Saturday, 11 August 2012

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா.???

ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம். ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.

ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.

வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம்.கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும். வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும். ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும்.பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும். வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.

பாட்டி வைத்தியம்

•மாதுளம் பழச்சாற்றுடன் தேன் கலந்து பருகி வந்தால் இதய நோயின்றி நலமுடன் வாழலாம்.

பப்பாளி பழத்தை காலை உணவுடன் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனுடன் தேன், உலர்ந்த பழங்களைச் சேர்த்து சாப்பிட்டு, சூடாக ஒரு கப் பால் அருந்தினால் இளமையோடு திகழலாம்.

திராட்சைப்பழச்சாறு அருந்தி வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு குறைந்துவிடும்.

சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். அதனை வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில் சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்; உடல் குளிர்ச்சியடையும்.
 
தேனீக்கள் கொட்டினால் பற்பசையை எடுத்து அந்த இடத்தில் தடவ வேண்டும். சில நொடிகளில் வலி பறந்துவிடும். பற்பசையில் உள்ள வேதிப்பொருளானது விரைவாக செயல்பட்டு வலியைக் குறைத்து விடும்.

வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேக வைத்து மோரில் கரைத்து உப்புப்போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்று வலி இருக்காது.

ஜலதோஷம் வருவதற்கான அறிகுறி தென்பட்டால் அரை நாளாவது படுக்கையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. சூழ்நிலையின் சீதோஷ்ண பாதிப்பினால் ஜலதோஷம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குங்குமப்பூவுடன் சம அளவில் தேன் கலந்து மூன்று நாள்களுக்கு தினசரி இரண்டு வேளை வீதம் உட்கொண்டு வர குடல்புண் குணமாகும்.

கடவுளே அறிவின் வடிவம்


* உடலுக்கு உயிர் எப்படி அவசியமோ, அது போலவே உயிருக்கு அறிவு அவசியம். ஒருவருக்கு கிடைக்கும் செல்வத்திற்கு அறிவு மட்டுமே வேராக இருக்கிறது. அறிவே, வலிமைகளில் எல்லாம் உயர்ந்ததாகத் திகழ்கிறது. அறிவின் சொல்படிதான் மனமும் செயல்பட வேண்டும். அத்தகைய மனிதனே அனைத்திலும் முன்னிலை பெறுவான். 

* அறிவால் உயர்ந்தவர்களே, வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் சிறப்பிடம் பெற்று உயர்கிறார்கள். செல்வத்தால் உயர்ந்திருப்பவர்களைக் காட்டிலும், அறிவால் சிறந்தோரே உண்மையில் உயர்ந்தவர் ஆவர். அறிவாளிகளை யாரும் அடிமைப்படுத்தவோ, கீழ்த்தரமாகவோ நடத்தவோ முடியாது. இவர்கள் யாருக்கும் அச்சப்படுபவர்களாகவும் இருக்கமாட்டார்கள்.

* பரிபூரணமான அறிவைப் பெற்றிருப்பவர்கள், எப்போதும் தெளிந்த நிலையிலேயே இருப்பார்கள். இவர்கள் எந்த இன்பத்திற்கும் அடிமையாகாமல், தம்மை அடக்கி வைத்திருப்பார்கள். ஒரு பொருளை பார்த்தவுடன் அதன் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து கணிக்காமல், அதன் உட்பொருள் தன்மையையும், உண்மை நிலையையும் எளிதில் கணித்து விடுவார்கள்.

* மனிதர்கள் சிறந்து திகழ அறிவு தேவை. கடவுளே அறிவின் வடிவமாக இருக்கிறார். அந்த அறிவாகிய இறைவன் உள்ளே வருவதற்கு இதயம் சுத்தமாக இருக்க வேண்டும். இதயத்தை சுத்தப்படுத்த இறைவனிடத்தில் பக்தி செலுத்த வேண்டும்.

»பாரதியார்

Friday, 10 August 2012

அகநானூறு » தலைவன் கூற்று(3)

நூல் : அகநானூறு_3
பகுப்பு : களிற்றியானை நிரை
பாடல் : தலைவன் கூற்று
திணை: பாலை
பாடியவர்: எயினந்தை மகனார் இளங்கீரனார்

இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்,
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?


குறிப்பு: தலைவன் தலைவியை மணந்து இல்லறம் நடத்தினான். அப்போது தன் நெஞ்சம் வற்புறுத்தப் பொருள் தேடும் பொருட்டுத் தலைவியை விட்டுப்பிரிந்தான்.

விளக்கம்: தலைவன் தலைவியை மணந்து இல்லறம் நடத்தினான். என்னதான் இல்லறம் நல்லறமாக திகழ்ந்த போதிலும், தலைவனுக்கு மன உளைச்சல். ஏன்? சேமித்த பொருளெல்லாம் தீர்ந்திடவே, எதிர்கால நலன் கருத்தில் கொண்டு, தன் நெஞ்சம் வற்புறுத்தப் பொருள் தேடும் பொருட்டுத் தலைவியை விட்டுப்பிரிந்தான். இந்த நிகழ்வினை மிக அருமையாக விளக்கும் பாடல் இது.
பொருள் தேடும் பொருட்டு தலைவியை பிரிந்த தலைவன் வழியில் - கடலை போன்று தோற்றம் கொண்ட நீர்நிலையில் வாழும் முதலையின் கடினமான தோலுக்கு நிகரான உருவ அமைப்பு கொண்ட ஓமை மரம். ஓமை மரத்தின் கரிய அடியினையுடைய பெரிய கிளைகளில், அப்போது வெளி வந்த குஞ்சுகளை காவல் காக்கும் நிலையின்றி, அதன் பசிக்கு உணவு தேட வெளிச்சென்று, இரை கொணர்ந்து, ஈன்று காவற்பட்ட வளைந்த வாயினையுடைய தன் பேடைக்கு, ஊட்டி மகிழ்ந்திருக்கிறது.

நீண்ட, நெருப்புக்கு இணையாக சிவந்த செவியினை உடைய எருவை சேவல், தன் பனங்கிழங்கை ஒத்த கால்களை கொண்டு மேட்டினை கிளறி விரும்பிய இரை கண்டவுடன், உற்சாகம் பீறிட வானை அளாவிய உச்சியினையுடைய சிறப்பு வாய்ந்த மலையின் சாரலில், கொக்கரித்துக்கொண்டே நடனமாக அசைந்து சென்று மகிழ்ந்திருக்கிறது.

இரையாக சிறு மிருகங்களை வேட்டையாடி கொன்று அதன் குருதி வழிய புலால் துர்நாற்றம் வீச மிச்சம் இருக்கும் மாமிசத்தை மிகுந்த சந்தோஷத்தோடு, காட்டு வழியில் கொள்ளை புரியும் மனிதருக்கு ஒப்பாக கவர்ந்து செல்லும் மன நிலைக்கு ஒப்ப தலைவன் - சின்னஞ்சிறிய இலைகளையுடைய மராமரங்களைக் கொண்ட அகன்ற நெடிய நிழலில் நின்று அணிகலன்களை ஈட்டி வரும் எண்ணத்தாலே கடந்து செல்வதாக காட்டி எம்மைப் பின்னின்று தூண்டும் நெஞ்சமே!

முருங்கை பூவினையொத்த, காண்பதற்கு இனிய சிவந்த வாயினையும், அழகிய இனிய மொழியினையும், ஆய்ந்த அணியினையுமுடைய, எம் தலைவி, வளைந்த குழையோடு மாறுபட்ட எண்ணங்கள், என் மனதில் நிழலாடி தலைவியின் பிரிவை தடுக்கும், எனவே விரைவில் பொருள் தேடி தலைவியிடம் சேர்.

இப்படி, இயற்கையின் அழகோடு, தலைவனின் மனதை காயமாக்காமல் தடுத்து பொருள் தேட வழி சொல்கிறார் எயினந்தை மகனார் இளங்கீரனார்..!!!

Thursday, 2 August 2012

அழகை மேம்படுத்தும் பாதாம் எண்ணெய்..!!!

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய தானியங்களை சாப்பிடுவோம். அதில் மிகவும் சுவையாக, உடலுக்கு மிகுந்த நன்மையை தரும் வகையில் இருப்பது பாதாம் பருப்பு. இந்த பருப்பு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதில்லை, இதனால் செய்யப்படும் எண்ணெய் சருமத்திற்கும் மிகுந்த அழகைத் தருகிறது. சொல்லப்போனால் இயற்கை எண்ணெய் அனைத்துமே சருமத்திற்கு நல்ல அழகைத் தரும். ஆனால் அதில் பாதாம் எண்ணெய் மிகவும் சிறந்தது. சரும பராமரிப்பிற்கு மற்ற கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதை விட, இந்த எண்ணெயை பயன்படுத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா!!!

* பாதாம் எண்ணெய் அனைத்து வகையான சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. இந்த எண்ணெய் மிகவும் அடர்த்தி குறைவாக இருப்பதால், சருமமானது இதனை விரைவில் உறிஞ்சிக் கொள்ளும். ஆனால் இது மற்ற சருமத்தை விட, வறண்ட சருமத்திற்கு மிகவும் ஏற்றது. ஆகவே இதனை வைத்து தினமும் மசாஜ் செய்தால், சருமம் மென்மையாவதோடு, வெடிப்புக்கள் நீங்கி அழகாக இருக்கும்.

* உதடுகளில் வெடிப்புகள் இருக்கிறதா? அப்படியென்றால் அந்த பிரச்சனைக்கு ஒரே சிறந்த தீர்வு பாதாம் எண்ணெய் தான். இதனை ஒரு 'லிப் கிளாஸ்' மாதிரி பயன்படுத்த வேண்டும். அதற்கு 5-6 துளிகள் பாதாம் எண்ணெயுடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் விட்டு நன்கு கலக்கவும். பின்பு அதனை ஒரு சிறிய டப்பாவில் போட்டு ஒரு வாரத்திற்கு உதடுகளில் வறட்சி ஏற்படும் போதெல்லாம் தடவ வேண்டும். இதனால் உதடுகளில் வெடிப்புகள் போவதோடு, உதடுகள் மென்மையாகவும், சற்று உதட்டின் நிறங்களும் கூடும்.

* முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் பொதுவாக போதிய சத்துக்கள் இல்லாததால் ஏற்படுகிறது. அத்தகைய சத்துக்களான வைட்டமின் ஏ மற்றும் பி, பாதாம் எண்ணெயில் அதிகமாக இருக்கிறது. ஆகவே அதனை அதிகம் பயன்படுத்தினால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் இருப்பதோடு, புதிய செல்களும் உருவாகும். இதனால் முகமானது நன்கு பொலிவோடும், இளமையான தோற்றத்தையும் தரும்.

* பாதாம் எண்ணெய் சருமத்திற்கு அதிகமான நன்மைகளை தருகிறது. அதிலும் முகத்தில் தோன்றும் கருவளையங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை எளிதில் நீக்கும் அதற்கு தினமும் முகத்திற்கு பாதாம் எண்ணெயை காட்டனால் தொட்டு, முகத்தில் கண்களுக்கு அடியில் மற்றும் கரும்புள்ளிகள் இருந்தால் முகம் முழுவதும் தடவி சற்று நேரம் மசாஜ் செய்யவும். அவ்வாறு தொடர்ந்து செய்தால், முகமானது பளிச்சென்று இருக்கும்.

* பாதாம் எண்ணெயும் ஒரு சிறந்த ஃபேசியல் ஸ்க்ரப். இதனை வைத்து முகத்திற்கு செய்யும் போது முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் எளிதில் வெளியேறிவிடும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து, முகத்திற்கு தடவி காய வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது முன்பு இருந்ததை விட, செய்த பின் நன்கு அழகாக இருக்கும்.

Wednesday, 1 August 2012

பொறுமைக்கு பலன் நிச்சயம்

சிந்தனைகள் » மகாத்மா காந்தி

* கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் உண்டு என ஏற்றுக்கொண்டால் நன்மை நமக்குத் தான். 

* பிரார்த்தனை என்பது மனிதனை கடவுளுடன் சேர்க்கும் பாலமாகவும், பேசுவதற்குரிய வாய்ப்பாகவும் இருக்கிறது.

* உண்மையான பிரார்த்தனைக்கு கடவுள் செவி சாய்க்க மறுப்பதில்லை. பெரிய செயலையும் எளிதாக செய்யும் ஆற்றலை கடவுளிடம் இருந்து ஒருவரால் பெற முடியும். 

* மனதை ஒருமுகப்படுத்தி பிரார்த்தனையில் ஈடுபட பொறுமை அவசியம். ஆழமான பக்தி கொண்டவர்கள் எளிதாக கடவுள் சிந்தனையில் ஈடுபடுவர். மற்றவர்கள் பொறுமை பெற சில காலம் ஆனாலும், முயற்சியை கைவிடக் கூடாது. பொறுமையுடன் செய்யும் முயற்சிக்கு பலன் நிச்சயம்.

* பிறர் மீது அன்பு காட்டுபவர், கடவுளுக்கு பிடித்தமானவர். அன்பு நெஞ்சம் கொண்டவர் கடவுளின் அருளை எளிதாகப் பெற்றுவிடுவார். 

»  காந்திஜி 

அன்பு தோற்பதில்லை

சிந்தனைகள் » மகாத்மா காந்தி

* முன் நேரத்தில் தூங்கி, அதிகாலையில் எழுவது வைராக்கிய வாழ்வுக்கு அவசியமான பழக்கம்.

* அறிவால் கடவுளை அறிய முடியாது. ஆழ்ந்த நம்பிக்கை, அனுபவம் இரண்டும் நம்மைக் கடவுளிடம் அழைத்துச் சென்று விடும். 

* சத்தியக் கோயிலை அடைய விரும்புபவர்கள் அகிம்சை என்னும் பாதையில் நடை பயில வேண்டும்.

* நமக்கு கடவுளே மூலமாக இருக்கிறார். அவர் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்.

* அன்பு ஒருபோதும் தோற்பதில்லை. பகையுணர்வோ, மனிதனை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்று விடும்.

* கண்களை மூடிக் கொண்டு பிரார்த்திப்பதால், மனதை லட்சியத்தை நோக்கி குவிக்கச் செய்ய முடியும். 

* கடவுள் என்ன நோக்கத்துடன் உயிர்களைப் படைத்தார் என்பதை நம்மால் அறிய முடியாது. படைப்பின் ரகசியத்தைக் கடவுள் மட்டுமே அறிவார்.

* அகிம்சையால் வெல்ல முடியாமல் போனால், அதற்குக் காரணம் நம் மனபலவீனமே ஆகும்.

»  காந்திஜி