ஒரு காலத்தில் நாம் ஆற்றில் மூழ்கி நீராடினோம். இப்போது, ஆறுகள் எதிலும் தண்ணீர் இல்லை. தப்பித்தவறி வந்தாலும் அது சுத்தமாக இல்லை. ஆறுகளை எப்படியெல்லாம் சீரழிக்க வேண்டுமோ அந்தளவுக்கு அவமானப்படுத்தி விட்டோம்!
பூமி மாதாவுக்கே பொறுக்கவில்லை.
இனி எதற்கு உங்களுக்குத் தண்ணீர்.?என ஓடுவதையே நிறுத்தி விட்டாள்.
வருணனும் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறான்.பெய்தால் மொத்தமாகப் பெய்து ஆற்றின் அருகிலேயே நெருங்க விடாமல் செய்து விடுகிறான்.இந்த நிலை ஏன் ஏற்பட்டதென்றால், சாஸ்திரப்படி நாம் நடந்து கொள்ளவில்லை.ஆற்றுநீரை வாயில் எடுத்து,ஆற்றிலேயே உமிழக்கூடாது. நீர் மொண்டு கரைக்கு வந்து வெளியே தான் உமிழ வேண்டும். ஆறுகளின் உருவம் மற்றும் ஓடும் நீர் குறித்து பரிகாசம் செய்யக்கூடாது. இரவில் ஆறு, அருவிகளில் நீராடக் கூடாது. கிணறுகளில் இரவு நேரத்தில் தோண்டி, வாளிகளை உள்ளே போட்டு நீர் இறைக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் இரவில் உறங்கும் நதிதேவதைகளை எழுப்புவதாக அர்த்தம். (உறங்குபவர்களை தெரிந்தே எழுப்புவது கொடிய பாவம்). காலில் நேரடியாக தண்ணீர் ஊற்றி கழுவக்கூடாது. தண்ணீரை முகந்து கை வழியே வழியவிட்டு தான் கால் கழுவ வேண்டும். ஏனெனில், தண்ணீரில் வருணன் இருக்கிறான். அவனை நேரடியாக காலில் போட்டு மிதிக்கக்கூடாது. காலைத் தேய்த்துக் கழுவ கைகளையே பயன்படுத்த வேண்டும்.
ஒரு காலை மற்றொரு காலால் தேய்த்தால்,அவ்விடத்தை விட்டு லட்சுமி புறப்பட்டு போய்விடுவாள். அவளுக்கு இந்தச் செயல் பிடிக்கவே பிடிக்காது. உடலில் துணி இல்லாமல் குளிக்கக்கூடாது.இதனால் தான் குழந்தைகளுக்கு கூட அரைஞாண் கயிறைக் கட்டி விடுகிறார்கள்.இதை மீறி யாராவது நடந்தால் அடுத்த பிறவியில் பட்டமரமாகப் பிறப்பார்கள் என்கிறது சாஸ்திரம். இதில் ஏதாவது ஒன்று இப்போது நிகழ்கிறதா! இல்லை... எனவே நதிகள் நம்மிடம் கோபித்துக் கொண்டன. தண்ணீர் இல்லை. ஆறு சுருங்கி 20 ரூபாய் பாட்டிலாக நம் கையில் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் பாட்டில் தண்ணீருக்கும் ஆபத்து தான்!
No comments:
Post a Comment