Showing posts with label சிறு கதைகள். Show all posts
Showing posts with label சிறு கதைகள். Show all posts

Friday, 12 October 2012

நல்லதை மட்டுமே கேளுங்க.

ஒரு ஊரில் ஜென் மாஸ்டர் தன் சீடர்களோடு மடத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது ஒருவர் மாஸ்டரை பார்க்க வந்தார். அவர் மாஸ்டரிடம் "குரு, நான் உங்கள் சீடனைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை சொல்வதற்காக வந்துள்ளளேன்" என்று கூறினார். அதற்கு அந்த குரு அவரிடம், "முதலில் நான் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு பதிலளியுங்கள்" என்று கூறினார்.

அவரும் "சரி!" என்று கூறினார். அப்போது குரு அவரிடம் முதல் கேள்வியாக "நீங்கள் சொல்லும் விஷயம் உங்களுக்கு முன்பு நடந்ததா?" என்று கேட்டார். அதற்கு அவர் "இல்லை" என்று கூறினார்.

பின் இரண்டாவது கேள்வியாக "இப்போது சொல்லப் போகும் விஷயம் நல்லதா? கெட்டதா?" என்று கேட்டார். அவர் "கெட்டது" என்று பதிலளித்தார்.
மூன்றாவதாக அவரிடம் "நீங்கள் சொல்லும் விஷயத்தை கேட்பதால், எனக்கு லாபமா? நஷ்டமா?" என்று வினாவினார். "அப்படி எதுவுமே இல்லை குருவே" என்றார்.

பின் குரு அவரிடம் "நீங்கள் சொல்லும் விஷயம் உண்மையா பொய்யா என்பதும் தெரியாது, கேட்காமல் நான் இருந்தால், எனக்கு எந்த நஷ்டமும் இல்லை, சொல்லப் போகும் விஷயம் வேறு கெட்டது, பின் எதற்கு நான் கேட்க வேண்டும்" என்று கேட்டு, வந்தவரை திருப்பி அனுப்பிவிட்டார்.

Thursday, 11 October 2012

சரியான பதிலடி!!!

துறவி ஒருவர், நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள இருந்தார். அதனால் அவர் தன் மடாலயத்தில் இருந்து புறப்பட்டார். பயணம் செய்யும் போது, ஒரு பெரிய ஆற்றை கடக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த ஆற்றை கடக்க சாய்ந்து விழுந்த ஒரு தென்னை மரத்தை தான் அந்த ஊர் மக்கள் பயன்படுத்தினர்.

இந்த மரத்தில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும். அத்தகைய குறுகலான மரம் அது. துறவியும் கடப்பதற்கு மரத்தில் ஏறி நடக்க ஆரம்பித்து, கரையை கடக்கும் அளவில் வந்துவிட்டார். அப்போது மறுகரையில் இருந்து, ஒருவன் ஆற்றை கடக்க ஏறி வந்தான். அவன் மிகவும் கோபக்காரன், யாரையும் மதிக்காதவன். இதனால் அவன் ஊரில் உள்ளோரிடம் கெட்டப் பெயரைத் தான் ஈட்டினான்.

ஆனால் அவனிடம் துறவி அன்புடன், "தம்பி, எனக்கு சிறிது வழிவிடுங்கள், நான் இந்த ஆற்றை கடக்க இன்னும் சிறிது தூரம் தான் உள்ளது. கொஞ்சம் வழிவிட்டால் நன்றாக இருக்கும்" என்று கேட்டார்.

அதற்கு அவன், "முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு இல்லை" என்று ஆணவத்தோடு கூறினான். ஆனால் பெரியவர் எதுவும் பேசாமல், திரும்பி சென்றார். பின் அவன் "எதற்கு எனக்கு வழிவிட்டீர்கள்?" என்று கேலியாக கேட்டான்.

துறவி அதற்கு "முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு உண்டு" என்று கூறி மறுபடியும் நடக்க ஆரம்பித்தார்.

நன்றி : போல்ட் ஸ்கை

Sunday, 16 September 2012

மனநிறைவு பெற வழி!!!

ஒரு ஊரில் செல்கந்தன் ஒருவன் தன் தொழிலால் நிறைய செல்வங்களை சேகரித்து வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய வேலையாட்கள் வேலை செய்து வருகின்றனர். என்ன தான் அவனிடம் செல்வம் இருந்தாலும், அவனது மனம் மட்டும் முழுமையடையவில்லை.

அதற்காக அவன் ஒரு துறவியை சந்தித்து தன் பிரச்சனையை சொல்லி, அதற்கான காரணம் மற்றும் தீர்வதற்கான வழியைத் தெரிந்து கொள்ள விரும்பினான். அதேப்போல் ஒரு துறவியை சந்தித்து, எல்லாவற்றையும் கூறினான். அவனது கேள்விக்கான விடையை தெளிவுபடுத்த, துறவி அவனை ஒரு மலை அடிவாரத்திற்கு அழைத்துச் சென்று, மூன்று கனமான கற்களைக் கொடுத்து, தூக்கிவரச் சொன்னார். அவனும் தூக்கினான். ஆனால் அவனால் நடக்க முடியவில்லை. அதனால், துறவி அதில் ஒரு கல்லை மட்டும் தூக்கிப்போட்டு வரச் சொன்னார்.

அவனும் தூக்கிப் போட்டு, இரண்டு கற்களை தூக்கிக் கொண்டு சென்றான். சிறிது தூரம் கழித்து, அவனால் அதையும் தூக்க முடியவில்லை, ஆகவே அதில் ஒன்றை தூக்கிப் போடச் சொன்னார் துறவி. அவனும் தூக்கிப் போட்டு நடக்க ஆரம்பித்தான்.
மீண்டும் சிறிது தூரம் சென்றதும் அவனால் முடியவில்லை, துறவியும் அதை தூக்கிப் போட்டு நடக்கச் சொன்னார். பின்னர் அவனும் எந்த சிரமமும் இல்லாமல் நடந்தான். பின் இருவரும் மலை உச்சியை அடைந்தனர்.

அப்போது துறவி அவனிடம் "உன்னால் எப்படி அந்த கற்களின் கனத்தை தாங்க முடியாமல் தினறினாயோ, அதேப்போல் தான் உன்னால் செல்வத்தை வைத்துக் கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை. எவ்வாறு ஒவ்வொரு கல்லாக தூக்கிப் போட்டதால், நடக்க முடிந்ததோ, அதேப்போல் தான் நீ உன்னிடம் இருக்கும் செல்வத்தையும் அனைவருக்கும் கொடுத்து வந்தால், அவர்களது ஆசிர்வாதத்தால், உனக்கு ஒரு மனநிறைவு கிடைத்திருக்கும். எவ்வாறு மலை உச்சியை எந்த ஒரு கனமும் இல்லாமல் நிம்மதியாக அடைந்தாயோ, அதேப்போல் நீயும் நீண்ட நாட்கள் எந்த ஒரு மனக்குறையும் இன்றி நிம்மதியுடன் இருப்பாய்" என்று சொன்னார். அன்று முதல் அவனும் அனைவருக்கும் வாரி வழங்கி வாழ்ந்து வந்து, மன நிம்மதி அடைந்தான்.

Saturday, 15 September 2012

குட்டிக் கதை

நாட்டில் வரி வசூல் செய்ய நேர்மையான ஒருவரை கண்டுபிடிக்க வேண்டும் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார் மன்னர். மந்திரியோ,"கவலைப்படாதீர்கள்! இதுவரை இந்த வேலைக்கு யார் யார் மனுச் செய்துள்ளார்கள். அவர்களை எல்லாம் நாளை அரண்மனைக்கு வரச் சொல்லுங்கள். நேர்மையான ஆளை நான் கண்டுபிடிக்கிறேன்'' என்றார். 

எல்லாரும் அரசவைக்கு வந்தனர். ""நீங்கள் எல்லோரும் கைகளையும், கால்களையும் தூக்கி பயிற்சி செய்யுங்கள்'' என்று சொன்னார் மந்திரி. ஒருவரைத் தவிர எல்லோரும் ஆடாமல் அமைதியாக நின்றனர். பயிற்சி செய்த இவர்தான் நேர்மையானவர் என்றார் மந்திரி. 

எப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டார் அரசர். ""இவர்கள் எல்லோரையும் நான் இருட்டு அறையின் வழியாக இங்கு வரச் செய்தேன். இருட்டு அறையில் திறந்த சாக்குகளில் நிறைய தங்க நாணயங்கள் வைத்திருந்தேன். பயிற்சி செய்ய மறுத்தவர்களை சோதனை செய்யுங்கள்; நாணயங்கள் கிடைக்கும். பயிற்சி செய்தால் எங்கே மாட்டிக் கொள்வோம் என்றுதான் செய்ய மறுத்தார்கள். பயிற்சி செய்தவர் மட்டும்தான் நேர்மையானவர்'' என்றார் மந்திரி.

Friday, 14 September 2012

வேலை செய்யாவிடில் உணவு இல்லை!!!

ஒரு ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் எண்பது வயதிலும் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்வதை கொள்கையாக கொண்டு வாழ்ந்து வந்தார்.மேலும் அவர் தான் முதுமை அடைந்ததையும் பொருட்படுத்தாமல், அவர் தங்கியிருந்த இடத்தில் உள்ள தோட்டத்தை சீரமைப்பது, மரங்களுக்கு நீர் ஊற்றுவது, களை அறுப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார்.

அதைக் கண்ட துறவியின் சீடர்கள், இந்த வயதிலும் தங்கள் குரு வேலை செய்வதைக் கண்டு வருத்தப்பட்டனர். அதை அவர்கள் தங்கள் குருவிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை. எனவே சீடர்கள் இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடிவு செய்தனர்.

அதனால் அந்த சீடர்கள் குரு வேலை செய்யப் பயன்படுத்தும் கருவிகளான மம்முட்டி, கடப்பாறை போன்றவைகளை,குருவின் கண்களுக்குப் புலப்படாதவாறு மறைத்து வைத்தனர். ஆனால், குருவோ! வேலை செய்யாத காரணத்தினால், அன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்தார். சீடர்களும் இதை கவனித்து வந்தனர். பின் மறுநாளும் குரு சாப்பிடாமல் வெறுமையாக அமர்ந்திருந்தார்.இதைக் கண்ட சீடர்கள் வேறு வழியின்றி அந்த பொருட்களை குருவிடமே ஒப்படைக்க முடிவெடுத்து குருவின் கண்களுக்குப் தென்படும்படியாக அப்பொருட்களை வைத்தனர்.

குரு தான் வேலை செய்ய பயன்படுத்தும் பொருட்கள் தென்பட்டதும், அவருடைய வேலையை மீண்டும் தொடர்ந்தார். அன்று வேலை செய்ததால் அவர் உணவு அருந்தினார்.

இதைப் பற்றி சீடர்கள் குருவிடம் கேட்கும் போது,"உழைக்காமல் உண்ணும் உணவு உடம்பில் சேராது" என்று கூறினார். பின் சீடர்களிடம் "நீங்கள் வேலை செய்யாவிடில் உணவு இல்லை" என்று சொல்லி உள்ளே சென்று விட்டார்.

Thursday, 13 September 2012

தவளையின் வெற்றி ரகசியம்!!!

துறவி ஒருவர் எப்போதும் தனது சீடர்களுக்கு மாலை வேளையில் புத்தியை புகட்டும் சிறுகதைகளை சொல்வதை வழக்கமாக கொண்டார். அன்றும் அதேப்போல் தனது சீடர்களை அழைத்து கதை சொல்ல ஆரம்பித்தார். அப்போது அவர் சீடர்களிடம், "இதுவரை நான் உங்களிடம் கதையைக் கூறி, அதற்கான சிந்தனையையும் சொல்வேன். ஆனால் இப்போது நீங்கள் நான் சொல்லும் கதையை புரிந்து கொண்டு, கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்ல வேண்டும்" என்று கூறினார். அதற்கு சீடர்களும் "சரி, குருவே!" என்று கூறி, அந்த கதையை மிகவும் கூர்மையாக கேட்க ஆரம்பித்தனர்.

பின் குரு கதையை சொல்ல ஆரம்பித்தார். "ஒரு ஊரில் தவளை போட்டி நடந்தது. அந்த போட்டியில் நிறைய தவளைகள் பங்கு கொண்டன. அது என்ன போட்டியென்றால், உயரமான குன்றின் உச்சிக்கு யார் முதலில் செல்வது என்பது தான். அந்த உச்சியின் உயரத்தைப் பார்த்து, அங்கு கூடியிருந்தவர்கள, எந்த தவளையும் இந்த உச்சியை அடைய முடியாது என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ஆனால் அதில் ஒரு தவளை மட்டும் அவர்கள் பேசுவதை கூர்மையாக பார்த்தது. பின் போட்டி தொடங்கியதும், அனைத்து தவளைகளும் அடித்து பிடித்து, ஒன்றன் மேல் ஒன்றாக ஏறி, வழுக்கி விழுந்தன. ஆனால் ஒருசில தவளைகள் சற்று நிதானமாக ஓரளவு உயரத்தை அடைந்து, முடியாமல் கீழே வந்துவிட்டன.ஒரு தவளை மட்டும் உயரத்தை பொருட்படுத்தாமல் ஏறி உச்சியை அடைந்தது. அங்கு கூடியிருந்த அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். பின் பரிசை கொடுப்பதற்காக அந்த வெற்றி பெற்ற தவளையைப் பார்த்து, உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கேட்டால், அந்த தவளை எதுவுமே பேசாமல் இருந்தது. ஏன்?" என்று குரு கேட்டார்.

அனைத்து சீடர்களும் அவர்களுக்குள் ஒரே குழப்பத்தில் இருந்தனர்.பின்னர் அவர்கள் "தெரியவில்லையே" என்று குருவிடம் கூறினர். அதற்கு குரு "வேறு எதுவும் இல்லை, அந்த தவளைக்கு காது மற்றும் வாய் பேச வராது, அதனால் தான் அது எதுவும் பேசவில்லை" என்று கூறினார். அதுமட்டுமல்லாமல், "அந்த தவளை வெற்றி என்னும் நோக்கத்தை மட்டும் மனதில் வைத்து போட்டியில் பங்கு கொண்டதால் தான்,அதனால் வெற்றி பெற முடிந்தது" என்பதையும் கூறி சென்று விட்டார்.

Wednesday, 12 September 2012

இனியது ஆண் குயிலா..? பெண் குயிலா..?

சிரிக்க சிந்திக்க..

என்னங்க..! இன்றைக்கு நம்ம கல்யாண நாளுங்க..!
அதுக்கு என்ன இப்போ..? நீங்க என்னை பொண்ணு பார்க்க வந்தது ஞாபகத்துக்கு வருது..!

ஹி..ஹி..
ஆமாம்அது ஒரு மறக்க முயாத நாள்தான்..! அன்றைக்கு உங்க முன்னாடி உக்காந்து நான் வீணை வாசிச்சேன்..
நீங்க கண்ணை மூடி அதை ரசிச்சீங்க..!
எனக்கு எப்போதுமே சங்கீதத்துலே ஓர் ஈடுபாடு உண்டு..

பறவைகளிலே கூட எனக்கு ரொம்பவும்
பிடிச்சது குயில்தான்..!

அப்படியா..?

அது இருக்கட்டும்.
இப்ப ஒரு கேள்வி கேக்கறேன்.. பதில் சொல்லு பார்ப்போம்..!

கேளுங்க..

இனிமாயா கூவறது
ஆண் குயிலா..? பெண் குயிலா..?

இது என்ன கேள்வி....!
பெண் குயிலாத்தான் இருக்கணும்..!

இப்படித்தான் பலபேர்
நினைச்சிக்கிட்டிருக்காங்க.. அது தப்பு..

அப்படின்னா..?

உண்மையிலேயே
ஆண் குயில்தான் மனசைக் கவரக் கூடிய இனிய ஓசையை எழுப்புது..!

எதுக்காக..?

வசந்தகாலம் குயில்களின் இனப் பெருக்கத்துக்கு ஏற்ற
காலம். பெண் குயில்களை வசீகரிக்கறதுக்குத்தான் ஆண் குயில்கள் அப்படி இனிய ஓசையை எழுப்புது..!

ஆண் குயில் காகம் மாதிரிக் கறுப்பா இருக்கும்.
பெண் குயில் கொஞ்சம் சாம்பல் நிறமா இருக்கும். உடம்புலே சின்னச் சின்ன வெண்ணிறப் புள்ளிகள் இருக்கும்..!

உங்களுக்குச் சங்கீதம் மட்டுமில்லே.. சயின்ஸூம் நல்லா தெரிஞ்சிருக்கே..! இதை நீ தெரிஞ்சிக்கிறதுக்கு இவ்வளவு காலம் ஆயிருக்கு..!

அப்படிச் சொல்லாதீங்க.. எனக்கு அப்பவே தெரியும்..!

எப்பவே..?

என்னைப் பொண்ணு பார்க்க வந்தப்பவே..!

என்ன தெரியும்..?

நீங்க ஒரு கலா ரசிகர்ன்னு..!

எப்படி தெரியும்..?

நான் வீணையை கையிலே எடுத்து ஓர் அஞ்சு நிமிஷம் வாசிச்சவுடனே ஓடி வந்து என் கையைப் பிடிச்சுகிட்டுப் பாராட்டினீங்களே..!

அது ஏனு தெரியுமா..?

ஏனாம்..?

நீ மறுபடியும் வாசிக்க ஆரம்பிச்சுடப்புடாது என்பதற்தகாகத்தான்..!

Wednesday, 5 September 2012

நம்பிக்கை வெற்றி தரும்..!!!

ஒரு நாட்டில் ஒரு படைதளபதி இருந்தார், அந்த  தளபதி தன் படை வீரர்களுடன் எதிரிகளை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தார். எதிரிகளிடம் அதிக அளவில் படைபலம் இருந்தது. ஆனால் தளபதியிடம் இல்லை. இதை அறிந்திருந்த படைவீரர்கள் மிகவும் அஞ்சினர். ஆனால் படை தளபதிக்கு தன் படைவீரர்களின் வீரம் தெரிந்திருந்ததால், அவர் நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆகவே அவர் ஒரு துறவியை பார்த்து, தன் படை வீரர்களுக்கு எவ்வாறு நம்பிக்கையை ஏற்படுத்துவது என்று கேட்கச் சென்றார். அதைக் கேட்ட துறவி அந்த தளபதியிடம் "நீ படையை நடத்தி செல்லும் வழியில், ஒரு கோயிலுக்குள் சென்று வெளியே வந்து, உன் வீரர்களின் முன் இந்த நாணயத்தை கொண்டு போய் தலை விழுந்தால் நமக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்" என்று கூறினார்.

அதேப்போல் தளபதியும் செய்தார். அப்போது தலையும் விழுந்தது. இதனால் தம் மீது நம்பிக்கை இழந்திருந்த வீரர்கள், தலை விழுந்ததும், நம்பிக்கையுடன் போரில் போரிட்டனர். அவ்வாறு போரிட்டு, அவர்களும் வெற்றிப் பெற்றனர்.

சிறிது நாட்கள் கழித்து, தளபதியுடன் இருக்கும் வீரன் ஒருவன், "நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்" என்றான். ஆமாம் என்று கூறிய தளபதி, அவனிடம் அந்த நாணயத்தை காண்பித்தார்.

இக்கதையிலிருந்து, நம்பிக்கை இருந்தால், எத்தகைய போட்டி என்றாலும் வெற்றிப் பெறலாம் என்பது நன்கு வெளிப்படுகிறது.

தேளின் இயல்பும்... துறவியின் இயல்பும்

ஒரு மடாலயத்தில் ஜென் துறவிகள் இருவர் வாழ்ந்து வந்தனர். ஒரு முறை மடாயத்தில் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில், அவர்களுக்கு வியர்த்து கொட்டியது. அதனால் அவர்கள் காற்றோட்டமாக நடக்கலாம் என்று முடிவு எடுத்தனர்.

அதனால் அவர்கள் அந்த மடாலயத்தின் அருகில் உள்ள நதிக்கரையோரம் நடந்து சென்றனர். அப்போது தேள் ஒன்று கவனம் தவறி தண்ணீரில் தவறி விழுந்துவிட்டது. அதைப் பார்த்த ஒரு துறவி அதை எடுத்து தரையில் விட்டார். அப்போது அந்த தேன் அவரை கொட்டிவிட்டது.

கொட்டும் போது மறுபடியும் தண்ணீரில் தவறி விழுந்தது. மீண்டும் வெளியே எடுத்துவிட்டார். மறுபடியும் கொட்டி நீரில் விழுந்தது. அவரும் எடுத்து வெளியே விட்டார். இது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த மற்றொரு துறவி அவரிடம், "அது தான் கொட்டுகிறதே, ஏன் காப்பாற்றுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த துறவி "கொட்டவது அதன் இயல்பு, நான் என் இயல்பில் இருக்க விரும்பிகிறேன். அதனால் தான்." என்று கூறினார்.