆகியவை, 116 நாட்களுக்கு ஒரு முறை நேர்க்கோட்டில் சந்தித்தாலும், கோள் மறைவு ஏற்படுவதில்லை. பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து, புதன் ஏழு டிகிரி கோண சாய்வாக உள்ளது. புதனின் பாதை, பூமி வலம் வரும் தளத்தினை, இரண்டு புள்ளிகளில் தான் வெட்டும். அந்த புள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் சூரியன், பூமி மற்றும் புதன் ஆகியவை நேர்க்கோட்டில் சந்தித்தால் மட்டுமே புதன் மறைவு ஏற்படும். ஒரு நூற்றாண்டில், 13 முறை புதன் கோள் மறைப்பு ஏற்படும்.
வெள்ளியின் பாதை:சூரியனை, 225 நாட்களுக்கு ஒரு முறை வெள்ளி வலம் வருகிறது. 548 நாட்களுக்கு ஒரு முறை, பூமியோடு அண்மை இணைவில் வெள்ளி அமையும். ஆனாலும், வெள்ளி கோள் இடை மறிப்பு வெகு அரிதான ஒன்றாகும். வெள்ளியின் பாதை, மூன்று டிகிரி சாய்வாக அமைந்துள்ளது. இப்பாதை, பூமி வலம் வரும் தளத்தினை, ஜூன் முதல் வாரத்திலும் அல்லது டிசம்பர் இரண்டாம் வாரத்திலும், வெள்ளி இடைமறிப்பு நடக்கும். சமகாலத்தில் வெள்ளி இடைமறிப்பு, எட்டு ஆண்டு இடைவெளியில் ஜோடியாக ஏற்படும். அடுத்த ஜோடி இடை மறிப்பு, 121.5 ஆண்டு காலம் அல்லது 105.5 ஆண்டு கால இடைவெளியில் ஏற்படும்.
121 ஆண்டு இடைவெளி: ஒரு வெள்ளி இடை மறிப்பு நிகழ்வு நடந்த, 121.5 ஆண்டுகளுக்கு பின், ஜூன் மாத வெள்ளி இடைமறிப்பு நிகழ்வு நடக்கும். எட்டு ஆண்டுகள் கழித்து, அதே ஜூன் மாதத்தில் வெள்ளி இடைமறிப்பு நிகழ்வு நடக்கும். அதன் பிறகு, 105.5 ஆண்டுகள் கழித்து, டிசம்பர் மாதத்தில் வெள்ளி இடைமறிப்பும், அடுத்த எட்டு ஆண்டுகளில் இடைமறிப்பு நிகழ்வும் நடக்கும். இந்த அபூர்வமான வெள்ளி இடைமறிப்பு நிகழ்வு, வரும் ஜூன் மாதம் 6ம் தேதி நடக்கவுள்ளது.
ஆயிரத்துக்கு 14 முறை: விண்வெளியில் மிகவும் அபூர்வமான வெள்ளி இடைமறிப்பு நிகழ்வு கடந்த, 1882ம் ஆண்டு நடந்தது. பின், கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம், 6ம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து, இரண்டாவது நிகழ்வு ஜூன் மாதம், 6ம் தேதி நடக்கவுள்ளது. அதன் பிறகு, 2117ம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் வெள்ளி இடைமறிப்பு நடக்கும்.ஆயிரம் ஆண்டிற்கு சராசரியாக, 14 முறையில் இருந்து 18 முறை வரை மட்டுமே, இந்த வெள்ளி இடைமறிப்பு நிகழ்வு நடக்கிறது.
எப்போது தெரியும்:இந்தியாவில், வரும் ஜூன் மாதம் 6ம் தேதி, சூரிய உதயத்திற்கு முன் அதிகாலை, 3.40 மணிக்கு, இந்த நிகழ்வு துவங்கிவிடும். காலை, 10.21 மணி வரை நடக்கும். இந்த காட்சியை நாம் நேரடியாக வெறும் கண்ணால் பார்க்க கூடாது. உலகில் சில நாடுகளில் அதிகாலையிலும், வேறு சில நாடுகளில் மாலை நேரத்திலும் பார்க்க முடியும்.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின்கீழ் இயங்கும், விஞ்ஞான் பிரசார் சார்பில், இந்தியா முழுவதும் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள், இந்த வெள்ளி இடை மறிப்பு நிகழ்வை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பார்ப்பது எப்படி?வெள்ளி இடைமறிப்பு நிகழ்ச்சியை, வெறும் கண்களால் பார்த்தால் பார்வை நிரந்தரமாக பறிபோகும் வாய்ப்பு அதிகம் என, அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிகழ்வை, *டெலஸ்கோப் மூலம் பிம்பத்தை திரையிட்டு அதில் காணலாம். *பின்-ஹோல் கேமராவில் பிம்பத்தை திரையிட்டு பார்வையிடலாம். பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளை பயன்படுத்தலாம். வெல்டிங் கிளாஸ் எண் 14 மூலமாகவும் நிகழ்வை காணலாம்.
சூரியன் - பூமி தொலைவை கணக்கிட.சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவை ஓரளவு துல்லியமாக அளவிட, வெள்ளி இடைமறிப்பு உதவியுள்ளது. இடமாற்று தோற்றப்பிழை மூலமாகவே, சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தொலைவு கணக்கிடப்பட்டுள்ளது. இடமாற்று தோற்றப்பிழைக்கு உதாரண மாக, முகத்திற்கு நேராக கையை முழுமையாக நீட்டி, ஒரு விரலை தவிர மற்ற விரல்களை மூடிக்கொள்ள வேண்டும். அந்த விரலை வலது மற்றும் இடது கண்களை ஒவ்வொன்றாக மூடிப்பார்த்தால், அந்த விரல் இடம் மாறியிருப்பது தெரியும். இதுவே இடமாற்று தோற்றப்பிழை.
அதே விரலை, கண்களுக்கு அருகில் கொண்டு வந்து கண்களை மூடி திறந்தால், விரல் அதிகம் நகர்ந்திருப்பதாக உணர்வோம். எனவே, தொலைவில் இருந்தால் இடமாற்று தோற்றப்பிழை குறைவாகவும், அருகில் இருந்தால், அதே இடமாற்று தோற்றப்பிழை அதிகமாகவும் காணப்படும். அதன்படியே, வெள்ளி இடைமறிப்பு நிகழ்வு நடக்கும்போது, தோற்றப்பிழையை கொண்டு வெள்ளி மற்றும் சூரியனின் தொலைவு மற்றும் சூரிய மண்டலத்தின் தனி அளவு அளவிடப்பட்டதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment