Thursday, 16 August 2012

நல்லா தூக்கம் வரணுமா..???

நல்லா தூக்கம் வரணுமா? இதெல்லாம் சாப்பிடுங்க!!!

இன்றைய காலத்தில் அதிக வேலைப்பளுவின் காரணமாக டென்சன் மற்றும் மனஅழுத்தம் இருப்பதால், பெரும்பாலானோர் தூக்கமின்மையால் நிறையவே அவஸ்தை படுகிறார்கள். இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, மனநலமும் பாதிக்கப்படுகிறது. இதற்காக இரவில் தூங்குவதற்கு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், தூங்கியதும் உடனே விடிந்தது போல் தோன்றும். அத்தகைய முயற்சியில் ஒன்றாக ஒரு சில உணவுகளை இரவில் படுக்கும் முன் உட்கொண்டாலும், தூக்கம் நன்கு வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

வாழைப்பழம் : கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள பழமான வாழைப்பழத்தை தினமும் உறங்கும் முன் சாப்பிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். மேலும் இதில் தூக்கமூட்டும் பொருளான செரோட்டீன் மற்றும் மெலடோனின் இருக்கிறது. உடலில் தசைகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் மெக்னீசியம் இருக்கிறது. ஆகவே இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ள வாழைப்பழத்தை மில்க் ஷேக் செய்து குடித்தால், நன்கு தூங்கலாம்.

இறைச்சி : இறைச்சிகளில் அதிகமான அளவு ட்ரிப்டோஃபேனுடன் அமினோ ஆசிட் இருப்பதால், தூக்கம் நன்கு வரும். சிலசமயங்களில் இறைச்சியை உண்டப்பின் தூக்கம் வருவது போல் இருக்கும், அதற்கு காரணம் இது தான். ஆகவே இந்த இறைச்சியை இரவில் சாப்பிட்டு தூங்கினால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

சூடான பால் : நமது தாத்தா பாட்டி காலங்களில் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் பாலை குடித்து விட்டு தூங்குவர். இவ்வாறு குடித்து தூங்கினால் நன்கு தூக்கம் வரும் என்று தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏனெனில் பாலில் தூக்கத்தை மூட்டும் பொருளான ட்ரிப்டோஃபேன் இருக்கிறது. ஆகவே இந்த சூடான பாலை குடிக்க உடலில் ஒருவித சோம்பேறித்தனம் ஏற்பட்டு, நன்கு தூக்கம் வரும்.

உருளைக்கிழங்கு : வாழைப்பழத்தை போன்றே உருளைக்கிழங்கிலும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் ஒரு உணவுப் பொருள். இதை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடல் குண்டாவதோடு, ஒரு சோம்பேறித்தனமும் உண்டாகும். ஒரு தட்டு வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை இரவில் சாப்பிடலாம். சொல்லப்போனால், இது ஒரு சிறந்த இரவு நேர ஸ்நாக்ஸ்.

தயிர் : உணவுப் பொருட்களில் நிறைய உணவுகள் தூக்கத்தை மட்டும் தூண்டாமல், உடல் எடையையும் அதிகரிக்கின்றன. அதில் தயிர் மிகவும் சிறந்த தூக்கமூட்டும் உணவுப்பொருள் மற்றும் உடல் எடையை கட்டுப்படுத்தும் உணவுப் பொருளும் கூட. பாலில் என்னென்ன சத்துக்கள் உள்ளதோ, அதே சத்துக்கள் தான் தயிரிலும் இருக்கிறது. ஒரு வித்தியாசம் மட்டும் பாலுக்கும், தயிருக்கும் இருக்கிறது. பாலில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. ஆனால் தயிரில் இல்லை. ஆகவே இதனை தினமும் இரவில் சாப்பிட்டு தூங்கலாம்.

ஓட்ஸ் : படுப்பதற்கு முன் சாப்பிட ஒரு சிறந்த உணவுப்பொருள் ஓட்ஸ். ஏனென்றால் இதில் கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் கால்சியம் உடலுக்கு தேவையான அளவு மட்டும் தூக்கத்தை தரும். மக்னீசியமோ தசைகளை ரிலாக்ஸ் செய்வதற்கான ஒரு சிறந்த நிவாரணி.
எனவே நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டுமென்பவர்கள், மேற்கூறிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் நிம்மதியாக தூங்குவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

அகநானூறு » தோழி கூற்று(4)

நூல் : அகநானூறு_4
பகுப்பு : களிற்றியானை நிரை
பாடல் :  தோழி கூற்று
திணை:  முல்லை
பாடியவர்: குறுங்குடி மருதனார்

"முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,
கருவி வானம் கதழ் உறை சிதறி,
கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன்,
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட்
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே."



குறிப்பு: தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைத்து வாடும் தலைவியை நோக்கி, 'கார்காலம் வந்துவிட்டது தலைவன் விரைவில் வந்து விடுவான்' என்று, பருவ காலத்தைச் சுட்டிக் காட்டி ஆற்றுவிக்கும் தோழி.

விளக்கம்
ஆராய்ந்து தேர்ந்தெடுத்த வளையல்களை அணிந்த அரிவையே, கூர்மையான முனை இருப்பினும், நறுமணத்தால் மட்டுமே மனதை கொல்லும் அரும்புகள் முல்லைக் கொடிகளில் தோன்றிவிட்டன. சத்தம் ஏதுமின்றி தேற்றா மரம், கொன்றை மரம் ஆகியவற்றின் அரும்புகள் மெதுவாக மலரத் தொடங்கிவிட்டன.

மழை பொழிய ஆரம்பித்துவிட்டது, இனிமையான கார்காலம் இது!. இத்தனை நாளாகத் தண்ணீர் இல்லாமல் வருந்திய இந்த உலகத்தின் துயரத்தைப் போக்குவதற்காக, மின்னல் வெட்டுகிறது. மேகமும், இதுவரை சேமித்து வைத்த நீர் தனக்கு போதுமானதாக எண்ணி, மழைத்துளிகளை வேகமாகக் கீழே அனுப்புகிறது.

மழை தொடர்ந்து பெய்வதால், பரல் கற்களை உடைய பள்ளங்களில் எல்லாம் தண்ணீர் நிறைந்து நிற்கிறது. இரும்பை முறுக்கிவிட்டது போன்ற கருப்பான, பெரிய கொம்புகளைக் கொண்ட ஆண் மான்கள் அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு மகிழ்ச்சியாகத் துள்ளுகின்றன. ஒட்டுமொத்தக் காடும் அழகு பெற்றுவிட்டது.

சிறிய மலைகளைக் கொண்ட நகரம் உறையூர். அங்கே மக்கள் ஆரவாரத்துடன் திருவிழா கொண்டாடுகிறார்கள். அந்த உறையூருக்குக் கிழக்கே உள்ள நீண்ட, பெரிய மலையில் காந்தள் அரும்புகள் மலர்கின்றன, மென்மையான உன்னுடைய அழகை காண இந்த பருவக்காலத்தில் அதிக பூக்கள் மலர்ந்துள்ளன. ஆகவே, இந்தக் கார்காலத்தைப் பார்த்தவுடன் உன் காதலன், உன் ஞாபகத்தில் விரைவில் திரும்பி வருவான்.

அவனுடைய தேரில் கட்டபட்டிருக்கும் சிறப்பான பிடரியைக் கொண்ட குதிரைகள், தன் தலைகளை வளைத்து ஆட்டிக்கொண்டே கடிவாளம் நெகிழும்படி அதிவேகமாக ஓடும் சக்தி பெற்றது. அப்படி வேகமாக ஓடி வரும்போது குதிரையின் மணி சத்தம் கேட்கவேண்டுமே? இதுவரை சத்தம் ஏதும் கேட்கவில்லையே என்று பதறாதே!.

உன் காதலன் வருகின்ற வழியில், ஒரு பூஞ்சோலை இருகின்றது, அங்கே யாழின் இசையைப் போல் இனிமையாகச் ரீங்காரமிட்டபடி வண்டுகள் காதல் செய்யும். மென்மையான மனம் கொண்ட உன் காதலன், வண்டின் காதல் சங்கீதத்தை கேட்டவுடன் தேரை நிறுத்திவிடுவான். தன்னுடைய தேரின் மணிச் சத்தத்தைக் கேட்டு அந்த வண்டுகள் பயந்து விலகி விடுமோ என்று எண்ணி, குதிரைகளின் கழுத்தில் உள்ள மணிகளைச் சத்தம் எழாதபடி கழட்டிவிட்டுருப்பான். எனவே! அவன் நமக்கு அருகில் கூட வந்து கொண்டிருக்கலாம். அதனால், கவலைப்படாதே தோழி, அவன் விரைவில் இங்கே வந்துவிடுவான், உன்னுடைய பிரிவுத் துயரம் தீரும்..!!!

Wednesday, 15 August 2012

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 1862ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டது நடப்பு 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியுடன், சென்னை உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 150 வது ஆண்டு தொடக்க விழா கடந்த ஆண்டு நவம்பர் 26ந்-தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் கொண்டாடப்பட்டது

சென்னை உயர் நீதிமன்றம் சாதனை பற்றிய ஒரு தொகுப்பு

(உயர் அறமன்றம்), இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதன் சிறப்பை உயர்த்துவதில் முக்கிய இடமாக விளங்குகின்றது. இந்த உயர்நீதிமன்றம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமென்ற சிறப்புடையது.


உயர் நீதிமன்ற வாளாகத்தில்
உள்ள மனுநீதிச் சோழனின்சிலை.
 வரலாறு

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பாகவே, நீதிமன்றங்களைபிரித்தானிய அரசு இந்தியாவில் நிறுவியது. அப்படி நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்றுதான் சென்னை உயர்நீதி மன்றம். மற்ற இரண்டு நீதிமன்றங்களில் ஒன்று மும்பையிலும் & மற்றொன்று கொல்கத்தாவிலும்நிறுவப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் சூன் 26, 1862, ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்று உயர்நீதிமன்றங்களில் ஒன்றாக (மற்றவை மும்பை,கொல்கத்தா), சென்னை இராஜதானி நகரத்திற்கு விக்டோரியா பேரரசியின் அரசாட்சியில் வழங்கப்பட்ட காப்புரிமையின்படி நிறுவப்பட்டது. இதன் நீதிபரிபாலணை தமிழ்நாடு மற்றும் புதுவையை (பாண்டிச்சேரி) உள்ளடக்கியது.

தொடக்கத்தில், 'சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்' என்றுதான் அழைக்கப்பட்டது. அதன் பிறகு உயர் நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு, 1862- ஆகஸ்ட் 15-ம் நாள் முதல் 'மெட்ராஸ் ஹை கோர்ட்' என்ற பெயர் மாற்றம் பெற்றது. தற்போதைய சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்துக்கு முன் கொய்யா தோப்பு (ஜார்ஜ் டவுன்) என்ற இடத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இயங்கிவந்தது. பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன் உயர் நீதிமன்றத்துக்கு தனிக் கட்டடம் வேண்டும் என்று எழுப்பிய கோரிக்கையை ஏற்று, விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்பே, தற்போதைய உயர் நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட்டது.

1996 ஆம் ஆண்டு மதராசு என்பது சென்னை என்று சட்டப்பூர்வமாக பெயர் மாற்றம் கண்டபொழுது உயர்நீதிமன்றம் அதிலிருந்து விலக்கு பெற்று அதன் பாரம்பரியப் பெருமைக்காக மதராசு உயர்நீதிமன்றம் (Madras High Court) என்றே வழங்கப்படுகின்றது. இதனோடு சேர்ந்து அமைக்கப்பட்ட மூன்று உயர்நீதி மன்றங்களில் மற்ற இரண்டான மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றங்களாக, 1861 உயர்நீதிமன்ற சட்ட வரைவிற்கு முன்பு வரை செயல்பட்டுக்கொண்டிருந்தன.
கட்டுமான அமைப்பு

இதன் கட்டுமானம் இந்தோ-சார்சியனிக் முறையில் 1892 ல் என்றி இர்வின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டது. இதன் கட்டுமானம்செப்டம்பர் 22, 1914 இல் முதல்உலகப்போரின் துவக்கத்தின்போதுசெர்மனின் எசு எம் எசு எம்டன் போர்க்கப்பலின் தாக்குதலினால் சேதமடைந்தது. உயர் நீதிமன்றக் கட்டடத்தை அமைப்பதற்கு அப்போது ஆன செலவு 13 லட்ச ரூபாய். உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாகவும் (உலகின் முதலாவது பெரிய நீதிமன்றமாக இருப்பது லண்டன், பெய்லி நீதிமன்றம்) இந்தியாவில் முதல் பெரிய உயர் நீதிமன்றமாகவும் சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது.

அழகாக வண்ணம் தீட்டப்பட்ட கட்டிடத்தின் கூரைகளும் வண்ணக் கண்ணாடிகள் பொதிந்த கதவுகளும் மிக்க கலைவண்ணத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு மிக உயரமான மாடகோபுரத்தில் கலங்கரை விளக்கு செயல்பட்டு வந்தது. சரியான பராமரிப்பின்றியும் மெரினாக் கடற்கரையில் புதிய கலங்கரை விளக்கு அமைக்கப்பட்டதாலும் தற்போது இது செயல்படாது உள்ளது.

புகழ்பெற்ற வழக்கறிஞர்கள்

1870கு முன் இதன் நீதிபரிபாலணையில் பிரித்தானியர் மட்டுமே வழக்கறிஞராக பங்குபெற முடியும் என்றிருந்த நிலை,பிரித்தானிய முடியாட்சியினரிடமிருந்து வழங்கப்பட்ட ஆணையினால் இந்திய வழக்குரைஞர்களும் பங்கு பெற முடியும் என்ற நிலையை அடைந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிப் பின் நீதிபதியாக உயர்ந்த முத்துச்சாமி ஐயர் வழங்கிய நுட்பமான தீர்ப்புகள் நாடு கடந்தும் புகழ் பெற்றவை. அவருடைய தீர்ப்புகளை லண்டன் பிரிவியூ கவுன்சில் தொடர்ந்து கவனித்துப் பாராட்டி உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள்தான் மற்ற மாநில உயர் நீதிமன்றங்களுக்கு முன் உதாரணமாக உள்ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன்,மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த டி.பிரகாசம், தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம்,சுதந்திர இந்தியாவில் செயல்பட்ட உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி போன்றவர்கள் வழக்கறிஞர்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

முக்கிய வழக்குகள் / குறிப்பிடத்தக்க வழக்குகள்

தந்தை பெரியார் மீது இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு,தடுப்புக் காவல் சட்டத்தை எதிர்த்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நடத்திய வழக்கு,நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காகஅண்ணாதுரை மீது தொடரப்பட்ட வழக்கு,தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்ற தியாகராஜ பாகவதர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன்மீதான லட்சுமிகாந்தன் கொலைவழக்கு ஆகியவை இவ்வுயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற சில முக்கிய வழக்குகளாகும்

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி,இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரேதமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் புதுவைப்பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவருடன் துணை சேர்ந்து 40 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிமுறைமை புரிவர். தலைமை நீதிபதியின் வழிகாட்டுதலின்படி இதன் நீதி நிர்வாகங்களைச் செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

அரசுத் தலைமை வழக்குரைஞர்

அரசுத் தலைமை வழக்குரைஞர் (அட்வகேட் ஜென்ரல்) (அ) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை வழக்குரைஞர் (அ)வழக்குரைஞர் தலைவர் மாநில ஆளுநரால் நியமிக்கப் பெற்றவராவார். இவர் தமிழக அரசு சார்பில் வாதாடுபவர் மற்றும் அரசுக்கு ஆலோசனைகள் வழங்குபவர். இவர் உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்துக்குரியத் தகுதிகளை உடையவர். தமிழகத்தின் தற்பொழுதய தலைமை வழக்குரைஞர் திரு ஏ. நவநீதகிருஷ்ணன். இவருக்கு துணை புரிகின்ற வகையில் இரு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள் செயல்படுகின்றனர்..!!!

நன்றி : புதிய தலைமுறை

நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?

“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை;

1. தன்னம்பிக்கை
2. ஆர்வம்
3. செயல் ஊக்கம்
4. விழிப்புணர்வு
5. புரிந்துகொள்ளல்
6. உடல் நலம்.

இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.

1. தன்னம்பிக்கை (Self Confidence)

என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். “நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது” – என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.

“நினைவாற்றல்” என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!

2.ஆர்வம் (
Interest)

ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.

3. செயல் ஊக்கம் (
Motivation)

இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.

உதாரணத்திற்கு “ஹோட்டல் ரெசிடென்ஸிக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங்கள் மறந்து விடுவீர்களா?

தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விசயங்கள் நன்றாகப் பதிகின்றன.

4. விழிப்புணர்வு (
Awareness)

மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும்.

உங்களுக்குப் பிடித்த எந்த அமைப்பின் மூலமும் இவற்றைக் கற்று முறைப்படி பயிற்சி செய்தால் மனத் தெளிவும், அமைதியும், விழிப் புணர்வும் பெறலாம். வேதாத்திரி மகரிஷி அவர் களின் பயிற்சிகளும், சமர்ப்பண் – வாழும் கலைப் பயிற்சிகளும், ஈசா யோக மையப் பயிற்சிகளும், ஓசோ ரஜினிஷ் பயிற்சிகளும், கிருஷ்ணமாச்சார்ய யோகமந்திரம் (சென்னை) முதலிய அமைப்பு பயிற்சிகள் விஞ்ஞானப்பூர்வமானதாக அற்புத மானவையாக இருக்கின்றன.

5. புரிந்துகொள்ளல் (
Understanding)

புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் – தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்? என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.

6. உடல் ஆரோக்கியம் (
Health)

உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
சத்தான உணவுகளை கொடுப்பதன் மூலம் அனைவருக்கும் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

மூளைச் சோர்வை தடுக்கும்

அன்றாடம் வீட்டு சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிடக் கொடுக்கவேண்டும்.

ஊறவைத்த பாதாம் பருப்பு

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ்,தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும்

அக்ரூட், திராட்சை

அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும்.அதேபோல் வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.

மூளைக்கு சுறுசுறுப்பு

நினைவாற்றல் அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைகளும், பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். திப்பிலியை வல்லாரை சாறில் ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம்.

பசலைக்கீரை 

பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்

நெல்லிக்காய் 

மாணவர்கள் நெல்லிக்காய் தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும்.

Tuesday, 14 August 2012

இந்திய ரூபாய்க்கான சின்னத்தை உருவாக்கிய தமிழ் இளைஞர்!

இந்திய ரூபாய்க்கான சின்னத்தை உருவாக்கிய உதயக்குமார் சென்னையைச் சேர்ந்த தமிழர் ஆவார்.

டாலர், யூரோ, யென் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது. அந்த மதிப்பு மிகுந்த நாணய வரிசையில் தற்போது இந்திய ரூபாயும் சேருகிறது. இந்திய ரூபாய்க்கான தனி சின்னத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

மும்பை ஐஐடியில் படித்தவரான உதயக்குமார் என்பவர்தான் இதற்கான சின்னத்தை வடிவமைத்துள்ளார்.

தண்டையார்பேட்டையில் வசித்து வரும் உதயக்குமார் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை தர்மலிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார்.தாயார் பெயர் ஜெயலட்சுமி. சொந்த ஊர்,விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மரூர் ஆகும். உதயகுமாருக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு.ஓவியத்துக்காக பல பரிசுகள் பெற்று உள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள லீ சாட்லியர் உறைவிட ஜுனியர் கல்லூரியில் பிளஸ்-2 வரை படித்த உதயகுமார், பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஆர்க் பட்டம் பெற்றார். பி.ஆர்க் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றார்.
அதன்பிறகு மும்பை ஐ.ஐ.டி.யில் தொழில் டிசைனிங் பிரிவில் (விஷுவல் கம்யூனிகேஷன்) முதுகலை பட்டம் பெற்றார். அங்கு பி.எச்டி. ஆய்வையும் முடித்து பட்டம் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், தான் வடிவமைத்த அடையாள குறியீட்டை அனுப்பி வைத்தார்.

கடும் போட்டிக்கு மத்தியில் உதயக்குமாரின் டிசைன் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டிசைனைத்தான் நேற்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. அடுத்து உலகம் முழுவதும் இது பரவப் போகிறது.

இந்த பெரும் கெளரவம் குறித்து உதயக்குமார் கூறுகையில், என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. உண்மையில் மெய்சிலிர்த்து போய் இருக்கிறேன்.
ரூபாய்க்கான அடையாள குறியீட்டை இந்திய எழுத்தில் வடிவமைத்து இருந்தேன்.

போட்டியில் நான் வெற்றி பெற இதுவே காரணம் என்று நினைக்கிறேன் என்றார்.
உதயக்குமார் குவஹாத்தி ஐஐடியில் உதவிப் பேராசிரியராக இன்று பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!!!

Monday, 13 August 2012

வல்லாரையின் மகிமை

•வல்லாரை இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசி வர எளிதில் ஆறும்.

•வல்லாரை இலைகளை தொடர்ந்து தின்று வர உடல் உஷ்ணம் நீங்கும்; உடல் வலிமை பெறும்.

•கைப்பிடி வல்லாரை இலையுடன் சம அளவு மணத்தக்காளிக் கீரை சேர்த்து அரைத்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வர இரண்டே வாரத்தில் ரத்த சோகை நோய் தீரும்.

•வல்லாரைப் பொடி (10 கிராம்), அதிமதுரத்தூள் (5 கிராம்) இரண்டையும் கலந்து இரவு தூங்கப்போகும் முன் தின்று வெந்நீர் குடிக்க மலச்சிக்கல் தீரும்.

•வல்லாரையை பால்விட்டு அரைத்து காலை, மாலை சாப்பிட இளமை பெருகும்.

•சம அளவு வல்லாரை, துளசி இலையை எடுத்து பத்து மிளகு சேர்த்து அரைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி காய வைத்து எடுக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்ட நேரத்தில் ஒரு நாள் மூன்று வேளை இரண்டு உருண்டைகள் வீதம் தின்று வெந்நீர் குடிக்க காய்ச்சல் மாறிவிடும்.

•வல்லாரை இலைச் சாறுடன் தேன் கலந்து சிறுவர்களுக்குக் கொடுத்தால் ஞாபகசக்தி, சுறுசுறுப்பு கூடும்.

•வல்லாரை இலைப்பொடியுடன் தேன் சேர்த்து சாப்பிட உடல் இயக்கம் சிறப்பாகும்.

•வல்லாரை இலைகளை துவையலாக அரைத்துச் சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும்; நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

•வல்லாரைக் கீரையை குழம்பாக, கூட்டாகச் செய்து சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியமாகும்; ரத்த விருத்தி ஏற்படும்;கண் எரிச்சல் தீரும்.

ஆ அப்படியா!

மூட்டு வலியா?: மழையும் குளிரும் சேர்ந்துவிட்டால் போதும். பலருக்கு மூட்டுவலி வந்துவிடும். இந்த மூட்டுவலிக்கு சிறிது வினிகரை மூட்டுகளின் மீது தேய்த்து வந்தால், வலி மறைந்துவிடும்.

மூக்கடைப்பா?: மூக்கடைப்புக்கு மட்டுமல்ல; மூக்கு சம்பந்தப்பட்ட பல தொல்லைகளுக்கு மருந்தாக, கொத்துமல்லி கீரையைத் துவையலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வர தொல்லைகள் சீர்படும்.

வாந்தியா?: வாந்தியும் குமட்டலும் உண்டாகிறதா? வெங்காயத்தைத் தோல் உரித்து சிறிது நேரம் முகர வேண்டும். அதையே வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கினால் வாந்தி வருவது "கப்' என்று நின்றுவிடும்.