எங்கே பார்த்தாலும் செழிப்பும், வளமையும்
பொங்கி ஒரு பிரமிக்கத்தக்க பிரம்மாண்டமான வளர்ச்சியுடன் காணப்படும் இன்றைய திருமலை
ஒரு காலத்தில் எப்படி இருந்தது என்பதை அறிந்தால் நிறைய ஆச்சரியப்படுவீர்கள். யாராக
இருந்தாலும் நடந்துதான் போகவேண்டும் என்ற நிலையில் பகலில் மட்டும் ஒரு குழுவாக
சேர்ந்து தான் போய்வருவார்கள் அப்போதும் காட்டு விலங்குகளிலிடமிருந்து
பாதுகாத்துக் கொள்வதற்காக நிறைய முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வார்களாம்.
மேலும் நடக்கமுடியாதவர்களை ஐயப்பன் கோயிலுக்கு அழைத்துச் செல்வது போல டோலி கட்டி
தூக்கிச் செல்வார்களாம். போக்குவரத்தை மேம்படுத்தினால் மட்டுமே கோவில் வளர்ச்சி
அடையும் என்ற நிலையில் நிறைய சிரமமும், செலவும் செய்து மண் பாதை
போட்டிருக்கிறார்கள். அந்த பாதையிலும் முதலில் மாட்டு வண்டிகள் தான் பயணம்
சென்றிருக்கின்றன.
பின்னர் மோட்டார் வண்டிகளை விட்டுள்ளனர். ஆனால் வளைந்து, நெளிந்து செல்லும்
பாதையில் மோட்டார் வாகனத்தில் பயணம் செய்ய முதலில் மக்கள் அச்சப்பட்டனர்.
அதன்பக்கத்தில் நின்று புகைப்படம் கூட எடுத்துக் கொள்வார்களாம். ஆனால் மோட்டார்
வாகனத்தில் ஏறமாட்டார்களாம். இதன் காரணமாக வெறிச்சோடிய மலைப்பாதையில் எப்போதாவது
ஒரு சில வண்டிகள் மட்டும் போய்வருமாம். அதன் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக பயம் நீங்கி
மக்கள் போய்வர இப்போது ஒரு நிமிடத்திற்கு ஓரு பஸ் என்று இடைவெளி இல்லாமல் போய்,
வந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்து
கொண்டுதான் இருக்கிறது. வரக்கூடியவர்களுக்கு மனதார தரிசனம் என்பது ஒரு பக்கம்
இருந்தாலும் வயிராற சாப்பாடு போடவேண்டும் என்பதை மனதில் வைத்து அன்னதானம் திட்டம்
துவங்கியதும் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காத அளவிற்கு
கூடியது. இன்றைய தேதிக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் காலை
முதல் இரவு வரை அன்னதானம் படைக்கிறார்கள் அதுவும் பிரமாதமாக.
பெரிதாக வருமானம் வராத நிலையில் உண்டியலில் போடும் பணத்திற்கு பாதுகாவலாக இரண்டு
காவல்காரர்கள் வேறு நின்று கொண்டு இருப்பார்களாம். இப்போது அப்படியில்லை,
வரக்கூடிய வருமானத்தை கையால் எண்ணமுடியாமல் மெஷின் போட்டுதான் எண்ணுகிறார்கள்.
அடுக்கி வைக்கிறார்கள், காசுகளை சல்லடைபோட்டு சலித்து பிரிக்கிறார்கள்.
வருடத்திற்கு ஒரு முறை உண்டியலை திறந்து எண்ணிய காலம் ஒன்று உண்டு. ஆனால் இன்று
ஒரே நாளில் அடிக்கடி உண்டியல் நிரம்பிவிடுவாதல் கன்வேயர் பெல்ட் மூலம் காணிக்கைகள்
நேரடியாக எண்ணுமிடத்திற்கு சென்றுவிடுகின்றன. நெருக்கமான வீடுகளுக்கு நடுவே
சுவாமி, வாகனத்தில் சிரமப்பட்டு ஒரு காலத்தில் வலம்வந்தார், ஆனால் அந்த வீடுகள்
எல்லாம் தற்போது இடிக்கப்பட்டு விசாலமான ரோடுகளில் வண்ண விளக்கொளிகளின் கீழ் மிக
அழகாக அலங்காரமாக வலம் வருகிறார். இவ்வளவு பெரிய வளர்ச்சி எப்படி ஏற்பட்டது
என்பதற்கு சிம்பிளான சில காரணங்கள்தான். பக்தர்களே பிரதானம் என்பதை மனதில் வைத்து
அவர்கள் தேவை என்பது சுத்தமான கழிப்பறைகள், மலிவு விலையில் தங்கும் அறைகள், இலவச
உணவு, சரிசமமான தரிசனம் என்பதில் கறராக இருந்தார்கள், இருக்கிறார்கள். இதுதான் ஒரு
முறை திருமலைக்கு போன பக்தர்களை திரும்ப, திரும்ப திருமலைக்கு போகக்கூடியவர்களாக
மாற்றியுள்ளது.
No comments:
Post a Comment