Wednesday, 31 October 2012

எலுமிச்சையும் ஒரு சிறந்த அழகு பொருள்

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை நிறைய மருத்துவ குணம் நிரம்பியது. அதிலும் அந்த எலுமிச்சை உடல் நலத்திற்கு மட்டும் நன்மையை தருவதோடு, அழகுப் பொருட்களிலும் ஒன்றாக பயன்படுகிறது. 

எப்படியெனில் இதில் அதிகப்படியான வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. அத்தகைய அழகுப் பொருளான எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தி, எவற்றையெல்லாம் சரிசெய்யலாம் என்று பார்ப்போமா!!!

* எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து, முகத்தை கழுவினால், சருமத்துளைகளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

* சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க ஒரு கப் பாலுடன், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பிராந்தி சேர்த்து கொதிக்க வைத்து, பின் அதனை ஓரளவு குளிர வைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்து, துடைத்துவிட வேண்டும்.

* முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சற்றை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவிட வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு தொடர்ந்து செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

* எலுமிச்சையை வைத்து ஃபேஷியல் கூட செய்யலாம். அதற்கு ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றுடன், 1/4 கப் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெயை சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஃபேஷியல் செய்தால், சருமம் பொலிவாவதோடு, ஈரப்பசையுடனும் இருக்கும்.

* தலையில் பொடுகு இருந்தால், தினமும் ஸ்கால்ப்பில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு, மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் தலையை அலசி, மறுபடியும் ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு, இறுதியில் குளித்து முடித்தப் பின் அலச வேண்டும்.

* நகங்கள் வெள்ளையாகவும், சுத்தமாகவும் இருக்க, ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையை பிளிந்து, 5 நிமிடம் கை மற்றும் கால் நகங்களை அதில் ஊற வைத்து, பிறகு எலுமிச்சையின் தோலால் நகங்களை தேய்க்க வேண்டும்.

ஆகவே மேற்கூறியவாறெல்லாம் பல விதங்களில் அழகுப் பொருளாகப் பயன்படுகிறது. மேலும் இவ்வாறு எலுமிச்சையை பயன்படுத்தி சருமத்தை பராமரிக்கும் போது, வெயிலில் அதிக நேரம் இருக்கக் கூடாது. ஏனெனில் வெயில் சருமத்தில் பட்டால், எலுமிச்சை சருமத்தை மிகவும் சென்சிட்டிவ்வாக்கி, பின் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்

முதுகுவலி: ஏன் வருகிறது? எப்படி போக்குவது?

முதுகுவலி: ஏன் வருகிறது? எப்படி போக்குவது? அறிந்து கொள்வோம்

முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதுகின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது?

முதுகில் வலி உருவாக என்ன காரணம்?

வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி?

தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?

“முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.

முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.

இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.”

எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது?
“குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்.”

முதுகெலும்பின் அமைப்பில் ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா?
“முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.”

பெண்கள் கோலம் போடுதல், வீடு பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?

“பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.”

கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா?

“பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன் பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை வளர வளர முன்பக்க பாரத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட வேலைகளை செய்ய முடியும். இதற்கு கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும் உதவி புரிகின்றன.”

முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?

“முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.
டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.

ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.

ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.

ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.”

மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா?

முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்.”

முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?

“முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம்.

அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.”

முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க முடியுமா?

“வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது.”

கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?

“பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட DRX 9000 என்ற கருவி முதுகுவலிக்கும், DRX 9000C என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்.”

உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே. முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா?

“எலும்பு வங்கியில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை.

கொத்தமல்லி செடியின் மருத்துவ குணங்கள்:-

நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கள், கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப் பயன்

கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும். இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப்படுகிறது என்பதை அறிந்திருக்க மாட்டோம்

பசுமையான, மணமுள்ள இலைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் உருண்டையான விதைகளையும் உடைய சிறு செடி கொத்தமல்லி. இதன் விதைகளுக்கு தனியா என்று பெயர். இது பலசரக்குக் கடைகளில் கிடைக்கும்.

நஞ்சை, புஞ்சை காடுகளிலும் இதனைப் பயிரிட்டு வளர்க்கின்றனர். இதன் விதை மிகவும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் உடையவை. இது இந்தியா முழுவதும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது.

இது கார்ப்புச் சுவை கொண்டது. குளிர்ச்சித் தன்மையுடையது. சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயுவகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பயன்களைக் கொண்டது

கொத்தமல்லியின் பயன்கள்:

* சுவையின்மை நீங்கும்.

* வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

* செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு ஜீரணிக்கச் செய்யும்.

* வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற கசடுகளை வெளியேற்றும். மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.

* புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.

* கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும். கண் சூடு குறையும்.

* சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.

* உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல். இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.

* நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

* மன அமைதியைக் கொடுக்கும்.

* உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.

* விந்துவைப் பெருக்கும் குணம் இதற்குண்டு.

* நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

* வாய் நாற்றத்தைப் போக்கும்.

* பல்வலி, ஈறுவீக்கம் குறையும்.

* சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.

கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 5
மிளகு - 10
சீரகம் - 2 டீ ஸ்பூன்
பூண்டு - 5 பல்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு

எடுத்து நீர் விட்டு சூப் செய்து காலை, மாலை, டீ, காபிக்கு பதிலாக இதனை அருந்தி வந்தால் உடல் களைப்பு நீங்கி மேற்கண்ட பாதிப்புகள் குறையும்.

கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.

5 கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.

கொத்தமல்லி சூரணம்:

கொத்தமல்லி - 300 கிராம்
சீரகம் - 50 கிராம்
அதிமதுரம் - 50 கிராம்
கிராம்பு - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
இலவங்கப்பட்டை - 50 கிராம்
சதகுப்பை - 50 கிராம்

இவை அனைத்தையும் இளவறுப்பாய் வறுத்து பொடி செய்து சலித்து 600 கிராம் வெள்ளை கற்கண்டு பொடியுடன் கலந்து வைக்கவும். இந்த சூரணத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.

கொத்தமல்லி கீரைக்கும், விதைக்கும் கண்பார்வையைத் தூண்டும் குணம் உண்டு.

காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின்மை ஏற்படும். இது பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவது. இதற்கு, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி, பித்த கிறு கிறுப்பு நீங்கும்..!!!

Tuesday, 30 October 2012

நச்சுக்கடி முறிவு மருத்துவம்:-

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே கீழ்க்கண்ட அவசர மருத்துவதத்தைப் பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்

கண்ணாடி விரியன்: பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு: வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்: கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு: கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவ.

சிலந்தி: ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்துக் கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்: மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி: வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை: தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்: பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி: கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்..!!!

Monday, 29 October 2012

பூவரசன் மரங்களின் மருத்துவ குணங்கள்:-

பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால் இதன் பெயர் பூவரசு என்று அழைக்கப்படுகிறது. கிராமங்களில் வீடுகளில் முற்றத்திலும், தோட்டங்களிலும் பூவரசு மரம் இன்றும் இருப்பதை நாம் காணலாம். பூவரச மரம் மருத்துவப் பயன் கொண்ட மரமாகும். நூறாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.

இது இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாக உள்ளது. இதன் இலை, பூ, காய், விதை பட்டை என அனைத்து பாகங்களும் பயன்கொண்டவை
பொதுவாக பூவரசம் மரம் நான்கு வகைப்படும். இதில் வருடம் முழுவதும் பூத்துக் காய்க்கும் மரம்தான் நாட்டுப் பூவரசு

சருமத்தை பாதுகாக்க: உடலின் பெரிய உறுப்பான சருமத்தைப் பாதுகாத்தால்தான் நோய் என்னும் அரக்கன் உள்ளே நுழைய முடியாது. இந்த சருமத்தைப் பாதுகாக்க பூவரசம் பட்டையை பொடித்து சலித்து அதனுடன் சந்தனத் தூள் அல்லது வில்வ கட்டைத் தூள் கலந்து சருமத்தில் மீது பூசிவந்தால் சருமத்தில் உண்டாகும் சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்கள் அகலும்.

பூவரசங்காயை இடித்து சாறு பிழிந்தால் இலேசான பசபசப்புடன் மஞ்சள் நிற சாறு வரும். இதை முகத்திலுள்ள கறுப்புப் பகுதிகள், செயின் உராய்வதால் உண்டான கறுத்த பகுதிகளில் தடவினால் கருமை மாறும்.

பூவரசங்காய் - 2

செம்பருத்திப்பூ - 2

பூவரச பழுத்த இலை - 2 இவற்றை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் பொடுகு நீங்கும். சருமத்தில் தேய்த்து வந்தால் சருமம் பளபளப்பதுடன் கண் கருவளையம் மாறும்.

பூவரசம் பட்டை: நூறு வருடங்களுக்கு மேல் உள்ள பூவரசம் பட்டை இனிப்பு சுவை கொண்டதாக இருக்கும். சிவப்புக் கலராக காணப்படும். சித்தர்கள் இந்தப் பட்டையை காயசித்தி தரக்கூடிய மூலிகை என்கின்றனர். இந்த நூறு வருட மரத்தின் பட்டையை இடித்து சாறு எடுத்து மூன்று மண்டலங்கள் அருந்தி வந்தால் காயசித்தி கிடைக்கும். ஆண் பெண் இருபாலரும் அருந்தலாம். பழங்காலத்தில் பெண்கள் கருத்தரிப்பை தடுக்க பூவரசம் பட்டையை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்துள்ளனர். இது கருத்தடை சாதனத்திற்கு இணையானது. கருப்பைக் கோளாறுகளை நீக்கும்.ஆண்களுக்கு ஆண்மையை வலுப்படுத்தும். மூலக்கிருமிகளை அழிக்கும்.

குணம் - நூறாண்டுகள் சென்ற பூவரசம் வேர் நாட்பட்ட பெருநோயை நீக்கும். பழுப்பிலை, பூ, விதை, காய், பட்டை முதலியவை பழுத்த புண், காணாக்கடி, குத்தல், விடபாகம், பெருவயிறு, வீக்கம், கரப்பான், சிரங்கு, வெள்ளை இவைகளைப் போக்கும் தன்மை கொண்டது.

கல்லீரல் பலப்பட: உடலின் செயல்பாட்டிற்கு ஊக்க சக்தியை அளிப்பது கல்லீரல்தான்.இந்த கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் பலவகையான இன்னல்களை சந்திக்க நேரிடும்.இதனால் கல்லீரலைப் பலப்படுத்த வேண்டியது அவசியம்.கல்லீரலின் பலவீனம்தான் மஞ்சள் காமாலை நோயின் தாக்கம்.

பூவரச மரத்தின் பழுத்த இலை இரும்புச் சத்து நிறைந்தது. பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.

பூவரசன் பழுத்த இலை - 2

பூவரசன் பழுத்த காய் - 4

சீரகம் - 2 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

பூவரசம் பட்டை - 1 துண்டு

கீழாநெல்லி - 1 கைப்பிடி

சின்ன வெங்காயம் - 4

சிறுநெருஞ்சில் - 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து, 3 கப் தண்­ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1/2 கப்பாக வந்தவுடன் அருந்தி வந்தால் கல்லீரல் பலப்படும். கை, கால் நடுக்கம் குறையும். மஞ்சள் காமாலை நோயை அறவே நெருங்க விடாமல் உடலை பாதுகாக்கும்.

மேக நோய்க்கு: அகத்தியர் தன்னுடைய அகத்தியர் மேகநோய் சிகிச்சை படலத்தில் உடல் கிருமிகளை அழிக்க வல்ல சக்தி கொண்டது பூவரசு என்கிறார். இதன் காயை இடித்து சாறு எடுத்தால் பசபசப்புடன் பால் இருக்கும். இது மேக நோய்களை போக்க சிறந்த மருந்தாகும். இது சித்தர்கள் கண்ட அனுபவ மருந்தாகும். பூவரசம் காயிலிருந்து உண்டாகும் ஒருவித மஞ்சள் நிறமுள்ள பாலை தோலின் மீது தடவினால் எச்சில்தழும்புகள் மாறும். மூட்டு வீக்கங்களுக்கு பூச வீக்கம் கரையும். பூவரசம் பட்டை, எண்ணெயினால் வெள்ளை நோயும், சரும நோயும் நீங்கும்

Sunday, 28 October 2012

மனித ரத்தம் பற்றிய தகவல்:-

ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்
ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள்.ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா
காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

பிளாஸ்மா என்றால் என்ன?

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10சதவீதம் இருக்கும்.பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள்,தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும்.தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?

ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.

ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?

ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.

மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன்,அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?

எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்

Saturday, 27 October 2012

துத்திக் கீரை மருத்துவ குணங்கள்:-

இந்தக் கீரை மருத்துவக் குணங்கள் கொண்ட கீரையாகும். இதனை கக்கடி, இக்கசி என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இவை இந்தியாவில் உஷ்ணப் பகுதிகளில் அதிகம் வளர்கிறது.

இவற்றில் பால் துத்தி, சிறுதுத்தி, கருந்துத்தி, ஐயிதழ்துத்தி, காட்டுத் துத்தி, கொடித்துத்தி, நாமத்துத்தி, நிலத்துத்தி, பொட்டகத்துத்தி என பல வகைகள் உள்ளன. இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. மனச் சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.

மூல வியாதி குணமாக

காரமும்,புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது.இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது.

இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.

உடல் சூடு தணிய

துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.

வெப்பக்கட்டி குணமாக

துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும்.

துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

பல்ஈறு நோய் குணமாக

துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.

குடல் புண் ஆற

துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.

சிறுநீர் பெருக்கி

சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது.துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

Friday, 26 October 2012

வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்:-

*எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.

* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதீர்கள்.

* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.

* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.

* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்

Thursday, 25 October 2012

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்


டெங்கு காய்ச்சல், ஆர்த்ரோபோட் என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. உடல் வலி அல்லது மூட்டு வலி, தோலில் சிவப்பு நிறத் தடிப்புகள், வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டை அணுக்களின் எண்ணிக்கை குறைதல் மற்றும் நெறி கட்டுதல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.


டெங்கு ஹீமோராஜிக் காய்ச்சல், மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. மிகத் தீவிரமான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளியின் ரத்தத்தில் உள்ள புரோட்டீனை வெளியேற்றி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ”ஈடிஸ் ஈஜிப்டி” என்ற கொசுவால் இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. நகரப் பகுதிகளில்தான் இந்தக் கொசு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூடாமல் வைக்கப்பட்டிருக்கும் அசுத்தமான தண்ணீரிலும், தேங்கி இருக்கும் அசுத்தமான மழை நீரிலும் இந்த கொசு இனப்பெருக்கம் செய்கிறது.


இரண்டாவது முறையாக ஏற்படக்கூடிய டெங்கு காய்ச்சல், காம்ளிமெண்ட் என்ற சிஸ்டத்தை தூண்டுகிறது. இது ரத்த நாளத்தில் உள்ள எண்டோதீலியம் செல்களைத் தாக்கி ரத்தத்தில் உள்ள அத்தியாவசியப் பொருட்களை வெளியேற்றி விடுகிறது. இதனால் ரத்தக்கசிவும் அதிகமாக ஏற்படுகின்றது. இந்தக் காய்ச்சலால் சிறிய ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால், ரத்தத்தில் உள்ள நீர். உப்புகள், புரோட்டீன், சிவப்பு அணுக்கள் போன்றவை வெளியேறி விடுகின்றன. இதனால் ரத்தம் கெட்டியாகி விடுகிறது. மேலும் உடலில் உள்ள நீர்ச்சத்தும் குறைகிறது. இதயம் அதிகமாக வேலை செய்கிறது. திசுக்களுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. உடலில் சோடியம் அளவு குறைந்து போகிறது. மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவதாலும், உணவுக் குழாயில் ரத்தம் கசிவதாலும் சில சமயங்களில் இறப்பு எற்படலாம். இதயத்தில் உள்ள தடுப்புச் சுவர்களில் ரத்தம் கசிதல், இதயச் சவ்வுகளில் ரத்தம் கசிதல் போன்றபாதிப்புகளும் இருக்கும்.சில நேரங்களில் நுரையீரல், அட்ரீனல், ஈரல், மூளை ஆகியவற்றில் ரத்தக் கசிவு ஏற்படும். ஈரல் வீக்கம் உண்டாகும்.



உடலுக்குள் டெங்கு வைரஸ் கிருமிகள் நுழைந்த 1 – 7 நாட்களுக்குள் நோயின் அறிகுறிகள் ஏற்படும். அந்த அறிகுறிகள், பாதிக்கப்பட்ட நபரின் வயதிற்கு ஏற்ப மாறுபடும். தொண்டை வலி, மூக்கிலிருந்து நீர் கொட்டுதல், லேசான இருமல் உண்டாகும். காய்ச்சல், தலை வலி, முதுகு வலி போன்றவை காய்ச்சலுக்கு முன் ஏற்படும். காய்ச்சல் ஏற்பட்ட 24 – 48 மணி நேரத்தில் உடல் முழுவதும் சிவப்பு நிறத் தடிப்புகள் உருவாகும். உடல் வலி, மூட்டு வலி ஏற்பட்டு அதன் தீவிரம் அதிகரிக்கும். குமட்டல், வாந்தி, நெறி கட்டுதல் மற்றும் பசியின்மை போன்றவை இருக்கும்.



டெங்கு ஹீமோராஜிக் காய்ச்சல்



இரண்டாவது முறையாக டெங்கு வைரஸ் தாக்கும் போது இந்தப் பாதிப்பு ஏற்படலாம். முதல் தடவை இந்த வைரஸ் தாக்கும்போது நோயாளியின் எதிர்ப்புச் சக்தியை தூண்டுகிறது. இரண்டாவது தடவை தாக்கும்போது உடலில் எதிர்ப்புச் சக்தியைப் பாதிக்கிறது.



வைரஸ் தாக்கிய 4 முதல் 6 நாட்களுக்குப் பிறகு , முதல் நிலையாக காய்ச்சல், உடல் வலி, வாந்தி, தலைவலி, பசியின்மை, இருமல் போன்றவை ஏற்படும். இரண்டாவது நிலையில் நோயாளி, கை, கால்கள் சில்லிட்டுப் போகும். உடல் சூடாக இருக்கும். முகம் சிவந்து போகும். வியர்வை அதிகரிக்கும். பாதிக்கப் பட்ட குழந்தைகள் மிகவும் பரபரப்பாகவும், எரிச்சலுடனும் இருப்பார்கள். நெஞ்சுக்கு அடியில் வலி உண்டாகும்.



முன் நெற்றி மற்றும் கை, கால்களில் கொசுக்கடி போன்ற சிறிய சிறிய ரத்தக் கசிவுகள் ஏற்படும். பெரிய அளவில் ரத்தக் கசிவும் ஏற்படலாம். உடல் முழுவதும் சிவந்த மற்றும் சிவந்து தடித்த புள்ளிகள் உண்டாகலாம். வாயைச் சுற்றியும், கை கால்களும் ஊதா நிறத்தில் மாறலாம். குழந்தைகள் சிரமப்பட்டு மிக வேகமாக மூச்சு விடுவார்கள். நாடித்துடிப்பு வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இருக்கும். ஈரல் வீங்கிப் போகும்.



டெங்கு ஷாக் சின்ட்ரோம் என்ற நிலையில் உணவுக் குழாயில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்த வாந்தியும், மலம் கறுப்பாகவும் வெளியாகும்.டார்னிகுட் பரிசோதனையில் 2.5 செ.மீ சதுரப் பரப்பில் 20-க்கும் மேற்பட்ட ரத்தப் புள்ளிகள் இருந்தால், இந்த நோய் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்



டெங்கு காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் 


* சிறிய அளவில் ரத்தப் புள்ளிகள்

* பெரிய அளவில் ரத்தப் புள்ளிகள்
* மிகப்பெரிய ரத்தக் கசிவு
* மூக்கில் இருந்து ரத்தம் வடிதல்
* ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல்
* ரத்த வாந்தி அல்லது மலம் கறுப்பாகவோ, ரத்தமாகவோ வருதல்.
* வெள்ளை அணுக்கள் தொடர்ந்து குறைவாக இருப்பது
* ரத்தம் உறைதலுக்குக் காரணமான தட்டை அணுக்கள் குறைதல்
* டார்னிகுட் பரிசோதனையில் ரத்தக் கசிவு தென்படுவது
* அசிடோஸிஸ்
* ரத்தம் கெட்டியாதல்
* ரத்தத்தில் ஈரல் என்ஸைம் அளவு அதிகரித்தல்.
* ரத்தத்தில் உள்ள புரோட்டீன் அளவு குறைவது
* ரத்தக் கசிவு நேரம் நீண்டு கொண்டே இருப்பது.
* நெஞ்சு எக்ஸ்ரேயில் நுரையீரல் ஜவ்வுகளுக்கு இடையில் நீர் காணப்படுவது.


டெங்கு காய்ச்சல் நோய்க்கான சிகிச்சைகள்

* நோயாளிகளை ஒய்வில் இருக்க அறிவுறுத்த வேண்டும்.

* காய்ச்சல் குறைய மாத்திரை மற்றும் வெதுவெதுப்பான நீரில் நனைத்து துணியைப் பயன்படுத்தலாம்.

* எக்காரணம் கொண்டும் ஆஸ்பிரின் மருந்தைக் கொடுக்கக் கூடாது.

* வாந்தி, சாப்பிட முடியாமை, மிக அதிகமான வியர்வை, பேதி போன்றவை இருந்தால். வாய் வழியாக உப்பு – சர்க்கரைக் கரைசலைக் கொடுக்க வேண்டும்.

* நாடித் துடிப்பு, மூச்சு விடுதல், ரத்த அழுத்தம் மற்றும் நீர், உப்பு வெளியேற்றம் ஆகியவற்றை அடிக்கடி சரிபார்க்க வேண்டும்.

* ரத்தம் கெட்டியாகும் தன்மையை பரிசோதித்து அடிக்கடி அறிந்து கொள்ள வேண்டும்.

உடல் ஊதா நிறமாக மாறினாலே, மூச்சு விட கஷ்டப்பட்டாலோ, ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும்.

* சிரை வழியாக சலைன் கொடுக்க வேண்டும்.

* ரத்தக் கசிவு ஏற்படும்போது புதிய ரத்தம் அல்லது தட்டை அணுக்கள் உள்ள பிளாஸ்மாவைக் கொடுக்கலாம்.

* மருந்து கொடுத்த பிறகும் சரியாகாவிட்டால் புதிய ரத்தம் செலுத்த வேண்டும்

பீர்க்கங்காயின் மருத்துவ குணங்கள்:-

நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது.

பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது.

நூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோரி 18தான். ஆனால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டம¢ன்களும் தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே.
இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.

இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும். பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.

கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும்

Wednesday, 24 October 2012

நீர்-இனி போர் : எதிரியாக மாறுமா எதிர்காலம்

பணத்தை தண்ணியா செலவழிக்கிறான்' என பழமொழி சொல்லப்போய், "தண்ணியை பணத்தைப் போல செலவழிக்கிறான்' என சொல்லும் காலம் நெருங்கி வருகிறது.

மண்ணுக்காக நாடுகள் முட்டிக்கொண்டதால் தான் இரண்டு உலகப் போர்கள் நடந்தன. எதிர்காலத்தில் இன்னொரு உலகப் போர் நடந்தால், அது நீருக்காக மட்டுமே நடக்கும் என்கின்றனர் அறிஞர்கள்.இதற்கு காரணம், மாறி வரும் சுற்றுச்சூழ்நிலைகளால், நீர் என்பதே அரிதாகி வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு, உலகுக்கு கிடைக்கும் நல்ல நீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது. செயற்கையாக நீரை தயாரிக்கலாம் என்றால், அது எளிதில் சாத்தியமாகாது. எனவே, இயற்கையாக கிடைக்கும் நீரை கைப்பற்ற, உலக நாடுகள் போட்டி போடும். தண்ணீர் இல்லாவிட்டால், வாழ்க்கையே இல்லை என்பதால், உலக நாடுகள், உச்சகட்டத்தில் மோதிக்கொள்ளும்.

பருவநிலை மாற்றம்:

பருவநிலை மாற்றத்தால், அதிக மழை அல்லது அதிக வெப்பம் என்ற நிலைமை ஏற்படுகிறது. சரியான நேரத்தில், மழை பெய்வது சமீப காலமாக நடப்பதில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வறட்சி ஏற்பட்டது. அப்போதெல்லாம் தண்ணீரின் தேவை குறைவாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமையே வேறு.தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் மக்கள் தொகை பெருக்கம், காடுகளை அழித்தல், மழை நீரை தேக்கி வைக்காதது, நதிகள் இணைக்கப்படாமல் இருப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தொழில் மயம் ஆகியவை. தேவையை உணர்ந்து செயல்படாவிட்டால், 2015லேயே தண்ணீர் தேவை அதிகரித்து, உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும். தண்ணீர் பற்றாக்குறையால், உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்து, விலை உயரும்.

பூமி, 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. 29 சதவீதம் நிலப்பரப்பாக உள்ளது. மொத்த தண்ணீரில் உப்பு நீரே அதிகம். 2.5 சதவீதம் நீர் மட்டுமே நல்லநீர். உலகில், 0.08 சதவீதத்துக்கும் குறைவான தண்ணீரை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. உலகளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் 50 நாடுகளை 1999ல் ஐ.நா., அறிவித்தது. தற்போது விவசாயத்திற்காக 70 சதவீத நீர் பயன்படுத்தப்படுகிறது. இது 2020ல் 87 சதவீதம் ஆகும் என, உலக தண்ணீர் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது, உலக அளவில் ஐந்து பேரில் ஒருவருக்கு, சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஒவ்வொரு நாளும், ஐந்து வயது பூர்த்தியடையாத, 30 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் பசி, தொற்று நோய்களால் இறக்கின்றனர். சுத்தமான குடிநீர், நல்ல சுகாதாரம், சரிவிகித உணவு போன்றவற்றின் மூலமே இதை சரி செய்ய முடியும்.

என்ன தீர்வு:

அனைத்து ஆதாரங்களுக்கும், அடிப்படையான தண்ணீரை பாதுகாப்பது நமது கடமை. நீராதாரங்களை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். அதிக மரங்களை நட வேண்டும். தண்ணீரை மறுசுழற்சி செய்து, விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சூரிய ஒளி மின்சாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். சொட்டு நீர் பாசனம், நீர்தெளிப்பு போன்ற வற்றை பயன்படுத்தி தண்ணீரை சேமிக்கலாம்.

"மடி'யில் கை வைத்த கதை:

பற்றாகுறை ஏற்பட்டதும், "மடி'யில் கை வைத்த கதையாக, நிலத்தடியில் கை வைத்தோம். அந்த நீரையும் எக்கச்சக்கமாக உறிஞ்சிகிறோம். இது இன்னொரு ஆபத்து. இதனால், அந்த இடத்தின் இயற்கை சமநிலைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கிணறுகள் வற்றி, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படுகிறது.

நீரின் தேவை:

விவசாயத்திற்கே அதிக நீர் தேவைப்படுகிறது. அடுத்ததாகத் தான் மற்ற உபயோகங்களுக்கு தேவை. 1970ம் ஆண்டில், உலகில் இருந்த மொத்த நீரில் 25 சதவீதத்தை பயன்படுத்தினோம். இது 1980ல், 45 சதவீதமாகவும், 1990ல் 65 சதவீதமாகவும் அதிகரித்தது. தற்போது உலகின் நீர்த் தேவை, மொத்த நீரில் 80 சதவீதத்தை நெருங்கி விட்டது. இதே நிலை தொடர்ந்தால், நீர் அரிதான பொருளாகும் அபாயம் இருக்கிறது. நீர் இல்லாவிடில், உலகம் அழிந்து விடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கிறதா என்ன.

மாசுபடுத்தும் காரணங்கள்:நீர் மாசுபடுவதற்கு முக்கிய காரணமே மனிதர்களின் மனசாட்சி இல்லாத நடவடிக்கைகள் தான். தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள், வேதிப்பொருட்கள், ஆயில், பெயின்ட் போன்றவையாலும் நீர் மாசுபடுகிறது. இக்கழிவுகள் ஆற்று நீரை மட்டுமல்லாது, நிலத்தடி நீரையும் நாசம் செய்கின்றன. நிலத்தின் இயற்கை தன்மையே மாறுகிறது. வீட்டு கழிப்பறை, சாக்கடை ஆகியவற்றாலும் நீர் மாசுபடுகிறது. உலகம் முழுவதும் 40 சதவீதம் நிலத்தடி நீர் குடிநீராகவும்,60 சதவீத நிலத்தடி நீர், விவசாயத்துக்கும் பயன்படுகிறது.

செயற்கை நீர் சாத்தியமா:

செயற்கையாக நீரை உருவாக்க முடியுமா என்று ஆராய்ச்சியாளர்களை கேட்டால், முடியாது என்றே பதில் அளிக்கின்றனர். இருப்பினும், ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்தது தான் நீர். இந்த இரண்டு வாயுக்களும், எளிதாக கிடைக்கக்கூடியவை தான். ஆனாலும் இதை இணைத்து நீரை உருவாக்க முடிவதில்லை. காரணம், ஹைட்ரஜன் அணு தனித்து கிடைக்காது. ஆக்ஸிஜன், இரட்டை அணுவாகத்தான் இருக்கும். ஒரு அணுவை அதிலிருந்து பிரிக்க முடியாது.இதையும் மீறி, இரண்டு ஹைட்ரஜன் அணுவையும், ஒரு ஆக்ஸிஜன் அணுவையும் பிரித்தெடுத்தால், இரண்டும் நிலையான எலக்ட்ரான்களை கொண்டிருக்கும். ஒரே அளவு எலக்ட்ரான்கள் கொண்டவை, எதனுடனும் வினை புரியாது. மீறி இணைத்தால், தண்ணீருடன் சேர்ந்து அதிகமான சக்தி வெளிப்படும். காரணம் அணுக்கரு இணைவு (பியூஷன்).செயற்கையாக நீரை உருவாக்குவதில், இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், இயற்கையாக ஆவியாகும் கடல்நீர், மேகத்தின் மீது பட்டு குளிர்வடைந்து மழைநீராக மண்ணில் மீண்டும் விழுகிறது. அந்த நீரை அலட்சியமாக வீணாக்குகிறோம்.

நன்றி : தினமலர்

மூட்டு வலி குறைய இயற்க்கை வைத்திய குறிப்புகள்:-

மூட்டு வலி குறைய:-

சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும்.

பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு குறையும்.

முடக்கற்றான் இலைகளை எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.

குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும்.

கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குறையும்.

முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.

வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.

வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி மூட்டுவலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும்.

நொச்சி இலைச் சாறை கட்டியாக எடுத்து மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் மூட்டு வலி குறையும்.

நொச்சி இலைச் சாறை,மிளகு தூள் ,நெய் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.

நொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டுவலி குறையும்.

கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால் வலி குறையும்.

கைப்பிடி உடைமர இலைகளோடு, மூன்று மிளகு சேர்த்து அரைத்து மூட்டு வலி மேல் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.

அழிஞ்சில் இலைகளைத் துண்டுகளாக நறுக்கி, வதக்கி இளஞ்சூடாக மூட்டு வலி மேல் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

காரட் இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் குறையும்.

வில்வ மர இளந்தளிரை வதக்கி இளம் சூட்டோடு மூட்டுகளின் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.

கடுகு எண்ணெயில் வெங்காய சாற்றை சிறிதளவு கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டுவலி குறையும்.

பருத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.

புங்கன் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி ,இந்நீரால் மூட்டுவலி ஏற்பட்ட இடத்தைக் கழுவி வந்தால் மூட்டுவலி குறையும்.

அவுரி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக மூட்டுவலி மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.

குப்பைமேனி இலைகளை எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன்,எலுமிச்சைச் சாறு கலந்து மூட்டு வலி மேல் பூசினால் மூட்டுவலி குறையும்.

குங்கிலியம் இலையின் சாறை இஞ்சி சாறு போல இந்த சாறை குடித்தால் மூட்டு வலி குறையு‌ம்.

செந்நாயுருவி இலையை பொடியாக நறுக்கி 1 தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்கட்டினால் மூட்டு வலி குறையும்.

மூக்கிரட்டை வேரை எடுத்து நைத்து தண்ணீர் விட்டு காய்ச்சி சாப்பிட்டு வர மூட்டுவலி குறையும்.

அத்தி இலையை அரைத்து மூட்டில் வைத்து தினமும் கட்ட மூட்டு வலி குறையும்.

கடலை இலையை அவித்து இளஞ்சூட்டோடு தினமும் மூட்டில் வைத்து கட்ட மூட்டு வலி குறையும்.

எள் எண்ணெய், வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், சுக்குபொடி, மிளகுபொடி ஆகியவற்றை தைலம் பதம் வரும் வரை காய்க்கவும். ஆறியதும் வலி உள்ள இடத்தில் தடவி வெந்நீரில் குளிக்க வலி குறையும்.

சுக்கு, தனியா, வெல்லம், சீரகம் ஆகியவற்றை இடித்து சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.

கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.

சுக்கு, ஆவாரம் பட்டை இரண்டும் சம அளவு எடுத்து சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி ஆற வைத்து சாப்பிட்டால் கைகால் வலி குணமாகும்.

காலையில் சிறுதளவு தேனும் அதே அளவு இஞ்சி சாறும் கலந்து சாப்பிடவும் கைகால் வலி குணமாகும்.

தூதுவளை இலையை மைபோல் அரைத்து சிறிதளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலை மாலை சாப்பிடவும் கைகால் வலி குணமாகும்.

சர்க்கரை வள்ளி கிழங்கை தண்ணீர் விட்டு அரைத்து வலி உள்ள இடத்தில் பூசவும்.

வாழைப்பூவை இடித்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வலி & எரிச்சல் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.

சிறிதளவு மருதாணி இலையை எடுத்து அதனுடன் நல்லெண்ணைய் சேர்த்து நன்றாக காய்ச்சி வலி உள்ள இடங்களில் தடவினால் குணமாகும்.

சரக்கொன்றை மர விதையை நன்றாக அரைத்து வலி உள்ள இடத்தில் பற்று போட வேண்டும்

அத்தி மரத்திலிருந்து பாலை எடுத்து வலி உள்ள இடத்தில் பத்து போடவும்

Tuesday, 23 October 2012

மரத்தின் நன்மைகள்

உயிர் உள்ள மரத்தினால் நமக்கு என்ன பயன்கள்:- 

* மலர்கள், காய், கனிகள் தருகிறது

* நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது

* காற்றை சுத்தப்படுத்துகிறது

* நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு,நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.

* கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.

* மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.

* மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.

*காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன

ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.

ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.
ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.
ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.
ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.

ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000கிலோ

மேலும் சில நன்மைகள்:-

1. மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.

2. நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.

3. மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.

4. மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.

5. மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.

6. கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.

7. புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.

8. உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.

9. மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

10 நமக்கா இவ்வளவு தரும் மரத்திற்க்கும், இயற்க்கைக்கும் நாம் திரும்பி என்ன உபகாரம் செய்கிறோம்