திருமலை நாயக்கரின் பேரன் சொக்கநாதரின் மனைவி ராணி மங்கம்மாள். சொக்கநாதரின் இறப்புக்குப் பின் மகனான முத்துவீரப்பன் ஏழு ஆண்டுகள் ஆட்சி செய்தார். முத்து வீரப்பன் மன்னராக இருந்தபொழுது ஒளரங்கசீப் தனது செருப்பில் ஒன்றை தனது தளபதிகளிடம் கொடுத்து எல்லா மன்னர்களும் வணங்கும்படி நாடு முழுவதும் அனுப்பி வைத்தார். சிலர் பயந்து கொண்டு முகலாய மன்னரின் செருப்புக்கு விதியே என்று வணக்கம் செலுத்தினர். ஆனால் முத்து வீரப்பன் அச்செருப்பை எடுத்து தனது ஒரு காலில் அணிந்து கொண்டு `இன்னொரு செருப்பை உங்கள் மன்னர் அனுப்பவில்லையா?' என்று வீரத்துடன் கேட்டார். அத்தகைய தைரியமிக்க முத்து வீரப்பன் அம்மை நோய் கண்டு இறந்து போனார்.
முத்து வீரப்பன் இறந்தபொழுது அவனது மனைவி முத்தம்மாள் கர்ப்பமாக இருந்தாள். குழந்தையைப் பெற்று தன் மாமியாரிடம் கொடுத்து விட்டு, பன்னீரைக் குடித்து ஜன்னி கண்டு இறந்து போனாள் முத்தம்மாள். குழந்தைக்கு சொக்கநாதன் என்று தாத்தாவின்(தன் கணவர்)பெயரை சூட்டிய மங்கம்மாள் மூன்றாவது மாதத்திலேயே அவனுக்கு இளவரசு பட்டம் சூட்டி அவன் சார்பில் கி.பி.1689 முதல் 1706 வரையில் அரசாண்டாள்.
சத்ரபதி சிவாஜியின் மறைவுக்குப் பின் ஒளரங்கசிப் பயம் நீங்கப் பெற்றவனாய் தென்னகத்தில் தன் ஆட்சியை விரிவு படுத்த விரும்பி பெரும்படையை அனுப்பி வைத்தான். அப்படையிடம் மைசூர் மன்னன் சிக்க தேவராயன், தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசன் ஆகியோர் அடிபணிந்து கப்பம் கட்ட ஒப்புக்கொள்ள வேறு வழியின்றி மங்கம்மாளும் திரை செலுத்த சம்மதித்தாள். அத்துடன் முகலாயப் படையின் துணைக்கொண்டு உடையார்ப்பாளைம் சிற்றரசனை தோற்கடிக்க, ஒளரங்கசிப்புக்கு விலையுயர்ந்த அணிகலன்களையும், படைத்தலைவனுக்கு 20,000 வெள்ளி நாணயங்களையும், திவானுக்கு 10,000 வெள்ளி நாணயங்களையும் பரிசாகக் கொடுத்தாள் மங்கம்மாள். ஆனாலும் மராட்டிய மன்னர்களின் தொல்லை அவளுக்கு தொடர்ந்தபடி இருந்தது. அடிக்கடி அவர்களுக்கு பணமும் கொடுக்க வேண்டி இருந்தது.
திருவிதாங்கூர் அரண்மனை மதுரைக்கு அடங்கி கப்பம் கட்டி வந்தது.உமையம்மை என்னும் அரசி கூட மங்கம்மாளின் மகன் முத்து வீரப்ப்நாயக்கர் ஆட்சி செய்தபோது திருநெல்வேலிக்கு வந்து அவரை வணங்கி திரை செலுத்தி சென்றாள். ஆனால் மங்கம்மாள் காலத்தில் ராஜாவாக இருந்த ரவிவர்மன் ஆட்சிக்கு வர, அவர் கப்பம் கட்ட மறுத்தார். ஆனால் மங்கம்மாள் அவரை சும்மா விடாமல் ஆண்டுதோறும் படையை அனுப்பி கொள்ளை அடித்தும் மன்னனை வற்புறுத்தியும் பணம் பெற்று வந்தாள்.
திருவிதாங்கூரை எட்டு வீட்டுப் பிள்ளைமார்கள் என்பவர்கள் அரசனின் அதிகாரத்தை கைப்பற்றி அடக்கி,முடக்கி வைத்திருந்தனர். அதனால் பாண்டிய நாட்டு படைகள் ஆண்டுதோறம் கொள்ளை அடித்தது. அரசனால் இரண்டு எதிரிகளை சமாளிக்க முடியவில்லை.
பாண்டிய நாட்டுப் படைகள் பிள்ளைமார்களை ஒடுக்கினால் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் பாதி தருவதாகக் கூறினான் ரவிவர்மன். அதன்படி பிள்ளைமார்களை மங்கம்மாள் அனுப்பிய வீரர்கள் ஒழித்துக் கட்டினர்.
சொன்னபடி ராஜ்ஜியத்தில் பாதி தராமல் ஏமாற்றினான் ரவிவர்மன்.இதனால் வஞ்சினம் கொண்ட மங்கம்மாள் தளவாய் நரசப்பய்யா தலைமையில் பெரும்படை ஒன்றை அனுப்பி ரவிர்மனை அடக்கி பெருமளவில் பணத்தைப் பெற்றாள்.
குளம் வெட்டி வளம் பெருக்கி சாலை அமைத்து அறம் பல செய்து மதுரையை ஆண்ட மங்கம்மாள் வயதான பிறகும் தன் பேரனிடம் ஆட்சியை ஒப்படைக்காமல் பிடிவாதமாக இருந்தது அவளது உயிருக்கே ஆபத்தாக முடிந்தது.
இவளது பேரன் விஜயரங்க சொக்கநாதனுக்கு இளவரசு பட்டம் சூட்டி அவனது சார்பில் அரசாண்ட மங்கம்மாள் அவன் வளர்ந்து வாலிபனான பிறகும் அவனிடம் ஆட்சியை ஒப்படைக்கவில்லை. அவனும் ராஜாபதவிவேண்டும் என்று வற்புறுத்தியும் கேட்டான். ஆனால் மங்கம்மாள் அவனைச் சுற்றி உள்ள ஆட்கள் சரியில்லை என்று காரணம் கூறி ஆட்சியை ஒப்படைக்க மறுத்தாள். இதனால் கோபமுற்ற சொக்கநாதன் பாட்டியை பிடித்து சிறையில் தள்ளியதோடு சோறு, தண்ணீர் தராமல் பட்டினி போட்டான்.
பட்டினியால் வாடிய மங்கம்மாள் கடைசியில் மயக்கமுற்று, சிறைக் கம்பிகளுக்கு நடுவே தன் இன்னுயிரை நீத்தாள்.மங்கம்மாள் 1706-ல் மரணத்தை தழுவினாள்.
No comments:
Post a Comment